Published:Updated:

மேக்னஸ் கார்ல்ஸன் அவுட்... உலக சாம்பியனை வீழ்த்தினார் வெஸ்லி ஸோ! #fischerChess

உலகின் மிகச் சிறந்த செஸ் வீரராக வர்ணிக்கப்பட்ட மேக்னஸ் கார்ல்ஸன் தோற்றிருக்கிறார் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால், அது நடந்திருக்கிறது. அதை நடத்திக்காட்டியிருக்கிறார் ஸோ. இந்த வெற்றி வெறும் சாம்பியன் என்ற பட்டத்தை மட்டும் கொடுத்துவிடவில்லை..!

Carlsen and So
Carlsen and So ( AP )

நடப்பு உலக செஸ் சாம்பியன், உலகின் நம்பர் ஒன் செஸ் ப்ளேயர், மொசார்ட் ஆஃப் செஸ் எனப்படும் மேக்னஸ் கார்ல்ஸனை வீழ்த்தி, 'பிஷ்ஷர் ரேண்டம் செஸ் 2019' சாம்பியன் ஆகியிருக்கிறார் வெஸ்லி ஸோ.

வெஸ்லி ஸோ, பிலிப்பைன்ஸைச் சேர்ந்தவர். 2014-ல் இருந்து அமெரிக்காவின் சார்பாக செஸ் விளையாடிவருகிறார். செஸ் தரவரிசையில் 10-ம் இடம் வகிக்கிறார். இவரும் கார்லஸனும் மோதிய இந்த ஃபைனல், ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஃபிஷ்ஷர் செஸ்... முதல் தரவரிசையில் உள்ள செஸ் காயின்களை ரேண்டம் ஆர்டரில் கலைத்து வித்தியாசமான ஓப்பனிங் முறையில் ஆடுவது. கிளாசிக் செஸ் போட்டிகளைப்போல் முதல்தரவரிசை காயின்கள் இல்லாமல் இருப்பது ஒன்றே இதில் வேறுபடும். மற்றபடி விதிமுறைகள் அனைத்தும் ஃபிஷ்ஷர் செஸ்ஸிலும் ஒன்றுதான். இந்த வித்தியாசமான ஆட்டத்தை கிராண்ட் மாஸ்டர் பாபி ஃபிஷ்ஷர் கண்டுபிடித்தார்.

இந்த ஃபைனல், மூன்று நாள்கள் 12 சுற்றுகள் உள்ளடக்கியது. முதல் நாள், இரண்டு ஸ்லோ ரேபிட் கேமும் இரண்டாவது நாள் இரண்டு ஸ்லோ ரேபிட் கேமும் நடக்கும். மூன்றாம் நாள் 4 ஃபாஸ்ட் ரேபிட், 4 பிலிட்ஸ். ஸ்லோ ரேபிட் கேம் 45 நிமிடம் (முதல் 40 நகர்வுக்கு) + 15 நிமிடமும் (40 நகர்வுக்குப் பிறகு), ஃபாஸ்ட் ரேபிட் 15 நிமிடம் + 2 செகண்டு‌ இன்க்ரீமென்ட்டிலும், பிலிட்ஸ் கேம் 3 நிமிடம் + 2 செகண்டு இன்க்ரீமென்ட்டிலும் நடக்கும். ஸ்லோ ரேபிட்டுக்கு 3 புள்ளிகள், ஃபாஸ்ட் ரேபிட் போட்டிகளுக்கு 2 புள்ளிகள், பிலிட்ஸுக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்.

ஸ்லோ ரேபிட்டின் முதல் ஆட்டத்தில், கார்ல்ஸனிடம் சிப்பாய் கூடுதலாக இருந்தாலும், மற்ற காயின்களைச் சரியாக எக்ஸ்சேஞ்ச் செய்து டிரா செய்தார் ஸோ. முதல் கேமில் பணிந்து போன ஸோ, இரண்டாவது கேமில் துணிந்து ஆடி கார்ல்ஸனுக்கு அழுத்தம் கொடுத்தார். ஸோவின் அட்டாக்கிங் ஆட்டத்துக்கு ஈடாக காய் நகர்த்திய கார்ல்ஸன், 35-வது நகர்வில் செய்த தவறால், ஸோ வைத்த செக்கில் நைட்டை இழந்தார். ஸோவின் அட்டாக்கில் சிக்கிய கார்ல்ஸன், 72 -வது நகர்த்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

