Published:Updated:

ஷகிப் இல்லாத வங்கதேச கிரிக்கெட், ஃபார்முலா 1 கோப்பையை நெருங்கும் ஹாமில்ட்டன்! #VikatanSportsRoundUp

ஸ்போர்ட்ஸ் லவர்ஸுக்கான புதிய கார்னர்... இது விகடன் விளையாட்டு அப்டேட்ஸ். கிரிக்கெட் தொடங்கி ரக்பி வரை இந்த வாரம் நடந்த சுவாரஸ்யமான முக்கிய விளையாட்டுச் செய்திகளின் ரவுண்ட்-அப் இங்கே... #VikatanSportsRoundUp 

1
2019 Rugby semi-finals ( AP )

ரக்பி :  இங்கிலாந்து கம்-பேக்

2019-ம் ஆண்டு, ஒவ்வொரு விளையாட்டிலும் இங்கிலாந்து கம்-பேக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்து கோப்பையை உச்சி முகர்ந்த கையோடு இப்போது ரக்பி உலகக்கோப்பை ஃபைனலுக்குள்ளும் நுழைந்திருக்கிறது.

கிரிக்கெட் ஃபைனலில் வீழ்த்திய அதே எதிரணியை ரக்பி களத்தின் அரையிறுதியில் வென்றிருக்கிறது இங்கிலாந்து! ஜப்பானில் நடைபெற்று வரும் ரக்பி உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில், இரண்டு முறை தொடர்ந்து உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை தக்க வைத்திருந்த நியூசிலாந்து அணியை 7-19 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரக்பி உலகக்கோப்பை ஃபைனலுக்கு தேர்ச்சி பெற்றிருக்கும் இங்கிலாந்து, இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா மோதிய 2007 ரக்பி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், 15-6 புள்ளிக்கணக்கில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.
2
Glenn Maxwell ( AP )

``கிரிக்கெட்டுக்கு தற்காலிக ஓய்வு" - கிளென் மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, டி-20 தொடரில் விளையாடியது. 3-0 என ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், இரண்டாவது போட்டி முடிந்திருந்தபோது, அதிரடி ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தொடரிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. மன அழுத்தப் பிரச்னையால் ஓய்வு எடுக்க இருக்கும் மேக்ஸ்வெல், அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் தற்காலிகமாக ஓய்வெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம்; தற்காலிக விடுப்பு! - இலங்கைத் தொடரிலிருந்து மேக்ஸ்வெல் `திடீர்' விலகல்
3
Lewis Hamilton ( AP )

ஃபார்முலா 1 சாம்பியன்ஷிப்புக்கு வெயிட்டிங்!

மெக்ஸிகோ கிராண்ட் ப்ரீ கார் பந்தயத்தில், மெர்ஸிடஸ் அணி வீரர் லூயிஸ் ஹாமில்ட்டன் சாம்பியன் பட்டம் வென்றார். தொடக்கத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த லூயிஸ், போட்டி முடிவில் முதல் இடத்துக்கு சீறிப்பாய்ந்தார். 1 மணி 36 நிமிடம் 48.904 விநாடிகளில் 71 சுற்றுகளைக் கடந்து முதல் இடம் பிடித்தார். இரண்டாவது இடத்தை ஃபெராரியின் செபாஸ்டியன் வெட்டலும், மூன்றாவது இடத்தை மெர்ஸிடஸின் போட்டாஸும் கைப்பற்றினர்.

இந்த ஃபார்முலா 1 சீசனின் 10-வது ரேஸை வென்றிருந்தாலும், ஃபார்முலா 1 உலக சாம்பியன்ஷிப்பை வெல்ல ஹாமில்ட்டனுக்கு இன்னும் 4 புள்ளிகள் தேவைப்படுகிறது.

4
Shakib al Hasan ( AP )

ஷகிப் இல்லாத வங்கதேச கிரிக்கெட்

சூதாட்டத் தரகர்கள் தொடர்புகொண்டதைப் பற்றி தெரிவிக்காததால் அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஷகிபுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்திருக்கிறது ஐசிசி.

இந்த நிலையில், இந்தியாவில் விளையாட இருக்கும் வங்கதேச அணியின் டெஸ்ட் கேப்டனாக மோமினுல் ஹக், டி-20 கேப்டனாக மஹமதுல்லா நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஷகிப் ஹசனுக்கு ஏன் இந்தத் தண்டனை... வங்கதேச கிரிக்கெட்டும் கிரிக்கெட் அரசியலும்! #Shakib
5
Delhi Pollution ( AP )

முதல் டி-20 `சிக்கல்'

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் வங்கதேச கிரிக்கெட் அணி, டி-20, டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. நவம்பர் 3-ம் தேதி தொடங்கும் முதல் டி-20 போட்டி, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆனால், டெல்லியில் நிலவும் மாசுக் கட்டுப்பாட்டு பிரச்னை காரணமாக போட்டி நடைபெறும் இடத்தை மாற்றி அமைக்குமாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதை ஆதரித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய எம்.பி-யுமான கவுதம் கம்பீர், கிரிக்கெட் வீரர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்பதால் போட்டி மைதானத்தை மாற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார்.

ஆனால், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி திட்டமிட்டபடி டெல்லி மைதானத்தில்தான் நடைபெறும் என பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

`பகலிரவு டெஸ்ட்; முதல் டி20 சிக்கல்; ஷகிப்புக்குத் தடை..!'- வங்கதேச தொடர் அப்டேட்ஸ்
6
Chennaiyin FC

முதல் வெற்றிக்காக காத்திருக்கும் சி.எஃப்.சி

10 அணிகள் பங்கேற்கும் 2019 ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் கடந்த அக்டோபர் மாதம் 20-ம் தேதி தொடங்கியது. கோவா, மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ள சென்னை அணி, இந்த சீசனில் இன்னும் முதல் வெற்றியைப் பதிவு செய்யவில்லை. 

கடந்த சீசனில் குறைந்த கோல்கள் அடித்த அணியாக தொடரை நிறைவு செய்திருந்த சென்னை அணி, மொத்தம் 16 கோல்கள் மட்டுமே அடித்திருந்தது. நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவிலும் சென்னையின் எஃப்.சி வீரர்கள் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

சுமாராக தொடங்கி இருக்கும் இந்த சீசனில், ஏற்கெனவே இரண்டு ஹோம் கிரவுண்டு போட்டிகளில் தோல்வியுற்றதால், இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அடுத்து நவம்பர் 10-ம் தேதி நடக்கும் போட்டியில், பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது சென்னையின் எஃப்.சி. பயிற்சி செய்ய ஒரு வாரம் கிடைத்திருப்பதால், அடுத்த போட்டியில் வெற்றி பெற சென்னை அணி கடுமையாகப் போராடும்.

7

ஒலிம்பிக் ஹாக்கி குவாலிஃபையர் : முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா வெற்றி

2020 டோக்யோ ஒலிம்பிக் தொடருக்கான இறுதிக்கட்ட ஹாக்கி குவாலிஃபையர் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்க மகளிருக்கு எதிராக இந்திய மகளிரும், ரஷ்ய அணிக்கு எதிராக இந்திய ஆண்கள் ஹாக்கி வீரர்களும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளனர். முதல் நாள் ஆட்டத்தில், 5-1 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல, 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய ஹாக்கி வீரர்கள் ரஷ்ய அணியை வீழ்த்தியுள்ளனர். இரண்டாவது ஆட்டத்திலும் இந்திய ஆண்கள் அணி 7-1 என ரஷ்யாவை வீழ்த்தி ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.

`டிசிப்ளினரி நடவடிக்கை' - கபில்தேவ் கடுப்பான டெல்லி டெஸ்ட் `சம்பவம்'! #VikatanVintage