Published:Updated:

Mexican GP: அசால்ட்டாக வென்ற வெர்ஸ்ட்டபன்... மீண்டு வருவாரா ஹாமில்ட்டன்?

போட்டாஸ், ஹாமில்ட்டன் இருவருமே ஒரே நேர்கோட்டில் முன்னிலையில் இருக்க முதல் வளைவிலேயே அவர்கள் இருவரையும் ஓவர்டேக் செய்து முன்னிலை பெற்றார் வெர்ஸ்ட்டபன்.

எந்தவொரு சிரமும் இல்லாமல் மெக்ஸிகன் கிராண்ட் ப்ரீயை (Mexican GP) வென்றிருக்கிறார் ரெட்புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்ட்டப்பன்.

தகுதிச்சுற்றில் முதலிரண்டு இடங்களை மெர்சிடீஸின் போட்டாஸ் மற்றும் ஹாமில்ட்டன் இருவருமே பிடித்திருந்தனர். ஆனால், தங்களுக்குக் கிடைத்த முன்னிலையை அவர்களால் முதல் வளைவு வரை கூட தக்க வைக்க முடியவில்லை. போட்டாஸ், ஹாமில்ட்டன் இருவருமே ஒரே நேர்கோட்டில் முன்னிலையில் இருக்க முதல் வளைவிலேயே அவர்கள் இருவரையும் ஓவர்டேக் செய்து முன்னிலை பெற்றார் வெர்ஸ்ட்டபன். அதற்கு பிறகு வெர்ஸ்ட்டபனுக்கு மெர்சிடீஸ் ட்ரைவர்கள் எந்த சிரமத்தையும் கொடுக்கவில்லை. கொடுக்க முடியவில்லை.

ரெட்புல் ரேஸிங்
ரெட்புல் ரேஸிங்

இந்த மெக்ஸிகன் ட்ராக் ரெட்புல் கார்களுக்கே சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டதை நேரடியாக இன்றைய போட்டியில் பார்க்க முடிந்தது. முதல் இடத்துக்காக வெர்ஸ்ட்ப்பனுடன் போட்டியிட வேண்டிய ஹாமில்ட்டன் கடைசியில் இரண்டாம் இடத்தைத் தக்க வைப்பதற்காக பெரஸூடன் போட்டியிட்டுக் கொண்டிருந்தார். போட்டியின் முடிவில் வெற்றிகரமாக இரண்டாம் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இந்த சீசனில் மூன்றாவது முறையாக மூன்றாவது இடம் பிடித்து ஹாட்ரிக் போடியம் ஏறியிருக்கிறார் பெரஸ். இது பெரஸூக்கு ஹோம் ரேஸ் என்பதால், இந்த போடியம் அவருக்குக் கொஞ்சம் ஸ்பெஷல். மெக்ஸிகோ வீரர் ஒருவர் மெக்ஸிகோ கிராண்ட் ப்ரீ போட்டியில் போடியம் ஏறுவது இது முதல் முறை என்பதால் போட்டியின் போது மெக்ஸிகோ ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.

பெரும்பாலான போட்டியாளர்கள் மீடியம் டயர்களிலேயே போட்டியைத் தொடங்கியிருந்தனர். சுனோடா மற்றும் ஓகான் மட்டுமே சாப்ட் டயர்களில் போட்டியைத் துவக்கியிருந்தார்கள். 30-வது லேப்பில் ஹாமில்ட்டனும், 34-வது லேப்பில் வெர்ஸ்ட்ப்பனும், 41-வது லேப்பில் பெரஸூம் ஹார்டு டயருக்கு மாறினார்கள். ஹார்டு டயருக்கு மாறிய போது ஹாமில்ட்டனை விட 9 நொடிகள் பின்தங்கியிருந்த பெரஸ், 60-வது லேப்பில் அதனை 1 நொடியாகக் குறைந்திருந்தார். ஆனால், சாமர்த்தியமாக பெரஸை டிஃபண்ட் செய்து 71-வது லேப்பின் முடிவில் இரண்டாவது இடத்தில் முடித்தார் ஹாமில்ட்டன்.

மேக்ஸ் வெர்ஸ்ட்டப்பன்
மேக்ஸ் வெர்ஸ்ட்டப்பன்

தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து 'போல்' பொசிஷனில் தொடங்கிய போட்டாஸின் காரும் டேனியல் ரிக்கார்டோவின் காரும் முதல் லேப்பின் முதல் வளைவின் முடிவிலேயே லேசாக இடித்துக் கொண்டன. இதன் விளைவாக அடுத்த சில லேப்கள் சேஃப்டி காரோடு தொடர்ந்தது. மீண்டும் 5-வது லேப்பில் இருந்து ரேஸ் தொடங்கிய போது, பிட் எடுத்திருந்ததால், போட்டாஸும் ரிக்கார்டோவும் கடைசி இடத்தில் இருந்து தொடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், ரேஸை 'போல்' பொசிஷனில் இருந்து தொடங்கியிருந்தாலும் 15 இடத்திலேயே போட்டாஸால் முடிக்க முடிந்தது. ஆனால், கடைசி லேப்புக்கு முன்னால் பிட் எடுத்து சாப்ட் டயருக்கு மாறி கடைசி லேப்பை வேகமாக முடித்து, வேகமான லேப்புக்கான ஒரு புள்ளியை வெர்ஸ்ட்டப்பனிடம் இருந்து தட்டிப் பறித்தார் போட்டாஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

5-வது இடத்தில் இருந்து தொடங்கிய பியர் கேஸ்லி 4-ம் இடத்திலும், 8-வது இடத்தில் இருந்து போட்டியைத் தொடங்கிய சார்ல் லெக்லர்க் 5-வது இடத்திலும், 6-வது இடத்தில் இருந்து போட்டியைத் துவக்கிய கார்லோஸ் சைன்ஸ், அதே 6-வது இடத்திலும் போட்டியை முடித்திருந்தனர். 9-வதாகத் தொடங்கிய செபாஸ்டியன் வெட்டல் 7-வது இடத்திலும், 10-வதாகத் தொடங்கிய கிமி ரைக்கோனென் 8-வது இடத்திலும், 12 -வது இடத்தில் இருந்து தொடங்கிய ஃபெர்னான்டோ அலோன்சோ 9-வது இடத்திலும், 18-வது இடத்தில் இருந்து போட்டியைத் தொடங்கிய லான்டோ நாரிஸ் 10-வது இடத்திலும் போட்டியை முடித்திருந்தனர். டேனியல் ரிக்கார்டோ 7-வது இடத்தில் இருந்து முதலில் போட்டியைத் தொடங்கியிருந்தாலும், முதல் லேப்பில் போட்டாஸூடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக 5-வது லேப்பில் கடைசி இடத்தில் இருந்து போட்டியைத் துவங்க வேண்டியதாயிற்று. இதனால், 12-வது இடத்திலேயே ரிக்கார்டோவால் போட்டியை முடிக்க முடிந்தது.

மெக்ஸிகன் கிராண்ட் ப்ரீ (Mexican GP)
மெக்ஸிகன் கிராண்ட் ப்ரீ (Mexican GP)

2021 ஃபார்முலா 1 சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்க இன்னும் நான்கு போட்டிகளே மீதம் இருக்கின்றன. இதுவரை வெர்ஸ்ட்டப்பனா, ஹாமில்ட்டனா என நடுநிலையாக வீச வந்த காற்று, இந்த போட்டியின் வெற்றி மூலமாகக் கொஞ்சம் வெர்ஸ்ட்டப்பன் பக்கம் வீசத் தொடங்கியிருக்கிறது. 7-முறை சாம்பியன் பட்டம் வென்ற ஹாமில்ட்டன் தன் எட்டாவது பட்டத்தை வெல்ல வேண்டும் என்றால் அடுத்து வரும் நான்கு போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்டாக வேண்டும். அடுத்த வாரம் பிரேசிலின் Autódromo José Carlos Pace சர்க்யூட்டில் நடக்கவிருக்கிறது பிரேசிலியன் கிராண்ட் ப்ரீ. இந்த ட்ராக்கும் ரெட்புல் கார்களுக்கே சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. மெக்ஸிகன் கிராண்ட் ப்ரீயிலேயே வெற்றி பெற வேண்டிய கட்டாயம் வெர்ஸ்ட்டப்பனை விட ஹாமில்ட்டனுக்கு தான் அதிகமாக இருந்தது. இனி வரும் கிராண்ட் ப்ரீக்களில் ஹாமில்ட்டனுக்கு அந்த அழுத்தம் இன்னும் அதிகமாகியிருக்கிறது.

மீண்டு வருவாரா ஹாமில்ட்டன்?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு