Published:Updated:

6வது முறையாக உலக `சாம்பியன்' - திருச்சியின் `தன்னம்பிக்கை நாயகி' ஜெனிதாவுக்கு குவியும் பாராட்டு!

உலக செஸ் விளையாட்டு போட்டியில் தொடர்ந்து 6வது முறையாகத் தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார் திருச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜெனிதா ஆண்டோ.

ஸ்லோவாக்கியா நாட்டில், கடந்த ஜூன் 28 ஆம் தேதியிலிருந்து ஜூலை 6-ம் தேதி வரை 19-வது உலக மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 12 நாடுகளைச் சேர்ந்த 44 வீரர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில், பெண்களுக்கான செஸ் பிரிவில் திருச்சி பொன்மலை பட்டியைச் சேர்ந்த ஜெனிதா ஆண்டோ தங்கப்பதக்கம் வென்று, 6வது முறையாகத் தொடர்ந்து உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளார். அதற்காக ஜெனிதா ஆண்டோவிற்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜெனிதா ஆண்டோ, நேற்று விமானம் மூலம் அவரின் சொந்த ஊரான திருச்சிக்கு வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு, மாவட்டத்திருந்து பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்த இளைஞர்கள், விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரண்டு வந்து வரவேற்பு கொடுத்தனர்.

ஜெனிதா ஆண்டோ.
ஜெனிதா ஆண்டோ.

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, தண்ணீர் அமைப்பின் நிர்வாகிகளான நீலமேகம், பாவேந்தர் பாரதிதாசன் கல்வி நிறுவனங்களின் நிர்வாகி உமா அருண் உள்ளிட்டோர் திருச்சி விமான நிலையத்தில் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். தொடர்ந்து விமான நிலையத்தின் வி.ஐ.பி நுழைவாயில் வழியாக வெளியே வந்த ஜெனிதா ஆண்டோவுக்கு, நீண்டதூரம் வரிசையில் நின்று இளைஞர்கள், கைதட்டி வரவேற்றதுடன் மாலை அணிவித்து பூச்செண்டு மற்றும் சாலை அணிவித்து வாழ்த்தினர். அதைத் தொடர்ந்து ஜெனிதா ஆண்டோ பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் மாற்றுத் திறனாளிகளுக்காக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தவருடம் நடைபெற்ற 19வது உலக மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த 44 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த முறை எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய வீரர்கள் கூடுதலாக கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து 5 வீரர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்தப் போட்டியில் பெண்களுக்கான செஸ் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளேன். உலகக் கோப்பை போட்டியில் ஆறாவது முறையாக நான் பெற்றுள்ள தங்கப்பதக்கம் இது.

ஜெனிதா ஆண்டோ
ஜெனிதா ஆண்டோ

இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட எனது தந்தை, உதவிய எனது பயிற்சியாளர் சுந்தர்ராஜன், நண்பர்கள் உறவினர்கள் செஸ் விளையாட்டு கூட்டமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். வரும் 2020 இதில் நடக்க இருக்கும், ஆசிய கிராண்ட் மாஸ்டர் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வதுதான் என் வாழ்நாள் லட்சியம். அதற்காகத் தொடர்ந்து பயிற்சி எடுக்க உள்ளேன்” என்றார். மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது ஜெனிதா ஆண்டோவுக்கு ஏற்பட்ட போலியோ நோய் பாதிப்பால் 90% உடல் நலக்குறைவு ஏற்பட்டு மாற்றுத்திறனாளியாகிப்போன ஜெனிதா, அவரின் தந்தையின் உதவியோடு சக்கர நாற்காலியில் வலம் வருகிறார். ஆனாலும் தன்னம்பிக்கையை மட்டும் கைவிடாமல், தொடர்ச்சியாக சர்வதேச அளவில் பதக்கங்களை குவித்து வரும் இவர் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய பாரா செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இப்போது ஆறாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். உண்மையில் ஜெனிதா பலரின் நம்பிக்கை. இந்த இடத்தைப் பிடிப்பதற்கு அவர் பட்ட கஷ்டங்களும் போராட்டங்களும் ஏராளம். தான் கலந்து கொள்ளும் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை குவிக்கும், தங்க மங்கை ஜெனிதா ஒரு தன்னம்பிக்கை நாயகி. அவரை நாமும் பாராட்டுவோம்.

உங்களின் பாராட்டுகளை கீழே கமென்டில் தெரிவியுங்கள்...!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு