Published:Updated:

வெர்ஸ்ட்டப்பனா? ஹாமில்ட்டனா?மெக்ஸிகன் கிராண்ட் ப்ரீயில் வெற்றி பெறப்போவது யார்?

மெக்ஸிகோ சிட்டியில் அமைந்திருக்கும் 'ஆட்டோட்ரோமோ ஹெர்மானஸ் ரோட்ரிக்ஸ்' சர்க்யூட்டில் நடைபெறவிருக்கிறது மெக்ஸிகன் கிராண்ட் ப்ரீ.

2021 ஃபார்முலா 1 வெற்றிக் கோப்பையை யார் முத்தமிடப்போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள இன்னும் 5 கிராண்ட் ப்ரீக்களே மீதம் இருக்கின்றன. இந்த 5-ல் முதல் போட்டி மெக்ஸிகோவில் நாளை (இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை (நள்ளிரவு) 12.30 மணிக்குத் தொடங்கவிருக்கிறது) நடைபெறவிருக்கிறது. நாளைய போட்டியில் யார் வெற்றி பெறப்போவது யார்?

டைட்டில் ரேஸில் மேக்ஸ் வெர்ஸ்டப்பனுக்கும் லூயிஸ் ஹாமில்டனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. துருக்கி கிராண்ட் ப்ரீயில் ஹாமில்டனை விட அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறிய வெர்ஸ்டப்பன் அதனைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறார். அதோடு ஹாமில்டனை விட 12 புள்ளிகள் அதிகம் பெற்றும் முன்னிலையில் இருக்கிறார்.

மேக்ஸ் வெர்ஸ்ட்டப்பன்
மேக்ஸ் வெர்ஸ்ட்டப்பன்

மெக்ஸிகோ சிட்டியில் அமைந்திருக்கும் 'ஆட்டோஃட்ரோமோ ஹெர்மானஸ் ரோட்ரிகஸ்' சர்க்யூட்டில் நடைபெறவிருக்கிறது மெக்ஸிகன் கிராண்ட் ப்ரீ. 1992-க்குப் பிறகு 2015-ல் இருந்துதான் இந்த ட்ராக்கில் மீண்டும் கிராண்ட் ப்ரீ போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஃபார்முலா 1-க்கு இந்த ட்ராக் மீண்டும் திரும்பிய பிறகு இதுவரை ஐந்து கிராண்ட ப்ரீ போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. இந்த 5 போட்டிகளில் ஹாமில்ட்டன், வெர்ஸ்ட்டப்பன் இருவரும் தலா இருமுறை வென்றிருக்கிறார்கள். இந்த ட்ராக்கில் மெர்சிடீஸின் கார்களை விட ரெட்புல்லின் கார்களின் பக்கமே வெற்றிவாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

எனவே, ஹாமில்ட்டன் விட வெர்ஸ்டப்பனுக்கே வெற்றி வாய்ப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. மேலும், மெர்சிடீஸூக்கு சாதகமாக ட்ராக் எனக் கூறப்பட்ட 'சர்க்யூட் ஆஃப் தி அமெரிக்காஸ்' ட்ராக்கிலேயே ஹாமில்ட்டனைத் தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறார் வெர்ஸ்ட்ப்பன். அந்த ரேஸில் ரெட் புல்லின் பிட் ஸ்டாப் ஸ்ட்ராடஜிக்கு ஒரு அப்ளாஸ். இந்தப் போட்டியில் வெர்ஸ்ட்டப்பனுக்கான வெற்றி வாய்ப்பு இன்னும் கூடுதலாகவே இருக்கிறது.

ஆனால், மறுமுனையில் ஹாமில்ட்டனோ நூலிழையில் தவறவிட்ட யுஎஸ் கிராண்ட் ப்ரீயை ஈடுகட்டும் விதமாக, மெக்ஸிகன் கிராண்ட் ப்ரீயைத் தன்வசமாக்க வேண்டும் என்ற முனைப்போடு காத்திருக்கிறார். அதோடு 2019-ல் இதே ட்ராக்கில் நடந்த கிராண்ட் ப்ரீயிலும் ஹாமில்ட்டனே வென்றிருக்கிறார். மேலும், இனி வரும் ஒவ்வொரு போட்டியும் ஃபார்முலா 1 டைட்டிலுக்கான ரேஸில் மிகவும் முக்கியம் என்பதால் ஹாமில்ட்டன் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்துவிடமாட்டார். வெர்ஸ்ட்டப்பனுக்கு ஹாமில்ட்டனுக்கும் இடையேயான நாளைய போட்டி அனல் பறக்கும் என்பது நிச்சயம். போட்டியை வெல்வதுடன், போட்டியை முழுமையாக முடிப்பதிலும் இருவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

லூயிஸ் ஹாமில்ட்டன்
லூயிஸ் ஹாமில்ட்டன்

ரெட்புல் ரேஸிங் டீமின் மற்றொரு போட்டியாளரான செர்ஜியோ பெரஸூக்கு இது ஹோம் ரேஸ். இந்த ட்ராக்கில் 2017 மற்றும் 2019 கிராண்ட் ப்ரீ போட்டிகளில் 7-ஆம் இடம் பிடித்திருப்பார் பெரஸ். அதுதான் இந்த ட்ராக்கில் இவருடைய சிறந்த பெர்ஃபாமன்ஸ். ஆனால், அப்போது ஃபோர்ஸ் இந்தியா மற்றும் ரேஸிங் பாயின்ட் டீம்களுக்காக மெர்சிடீஸ் இன்ஜினுடன் போட்டியிட்டிருப்பார். தற்போது தன்னுடைய ஹோம் ரேஸில் ரெட்புல்லின் ஹோண்டா இன்ஜினுடன் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும், கடந்த சில போட்டிகளாக பெரஸின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. துருக்கி மற்றும் அமெரிக்காவில் நடந்த இரு போட்டிகளிலுமே தொடர்ந்து இருமுறை மூன்றாம் இடம் பிடித்திருக்கிறார் பெரஸ். இந்த முறை ரெட்புல்லுக்கு சாதமாகவும் ட்ராக் இருப்பதால் தன்னுடைய ஹோம் ரேஸில் குறைந்தபட்சம் போடியம் ஏற வேண்டும் , அதிகபட்சம் வெற்றியைத் தன்வசமாக வேண்டும் என்கிற முனைப்பு பெரஸிடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

USGP: டைட்டில் ரேஸில் பின்தங்கிய ஹாமில்ட்டன்... சீறிப்பாயும் வெர்ஸ்டப்பன் வென்றது எப்படி?!
செர்ஜியோ பெரஸ்
செர்ஜியோ பெரஸ்

இந்த ட்ராக்கில் 2015-க்குப் பிறகு நடைபெற்ற 5 போட்டிகளில் 3 முறை போடியமும் ஒருமுறை 4-ம் இடமும் பெற்றிருக்கிறார் செபாஸ்டியன் வெட்டல். கடைசியாக 2019-ல் ஃபெராரிக்காக போட்டியிட்டிருந்தார். ஆனால், நடப்பு சீஸனில் ஆஸ்டன் மார்டினில் அவருடைய செயல்பாடுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. தற்போது ஃபெராரி டீமில் போட்டியிட்டு வரும் கார்லோஸ் சைன்ஸ் ஆறு இடங்களுக்குள் முடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. நடப்புத் தொடரில் எட்டு முறை முதல் ஆறு இடங்களுக்குள் போட்டியை முடித்திருக்கிறார் சைன்ஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு