Election bannerElection banner
Published:Updated:

அண்டர்டேக்கர்... ரெஸ்லிங் உலகின் சாவடி சித்தன்... இப்போது ஏன் இந்த முடிவு?! #Undertaker

அண்டர்டேக்கர்
அண்டர்டேக்கர்

`தி அண்டர்டேக்கர்', மூன்று தலைமுறைகளை ஈர்த்த தலைவன். ப்ரோ ரெஸ்லிங் உலகின் தன்னிகரில்லா சமரன். இந்தப் பெருமைகளை அடைய அவர் சிந்திய ரத்தம் ஏராளம், உடலுக்குள் உடைந்து நொறுங்கிய எலும்புகள் அதிகம். அண்டர்டேக்கர் நின்றால் களம் இன்னும் கம்பீரமாகும்.

`தி அண்டர்டேக்கர்'... அண்டர்டேக்கர் என்றால் இறுதிச் சடங்குகளைச் செய்பவர் என்று அர்த்தம். இந்தப் பெயருக்காகவே எல்லோரும் இவரை திரும்பிப்பார்த்தனர். அந்த மணிசத்தம் கேட்டால், அரங்கமே ஆவிகளின் கூடாரமாகும். சில்லிடவைக்கும் பார்வை, கண்களை ஏமாற்றும் வேகம், இருளில் வெட்டிய மின்னல் என 36 ஆண்டுகள் களத்தில் கண்கட்டுவித்தை காட்டியவர், தனது ஓய்வை அறிவித்துவிட்டார்.

The Undertaker
The Undertaker

அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் வசித்துவந்த ஃப்ராங்க் காம்ப்டன் கேலவே-வுக்கு 1965-ம் ஆண்டு ஐந்தாவது ஆண் குழந்தையாகப் பிறந்தான், மார்க் வில்லியம் கேலவே. சிறுவயதில் இருந்தே அவனுக்கு விளையாட்டுகள் என்றால் பெரும் ஆர்வம். வீட்டின் கடைக்குட்டி மார்க் கேலவே-வுக்கு தனது நான்கு அண்ணன்களுடன் இணைந்து விளையாடுவதுதான் ஒரே பொழுதுபோக்கு. தனது பள்ளியின் கால்பந்து மற்றும் கூடைப்பந்து அணிகளிலும் நட்சத்திர ஆட்டக்காரனாக வலம்வந்தான். ஆறே முக்கால் அடி உயரமும் ஒல்லியான தேகமும் கூடைப்பந்து விளையாட்டில் பெரும் பக்கபலமாய் அமைய, நிறைய விளையாடி, நிறைய வென்றான்.

அந்தத் தகுதி, ஏஞ்சலினா கல்லூரியில் பட்டப்படிப்பு பயிலும் வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தது. அங்கு படித்து பட்டம் பெற்ற பின்னர், டெக்சாஸ் வெஸ்லியான் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுத் துறை சம்பந்தமாக சில காலம் படித்தான். அந்தச் சமயத்தில்தான் மார்க் கேலவேவுக்கு மல்யுத்தம் மீது ஈடுபாடு ஏற்பட ஆரம்பித்தது. நாளடைவில், கூடைப்பந்து விளையாட்டையே மறந்துபோய், 'மல்யுத்தம்தான் வாழ்க்கை' என மாறினான்.

The Undertaker
The Undertaker

டெக்சாஸ் மாகாணத்தில் இயங்கிவந்த பிரபல ரெஸ்லிங் நிறுவனமான WCCW-வில் `டெக்ஸாஸ் ரெட்' என்ற பெயரில் 19-வது வயது இளைஞனாக அறிமுகமானார் மார்க் கேலவே. முதல் போட்டியே தோல்வி. நான்கு ஆண்டுகள் கழித்து WCCW நிறுவனத்திலிருந்து வெளியேறி CWA நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கே, `மாஸ்டர் பெய்ன்' என்ற பெயரில் மல்யுத்தம் செய்துவந்த மார்க் கேலவே, அப்போதைய சாம்பியன் ஜெரி லாலரை எளிதில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். மல்யுத்தப் போட்டிகளில் அவர் பெற்ற முதல் சாம்பியன்ஷிப் பட்டம் அது. மார்க்கின் ஆறே முக்கால் அடி உயர உடம்பும், மல்யுத்த அசைவுகளும் அவரை ஊர் முழுக்க பிரபலமாக்கியது. `மல்யுத்த வீரனாவதற்காகவே பிறந்தவன்' என ரசிகர்கள் மெச்சினர். அந்த வார்த்தைகள்தான் அப்போதைய உலகின் மிகப்பெரிய தொழில்முறை மல்யுத்த நிறுவனங்களில் ஒன்றான WWF/WWE-ற்கு அவரை கூட்டிச் சென்றது.

1990-ம் ஆண்டு, `சர்வைவர் சீரிஸ்' போட்டியில் டெட் டிபியாஸி -யின் 'மில்லியன் டாலர்' அணிக்கும் டஸ்டி ரோட்ஸின் 'டிரீம்' அணிக்கும் இடையே `4 ஆன் 4 எலிமினேஷன் மேட்ச்' நடத்த திட்டமிட்டது WWE. மேலும், டெட் டிபியாஸியின் மில்லியன் டாலர் அணியில் மர்ம மனிதர் ஒருவர் விளையாடுவார் எனவும் விளம்பரம் செய்தது. மார்ச் 22,1990-ம் நாள் ஹார்ட்போர்ட் நகரின் சிவிக் சென்டரில் பிரமாண்டமாகத் தொடங்கியது, `சர்வைவர் சீரிஸ்' போட்டி. `யார் அந்த மர்ம மனிதன்?' என மக்கள் ஆர்வமாய் காத்திருந்தார்கள்.

The Undertaker
The Undertaker

இரு அணி வீரர்களும் மேடையேறிய பின், மில்லியன் டாலர் அணியின் தலைவர் டெட் டிபியாஸி மைக்கை வாங்கி இப்படி அறிவித்தார். ''என் அணியில் விளையாடவிருக்கும் அந்த மர்ம மனிதனை அழைக்கிறேன். 320 பவுண்ட் எடை கொண்ட டெத் வேலி (மரணப் பள்ளத்தாக்கு) பகுதியைச் சேர்ந்த `தி அண்டர்டேக்கர்' உங்கள் முன் இதோ...'' கறுப்பு நிற லாங் கோட், கறுப்பு நிற தொப்பி, பழுப்பு நிற லாங் பூட் அணிந்து 6.10' உயரத்தில் அரங்கத்துக்குள்ளே நுழைந்த அண்டர்டேக்கரைப் பார்த்து மக்கள் மிரண்டுபோனார்கள். எல்லோர் கண்களிலும் மிரட்சி. சிறு குழந்தைகள் அவரவர் பெற்றோரின் உடலுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டார்கள்.

ப்ரோ ரெஸ்லிங் வரலாற்றின் மிகச் சிறந்த ரெஸ்லர்களில் ஒருவர் 'தி அண்டர்டேக்கர்'. இந்த சிறப்புக்குக் காரணமாக கேலவே-வின் உழைப்பு மட்டுமே இருக்கிறது. முதன்முதலாக தன்னை பார்த்தபோது ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஒருவித அச்ச உணர்வை, அந்த வியப்பை, கடைசி வரையிலும் கட்டிக் காப்பாற்றியதுதான் எத்தனை பெரிய சாதனை.

The Undertaker
The Undertaker

1990-ம் ஆண்டு, `சர்வைவர் சீரிஸ்' போட்டியில் அறிமுகமான அண்டர்டேக்கர், அதற்கு அடுத்த ஆண்டு நடந்த 'சர்வைவர் சீரிஸ்' போட்டியிலேயே உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டம் ஜெயித்தார். அதுவும், அப்போதைய WWE சூப்பர் ஸ்டார் ஹல்க் ஹோகனை எதிர்த்து. அதன் பிறகு அண்டர்டேக்கர் இல்லையேல் WWE இல்லை என்றாகிவிட்டது. உலக ஹெவி வெயிட் சாம்பியன்ஷிப், ஹார்ட்கோர் சாம்பியன்ஷிப், WWE சாம்பியன்ஷிப் என எல்லா சாம்பியன்ஷிப்களையும் தனது தோள்களில் தாங்கியிருக்கிறார் அண்டர்டேக்கர். தங்க பெல்ட்டுகள் ஒளி மங்கும் போதெல்லாம், டேக்கரின் தோள் அடைந்தே தங்களை மெருகேற்றிக்கொண்டன.

`ரெஸில்மேனியா' போட்டிகளில் வேறெந்த வீரரும் செய்யாத சாதனையாக 27 முறை சண்டையிட்டுள்ளார். அதிலும் தொடர்ச்சியாக 21 போட்டிகளில் வென்றிருக்கிறார். நான்கு தலைமுறை வீரர்களை வீழ்த்திப் புதைத்திருக்கிறார். ரெஸ்லிங் வரலாற்றில் இனி எவராலும் எட்டமுடியாத சாதனை இது. அண்டர்டேக்கரை எதிர்த்து சண்டையிடுவதையே தன் வாழ்க்கையில் பெற்ற பெரும் வரமாகப் பார்க்கிறார்கள் மல்யுத்த வீரர்கள். இளம் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களுடன் சண்டையிட்டு, அவர்களை வளர்த்துவிடவும் செய்வார் அண்டர்டேக்கர். ப்ராக் லெஸ்னர், ரேன்டி ஆர்டன், பட்டிஸ்டா என சொல்லிக்கொண்டே போகலாம்.

The Undertaker
The Undertaker

இளைஞர்களுக்கு நிகராக சிறுவர் கூட்டமும் WWE போட்டிகளுக்கு ரசிகர்களாக இருந்துவருகின்றனர். பறந்து பறந்து அடிப்பது, கலர்ஃபுல்லான ஆடைகள் அணிவது, நகைச்சுவையாகப் பேசுவது போன்ற அம்சங்கள்தான் குழந்தைகளை ரசிக்கவைக்கும். ரே மிஸ்டிரியோ, ஜான் செனா போன்றோரை குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்கக் காரணம் இதுதான். ஆனால், இது எதுவும் இல்லாமலேயே குழந்தைகளை ரசிக்கவைத்தவர் அண்டர்டேக்கர். கறுப்பு நிறங்களில் ஆடைகள் அணிந்துகொண்டும், பயமுறுத்தும் உடல்மொழிகளைக் கொண்டுமே அதைச் செய்து காட்டினார். ஆக்ரோஷத்தில் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் அண்டர்டேக்கர், திடீரென ரெஃப்ரிகளை திரும்பி ஒரு பார்வை பார்ப்பார். 'முத்து' படத்தில் ரஜினியின் பார்வை ஒன்றுக்கே பயந்து தெறிக்கும் வடிவேலுவாக ரெஃப்ரிகள் தெறிப்பர்.

ஒருமுறை, ஸ்டோரி லைனுக்காக பிக்பாஸ் மேன் என்பவரை அண்டர்டேக்கர் தூக்கில் ஏற்றினார். மேன்கைன்டுடன் அவர் சண்டையிட்ட 'ஹெல் இன் எ செல்' போட்டியை பிளாக் அண்ட் ஒயிட்டில் பார்த்தாலும் ரத்தச் சிவப்பில்தான் தெரியும். உயிரோடு புதைப்பது, எரிப்பது என எத்தனையோ கண்கட்டு வித்தைகளை நிகழ்த்தி கதிகலங்கவைத்திருக்கிறார். 30 நிமிட சண்டையும் போட்டிருக்கிறார், 18 நொடிகளிலேயே மேட்சையும் முடித்திருக்கிறார். ரெஸ்லிங் அரங்கில் அண்டர்டேக்கர் செய்யும் ஒவ்வொரு அசைவும் புத்தகத்தில் இருப்பவை. புதிய அசைவுகள் ஏதேனும் செய்தால், அடுத்த நொடி அது புத்தகத்தில் ஏறும்.

