2020-21-ம் ஆண்டு சையத் முஸ்தாக் அலி தொடரின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்த வீரர் விஷ்ணு சோலன்கி. பரோடா அணியைச் சேர்ந்த இவர் ஹரியானா அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தின் கடைசி 3 பந்துகளில் 16 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் இந்தாண்டு ரஞ்சி தொடரில் பங்கேற்பதற்கு கடந்த பிப்ரவரி 11 அன்று தன் அணியினருடன் பயோ-பபுளில் இருந்த அவருக்கு மகள் பிறந்திருப்பதாக வீட்டில் இருந்து இனிய செய்தி வந்து சேர்ந்தது.

ஆனால், சோலன்கியின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடித்திருக்கவில்லை. அதற்கடுத்த நாள் நள்ளிரவே தன் மகள் இறந்துவிட்டதாக எதிர்ப்பாராத செய்து வர மனமுடைந்து போனார். தன் குடும்பத்தினரை சந்திக்க மறுநாளே விரைந்த சோலன்கியால் பிப்ரவரி 16 முதல் 19 நடைபெற்ற முதல் ரஞ்சி ஆட்டத்தில் விளையாட முடியவில்லை. இதையடுத்து பெங்கால் அணிக்கெதிரான இரண்டாவது போட்டியில் பங்கேற்க பிப்ரவரி 17 அன்று கட்டாக்கில் உள்ள தன் அணியினருடன் இணைந்து கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தன் அனைத்து வலிகளையும் ஆற்றலாக மாற்றி பேட்டிங்கில் காட்டிய சோலன்கி அப்போட்டியின் இரண்டாம் நாளில் அட்டகாசமான சதம் ஒன்றை விளாசி அந்த இன்னிங்ஸை தன் மகளுக்காக அர்ப்பணித்தார் . ஆனால் தன் மகளின் இழப்பில் இருந்து மீள்வதற்குள்ளேயே மற்றுமொரு பேரதிர்ச்சியை அவர் சந்திக்க வேண்டி இருந்தது. அந்த ஆட்டத்தின் கடைசி நாளில் தொடங்குவதற்கு முன்பாக அவரின் தந்தையும் இறந்துவிட்டதாக செய்தி வந்தது.
இதையடுத்து களத்தை விட்டு உடனடியாக வெளியேறினார் சோலன்கி. ட்ரெஸ்ஸிங் ரூமில் மொபைல் பயன்படுத்த போட்டி நடுவரின் அனுமதி கிடைத்தவுடன் தந்தையின் இறுதிச்சடங்கில் வீடியோ கால் மூலமே பங்கேற்றார் . குடும்பத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு இழப்புகளை சந்தித்த சோலன்கியை வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தியது பரோடா அணி நிர்வாகம். ஆனால் அதை மறுத்துள்ள அவர் மார்ச் 3-ம் தேதி தொடங்கும் ஹைதராபாத் அணிக்கெதிரான கடைசி லீக் ஆட்டத்தில் பங்கேற்க அணியுடனே தங்கி தயாராகிவருகிறார்.