Published:Updated:

``ரியோவில் மிஸ் ஆனது டோக்கியோவில் கிடைக்கும்!" - வினேஷ் போகத் #Wrestling

தங்கல் படத்தில் வரும் கீதா போகத், பபிதா போகத் ஆகியோரின் சித்தப்பா மகள்தான் வினேஷ் போகத். சிறு வயதில் இவருக்குப் பயிற்சியளித்ததும் மஹாவீர் சிங் போகத்தான்!

Vinesh Phogat
Vinesh Phogat ( AP )

கஜகிஸ்தானின் அஸ்தானாவில் சமீபத்தில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், வெண்கலப்பதக்கம் வென்றார் வினேஷ் போகத். இதன் மூலம் அவர் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில், பங்கேற்கும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

இரண்டாவது தகுதிச்சுற்றில், வினேஷ் போகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் சாரா அண்கில்டி பிராண்ட் உடன் மோதினார். வினேஷ் ஏற்கெனவே காலுக்கு சிகிச்சை எடுத்தவர் என்பதை அறிந்து ஐந்து முறை சாரா, வினேஷின் கால்களைப் பிடித்து வலுவிழக்கச்செய்ய முயன்றார். வினேஷ் மனம் தளரவில்லை. தன் முழு சக்தியைப் பயன்படுத்தி ஒவ்வொரு முறையும் மீண்டு வந்து 8-2 வென்று அசத்தினார்.

Vinesh Phogat
Vinesh Phogat
AP

பின்பு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், மரியா பிரிவோ லாரேகி, வினேஷைவிட ஒரு புள்ளி முன்னிலையில் இருந்தார். மனம் தளராமல் தனக்கான நேரத்துக்காக காத்திருந்தார். அந்தச் சுற்று முடிய 75 விநாடிகள் மட்டுமே இருந்த நிலையில் வினேஷின் வியூகத்தில் வீழ்ந்தார் கிரீஸ் நாட்டு வீராங்கனை மரியா. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தன் முதல் பதக்கத்தை வென்றார் வினேஷ்! அதுமட்டுமல்லாமல், டோக்கியோ ஒலிம்பிக்குக்கும் தகுதி பெற்றார். ஆனால், இந்த வெற்றிப் பயணம் அவருக்கு எளிதாக இருந்திடவில்லை.

2016 ரியோ ஒலிம்பிக்கின்போது இந்தியாவைச் சேர்ந்த 21 வயது வீராங்கனை வினேஷ் போகத் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது . எதிர்பாராதவிதமாக அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது. உடல் வலி அதிகம் இருந்தாலும், போட்டியைத் தொடர முடியவில்லையே என்ற மன வலி அவரை மிகவும் வாட்டியது. அந்த வலி அவருள் உரமாகி இன்று விருட்சமாய் மாறி, உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிக் கனியைக் கொடுத்துள்ளது.

50 கிலோ எடைப்பிரிவில் முடிசூடா அரசியாக விளங்கிய வினேஷ், 53 கிலோ பிரிவுக்கு மாற வேண்டிய சூழ்நிலை. முதலில் தயக்கம் காட்டினாலும் நம்பிக்கையோடு அடுத்த அடியை எடுத்து வைத்தார். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த தன் பயிற்சியாளர் உல்லர் அஹோஸின் வழிகாட்டுதல் அவருக்குப் பெரும் உதவியாக இருந்தது.

Vinesh Phogat
Vinesh Phogat
AP

``கடந்த ஐந்து ஆண்டுகளாக விடாமுயற்சி செய்து வருகிறேன். இப்போது பதக்கம் வென்றுள்ளேன். ரியோ ஒலிம்பிக்கில் விட்டதை டோக்கியோவில் அடைவேன். வெண்கலத்தை தங்கமாக மாற்றுவேன்" என்று கூறும் வினேஷ், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றாக வேண்டும் என்பதற்காக, உல்லர் அகோசிடம் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார்.

``ஜூலை மாத வெயில் காலத்தில் லக்னோவில் மல்யுத்தம் செய்யும் மேட் நெருப்பில் இருப்பதுபோல் சூடாக இருக்கும். வியர்வையால் எதிராளியைப் பிடித்து விளையாடுவது மிக சிரமமாக இருந்தது. வெயில் உயிரை வாங்கியது. மற்றவர்கள் அந்த சமயத்தில் பயிற்சியைவிட்டு வெளியேறிவிட்டனர். நான் மட்டும் பயிற்சியைத் தொடர்ந்தேன்" என்று பயிற்சியின் கடினங்களைப் பற்றிச் சொல்கிறார் வினேஷ்.

Vinesh Phogat
Vinesh Phogat
AP

``இந்த வருடம் உடல் நலக்குறைவால் ஐந்து ஆறு பயிற்சி முகாம்களைத் தவிர்த்திருக்கிறேன். அப்படிப் பயிற்சியைத் தவிர்ப்பது மிகப்பெரிய குற்றம் செய்வது போல தோன்றும். 5 மணிக்கு பயிற்சி என்றால், இந்தியர்கள் 5.15 மணிக்குச் செல்வோம். ஆனால், இது என் கோச் உல்லரிடம் செல்லுபடியாகாது. 5 மணி பயிற்சிக்கு 4.50-க்கு அங்கு இருக்க வேண்டும். 15 நாளுக்கு ஒரு முறை பயிற்சியின் தன்மையும் மாறிக்கொண்டே இருக்கும்.

`வெற்றியோ, தோல்வியோ தொடர்ந்து செயல்பாடு. எதுவும் தற்காலிகம்தான்' என்பதுதான் என் பயிற்சியாளரின் அறிவுரை" என்கிறார் வினேஷ்.

ஒலிம்பிக்கை நோக்கி பயணிக்கும் வினேஷுக்குப் பயணங்கள் என்றாலே ஒவ்வாமை. சிறு பயணத்தையும் அவர் உடல் ஏற்றுக்கொள்ளாது. இதை உணர்ந்த பயிற்சியாளர் அவருக்கு பயணப்பயிற்சியும் அளித்து வருகிறார்.

``என் சொந்த ஊரில் இருந்து லக்னோவுக்கு செல்வதுகூட எனக்கு அலுப்பைத் தருகிறது. பிற நாடுகளுக்குச் செல்லும்போது அந்நாட்டு சூழ்நிலை, உணவு, தூக்கம், தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப மாறுவது சிரமமாக உள்ளது. இதையெல்லாம் மீறிதான் சாதிக்க வேண்டும்" என்றார் வினேஷ்.

Vinesh Phogat
Vinesh Phogat
AP

பொதுவாக, வினேஷ் சிறிய விஷயத்துக்கும் எளிதில் உணர்ச்சிவசப்படுவார். அது அவரது விளையாட்டு வாழ்க்கைக்கு சிக்கலாக அமையும் என்று பலர் சொன்னாலும், அதைக் கட்டுக்குள் வைத்து பதக்கத்தில் மட்டும் குறியாக இருக்கிறார்.

தங்கல் படத்தில் வரும் கீதா போகத், பாபிதா போகத் ஆகியோரின் சித்தப்பா மகள்தான் வினேஷ் போகத். சிறு வயதில் இவருக்குப் பயிற்சியளித்ததும் மஹாவீர் சிங் போகத்தான்!

``ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு, உலக சாம்பியன்ஷிப் பட்டம் கனவுடன் பல நாடுகளில் இருந்தும் வீராங்கனைகள் கஜகஸ்தான் வந்திருந்தனர். எல்லோருமே திறமையானவர்கள் என்பதால், பதக்கம் வெல்வது பெரும் சவாலாக இருந்தது. எனினும், இந்தத் தெடாரில் வெண்கலம் வென்றுள்ளேன். டோக்கியோ ஒலிம்பிக்கில் இதை தங்கமாக மாற்றுவேன்" என்றார் வினேஷ்.

கனவு பலிக்கட்டும்!