The Undertaker
The Undertaker
``WWE ரிங்ல நின்னு தமிழ்ல பேசணும்னு ஆசை!" - ப்ரோ ரெஸ்லிங் முதல் தமிழன் ஜெய் ஜாக்சன்

தொழில்முறை ரெஸ்லிங் போட்டிகளில் அண்டர்டேக்கர் அளவு நுட்பம் மற்றும் திறனோடு சண்டையிடும் ஆளே கிடையாது. 6 அடி 10 அங்குலம் உயரம், 140 கிலோ எடை கொண்ட டேக்கர், தன் உடல் அளவில் மூன்றில் ஒரு பங்கு உடல் உள்ளவர்களின் வேகத்தில் பறப்பார். ரஜினியின் வேகமும், ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் காந்தமும், கமலின் திறமையும், கலையின்பால் அர்ப்பணிப்பும் ஒருங்கே ஒருவர் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் மார்க் 'தி அண்டர்டேக்கர்' கேலவே. வெவ்வெறு அவதாரங்கள், ஓட்டி வந்த புல்லட்டுகள், சண்டை நுணுக்கங்கள், பட்டப்பெயர்கள், கேன் உடனான ஆன் ஸ்கிரீன் உறவு என அண்டர்டேக்கரை பற்றிப் பேச எத்தனையோ இருக்கிறது. இப்படி பல எட்டமுடியாத சாதனைகளைப் புரிந்து, தொழில்முறை மல்யுத்த அரங்கில் மகுடம் சூடா மன்னனாக வலம் வந்த அண்டர்டேக்கர், நேற்றிலிருந்து வரலாறு ஆகிவிட்டார்.

ஆம், மார்க் கேலவே, தனது `அண்டர்டேக்கர்' அடையாளத்திற்கு ஓய்வு கொடுத்துவிட்டார். வயதில் அரை சதத்தைக் கடந்துவிட்ட மார்க் கேலவே, ரெஸ்லிங் போட்டிகளில் ஓய்வுபெற்றுவிட்டார். ரெஸில்மேனியா போட்டிகளில் 21 வருடங்களாக 21-0 என விட்டுக்கொடுக்காமல் சண்டையிட்டுவந்த அண்டர்டேக்கர், சில ஆண்டுகளுக்கு முன்னர் ப்ராக் லெஸ்னரிடம் தோல்வியடைந்தபோதே அவரது ரசிகர்கள் உடைந்துபோய்விட்டனர். மேலும், முதுமையால் தளர்ந்த உடல், சுருங்கிய தோல்களோடு அண்டர்டேக்கர் சண்டையிடுவதைப் பார்க்க அவர்களுக்கு மனமில்லை. அப்போதே ஓய்வை அறிவித்துவிடுவார் என எதிர்பார்த்தனர்.

The Undertaker
The Undertaker

அதன்பிறகு, ரோமன் ரெய்ன்ஸிடம் சண்டையிட்டு தோல்வி அடைந்தார். சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என ரெஸ்லிங் உலகமே கண் கலங்கியது. ஆனால், அதன் பிறகு அரிதாக சில நேரங்கள் களத்துக்குள் காலடி எடுத்துவைத்தார். கடைசியாக, நடந்த போர்ன்யார்டு மேட்சிலும் மிரட்டவே செய்தார். ரசிகர்களுக்கு அண்டர்டேக்கரை இழக்க மனமில்லைதான், அதேநேரம், மார்க் கேலவே கஷ்டப்படுவதைக் காண முடியவில்லை. எனவே, அவர்களுக்கு இந்த ஓய்வு அறிவிப்பு நிம்மதியைத்தான் தந்திருக்கும். ஆனால், அடுத்த தலைமுறை ரெஸ்லிங் ரசிகர்கள் ஒரு பேரனுபவத்தை மிஸ் செய்யப்போகிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு