Published:Updated:

ரஹானேவா... ஸ்ரேயாஸா... கேப்டன் கோலி சொல்வதென்ன?

Virat Kohli

தற்போது ஷ்ரேயாஸுக்கு சிறப்பான தொடக்கம் அமைந்துள்ளதால் மிடில் ஆர்டருக்கான போட்டி மேலும் அதிகரித்திருக்கிறது.

ரஹானேவா... ஸ்ரேயாஸா... கேப்டன் கோலி சொல்வதென்ன?

தற்போது ஷ்ரேயாஸுக்கு சிறப்பான தொடக்கம் அமைந்துள்ளதால் மிடில் ஆர்டருக்கான போட்டி மேலும் அதிகரித்திருக்கிறது.

Published:Updated:
Virat Kohli

நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் சொந்தமண்ணில் தொடர்ந்து 14-வது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது இந்தியா. சொந்த மண்ணோ அந்நிய நாடோ சமீப காலங்களில் உலக டெஸ்ட் அரங்கை மொத்தமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது விராட் தலைமயிலான இந்திய அணி. வேகப்பந்துவீச்சாளர்களின் அசுர வளர்ச்சி, உலகின் சிறந்த பேட்டர்கள் அசைத்து பார்த்துவிடும் ஸ்பின்னர் கூட்டணி என நிறைகள் இருப்பினும் குறைகளும் இல்லாமல் இல்லை.

Indian Cricket team
Indian Cricket team
Rajanish Kakade

அதில் மிக முக்கியமாக பார்க்கப்படுவது சீனியர் பேட்டர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோரின் கவலையளிக்கும் ஃபார்ம். முந்தைய காலங்களில் சிறந்த பங்களிப்பால் அணியின் வெற்றிக்கு பலமுறை உதவி இருந்தாலும் தற்போது இளம் வீரர்களின் படையெடுப்பால் இவர்களின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அதிலும் ரஹானே கடந்த 16 டெஸ்ட் போட்டிகளில் சராசரியாக 24 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்தியாவில் 35 லிருந்த அவரது சராசரி தற்போது 30 ரன்களுக்கு குறைந்துள்ளது.

கான்பூர் டெஸ்டில் ஷ்ரேயாஸ் சதம் அடித்தபோதே ரஹானேவின் பக்கம் திரும்பினார்கள் இந்திய ரசிகர்கள். இரண்டாவது போட்டியில் கோலியின் வருகையால் மயங்க் வெளியே உட்கார வைக்கப்படுவார் என்ற நிலையே முதலில் இருந்தது. ஆனால் காயம் காரணமாக ரஹானேவுக்கு பதில் மயங்கிற்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் முதல் இன்னிங்ஸில் சதம் இரண்டாவதில் அரை சதம் என தன் இடத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டுள்ளார்.

Virat Kohli and Ajinkya Rahane
Virat Kohli and Ajinkya Rahane

இம்மாதம் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் விளையாடவுள்ளது. இத்தொடரில் ரஹானே சேர்க்கப்படுவாரா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ள நிலையில் இது குறித்து மனம் திறந்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் வெற்றிக்குப் பிறகு பத்திரிக்கையாளர்களை கோலி ரஹானேவின் திறனை அளவிட தனக்கு மட்டுமல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று கூறினார். மேலும் “ இங்கு ஒரு தனி நபரின் திறனை முன்கூட்டியே முடிவே செய்ய யாருக்கும் உரிமை இல்லை. இந்திய அணியைப் பொறுத்தவரை முக்கிய போட்டிகளிலும் கடினமான தருணங்களிலும் சிறப்பாக பங்காற்றிய வீரர்களுக்கு எங்களின் முழு ஆதரவு என்றைக்கும் உண்டு. அடுத்த போட்டியில் தாங்கள் விளையாடுவோமா என்ற ஐயம் வீரர்களின் மனதில் எழுந்ததால் அது அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு ஆரோக்கியமானதல்ல.

வெளியிருந்து வரும் விமர்சனங்களுக்கு நாங்கள் ஒருநாளும் செவி சாய்ப்பதில்லை. அவை அணித் தேர்வை நிச்சயம் பாதிக்காது. ஒவ்வொரு வீரரும் எந்தளவு கடின உழைப்பால் அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். அணியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அனைத்தும் தலைமை பயிற்சியாளர் டிராவிட் மற்றும் அணி தேர்வாளர்கள் உடனான தீவிர ஆலோசனைக்கு பிறகே எடுக்கப்படும். அது அணியின் நலனுக்காக போடப்படும் திட்டங்களை செயல்படுத்துவதற்கே” என்று கூறியுள்ளார்.

சுப்மன் கில்லை மிடில் ஆர்டரில் முயற்சித்துப் பார்க்கலாம் என்ற அணி நிர்வாகத்திற்கு முன்னரே திட்டம் இருந்தது. ஆனால் கே.எல்.ராகுலின் காயத்தால் அதை இன்னும் செயல்படுத்த முடியவில்லை. தற்போது ஷ்ரேயாஸுக்கு சிறப்பான தொடக்கம் அமைந்துள்ளதால் மிடில் ஆர்டருக்கான போட்டி இன்னும் அதிகரித்துள்ளது.

இந்த மிடில் ஆர்டருக்கான ரேஸில் நிரந்தர இடத்தை பிடிக்கப்போவது யார்....