Wesley So
Wesley So

ஸோ, தன் வாழ்நாளில் முதல் முறையாக கார்ல்ஸனை வீழ்த்தி யிருக்கிறார். இதற்கு முன் எட்டு ஆட்டங்களில் இரண்டில் கார்ல்ஸன் வென்றிருந்தார். 6 போட்டிகள் டிரா ஆகியிருந்தன. அடுத்த நாள் நடந்த இரண்டு ஸ்லோ ரேபிட் கேம்களிலும் ஸோவின் ஆதிக்கம் தெரிந்தது. கார்ல்ஸன் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த, ஆட்டத்தின் போக்கு மாறியது. அதுவரை கமென்ட்ரியில் கார்ல்ஸனைப் புகழ்ந்தவர்கள், 'உலகிற்கு புதிய சாம்பியன் கிடைக்கப்போகிறார் என்ற அறிகுறி தெரிகிறது' என்றார்கள். ஸோ-வின் பக்கம் கவனம் செலுத்தினர். மூன்றாவது கேமில் மீண்டும் ஸோ வெற்றிபெற, பொறுமையிழந்த கார்ல்ஸன் செய்வதறியாது நின்றார். 'மொஸார்ட் ஆஃப் செஸ்ஸு'க்கு தொடர்ந்து தோல்விகள் மட்டுமே கிடைத்தன.

ஃபிஷ்ஷர் செஸ்... மகுடம் சூடுவாரா மேக்னஸ் கார்ல்ஸன்?!

நான்காவது ஆட்டத்தில், 'ஆல்ஃபா- ஜீரோ' ஓப்பனிங் முறையைக் கையிலெடுத்தார்‌ கார்ல்ஸன். கணினிகள் மட்டுமே இந்த முறையில் விளையாடும். இவை எதற்கும் பயப்படாமல், ஸோ தன் காயின்களை சென்டர் பொசிஷனில் நிறுத்தி கேமை கைக்குள் கொண்டுவந்தார். கார்ல்ஸனுக்குத் தொடர்ந்து மூன்று தோல்விகள் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கார்ல்ஸனின் ரசிகர்களுக்கு ஸோ-வின் சிறப்பான ஆட்டம் அதிர்ச்சி தந்தது.

Magnus Carlsen
Magnus Carlsen
AP

மூன்றாவது நாள் ஆட்டம்... நான்கு ஸ்லோ ரேபிட், நான்கு ஃபிலிட்ஸ் கேம் இதில் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றால் மட்டுமே கார்ல்ஸன் மீண்டும் சாம்பியனாக வாய்ப்பு உள்ளது. ஆனால், ஸோ ஒரு போட்டியில் ஜெயித்தாலே போதும். இப்படி இருக்கையில் மற்றவர்களாக இருந்தால் சாம்பியனாகி விடுவேன் என்ற‌‌ சந்தோஷம் அப்போதே ஏற்பட்டிருக்கும். ஆனால் ''எதிரில் இருப்பது கார்ல்ஸன், எது வேண்டுமானாலும் நடக்கலாம், பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்'' என்று ஸோ சொன்னது, கார்ல்ஸன் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. எல்லா கேமிலும் ஜெயித்து மகுடம் சூடுவாரா என்று ஆவலாக எதிர்பார்த்தார்கள் செஸ் ரசிகர்கள். ஆனால் ஐந்தாவது கேம் டிரா ஆக, ஆறாவது கேமில் ஜெயித்து வரலாற்றில் இடம்பிடித்தார் ஸோ!

உலகின் மிகச் சிறந்த செஸ் வீரராக வர்ணிக்கப்பட்ட கார்ல்ஸன் தோற்றிருக்கிறார் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால், அது நடந்திருக்கிறது. அதை நடத்திக்காட்டியிருக்கிறார் ஸோ. இந்த வெற்றி வெறும் சாம்பியன் என்ற பட்டத்தை மட்டும் கொடுத்துவிடவில்லை. அவர் மீதான நம்பிக்கையை, எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. உலக அரங்கில் அவரது பெயரை அழுத்தமாகப் பதித்திருக்கிறது!

Vikatan