Published:Updated:

`சச்சினுக்கு உத்வேகம் கொடுத்த மட்டா ராம்!' -மாற்றுத் திறனாளி சிறுவனால் நெகிழும் மாவோயிஸ்ட் கிராமம்

மட்டா ராம்
மட்டா ராம்

போலியோ பாதிப்பினால் சிறுவயதிலேயே மட்டா ராம் தன்னுடைய கால்களை இழந்தார். ஆனால், அவருடைய கிரிக்கெட் விளையாடும் ஆர்வத்தை அப்பகுதி மக்கள் அனைவரும் அறிவர்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவரின் வீடியோவைப் பகிர்ந்திருந்தார். ``தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் மட்டா ராமின் உத்வேகம் தரும் இந்த வீடியோவுடன் உங்கள் 2020-ஐ தொடங்குங்கள். என்னுடைய இதயத்தை இது உத்வேகப்படுத்தியது. உங்களையும் உத்வேகப்படுத்தும் என நம்புகிறேன்” என்ற கேப்ஷனையும் பதிவிட்டிருந்தார்.

சச்சினின் பதிவால் நெகிழ்ந்த பலரும், `மட்டா ராம் யார்?' என சமூக வலைதளங்களில் தேடத்தொடங்கினர்.

சத்தீஸ்கர் மாநிலம், தந்தேவாடா மாவட்டத்தில் கட்டேகல்யன் எனும் கிராமம் உள்ளது. மாவோயிஸ்ட் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக தந்தேவாடா அறியப்படுகிறது. இன்று பல கிரிக்கெட்டர்களுக்கு முன்உதாரணமாக மாறியிருக்கும் மட்டா ராம் இந்தக் கிராமத்தில்தான் வசித்து வருகிறார்.

இவர், அப்பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். போலியோ பாதிப்பினால் சிறுவயதிலேயே மட்டா ராம் தன்னுடைய கால்களை இழந்தார். ஆனால், தொடர்ந்து தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறார். அவருடைய கிரிக்கெட் விளையாடும் ஆர்வத்தை அப்பகுதி மக்கள் அனைவரும் அறிவர் என்கின்றனர்.

``நான் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். அவருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய கிராமத்துக்கு சச்சின் வர வேண்டும் என்றும் அழைக்கிறேன்” என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், ``கோஸா, ராஜா மற்றும் சில நண்பர்கள்தான் கிரிக்கெட் விளையாட என்னை ஊக்குவிக்கிறார்கள். நான் மருத்துவராக விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். மட்டா ராமின் நண்பரான கோலு என்ற சிறுவன்தான் தன்னுடைய அப்பா செல்போனில் இந்த வீடியோவை படம்பிடித்துள்ளார்.

மட்டா ராம்
மட்டா ராம்
twitter

மட்டா ராமின் இந்தச் செய்தியை கேள்விப்பட்டு அவர் படிக்கும் பள்ளிக்குச் சென்ற அப்பகுதியின் கல்வி அதிகாரி கோபால் பாண்டே, ``நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது” என நெகிழ்ந்து பேசியுள்ளார். மட்டா மற்றும் அவரது நண்பர்களுக்கு கிரிக்கெட் கிட் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். மட்டா கடினமான உழைக்கக்கூடிய மாணவன், மிகவும் திறமைசாலி என்று ஆசிரியர்களும் அப்பகுதி மக்களும் கூறுகின்றனர்.

மாவட்ட ஆட்சியரின் டோபேஷ்வர் வர்மாவின் கவனத்துக்கும் இந்த விஷயம் சென்றுள்ளது. இதுதொடர்பாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் அவர் பேசுகையில், ``இந்தக் குழந்தை அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியவனாக இருக்கிறான். அவருடைய அறிவை மேம்படுத்துவதற்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்ய முயற்சிகள் எடுக்கப்படும்” என்றார். நெட்டிசன்களும் கிரிக்கெட் ஆர்வலர்களுடம் மட்டா ராமைக் கொண்டாடி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு