Published:Updated:

ராஸியின் சிம்ம சொப்பனம், பெட்ரோஸாவின் பரம எதிரி, மார்க்கஸின் சாம்பியன்... ஓய்வு பெற்றார் லொரன்ஸோ!

"ஒரு ரைடருக்கு நான்கு நாள்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானவை. முதலாவது, தன்னுடைய முதல் ரேஸ், இரண்டாவது, முதல் வெற்றி. மூன்றாவது...’

Jorge Lorenzo
Jorge Lorenzo

பிரபல பைக் ரேஸர் ஜோர்ஜ் லொரன்ஸோ ரேஸ் கரியரில் மோசமான ஆண்டு 2019 தான். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில், ஒரு ரேஸில்கூட முதல் 10 இடங்களுக்குள் லொரன்ஸோவால் வரமுடியவில்லை. ஒரு பக்கம் ஹோண்டாவின் RC213V பைக் தொடர்ந்து உலக சாம்பியன் பட்டம் அடிக்க, இந்த பைக்குக்கு ஏற்றவாறு ரைடிங்கையும், தன்னுடைய ரைடிங்கிற்கு ஏற்றவாறு பைக்கையும் மாற்றமுடியாமல் தவித்தும், காயங்களால் அவதிப்பட்டும் வந்தார். இவர், இந்த ஆண்டு இறுதியில் தன்னுடைய ஓய்வை அறிவிப்பார் என்று கிசுகிசுக்கள் வந்துகொண்டிருந்த நிலையில், இந்த வாரம் ஸ்பெயினில் நடைபெற உள்ள வேலன்சியா ரேஸ்தான் என்னுடைய கடைசி ரேஸ் என நேற்று அறிவித்துவிட்டார், லொரன்ஸோ.

நேற்று, ஸ்பெயினில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், "ஒரு ரைடருக்கு நான்கு நாள்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானவை. முதலாவது, தன்னுடைய முதல் ரேஸ், இரண்டாவது, முதல் வெற்றி. மூன்றாவது, முதல் சாம்பியன்ஷிப். எல்லோருமே உலக சாம்பியன் பட்டம் வாங்க முடியவில்லை. ஆனால், நாங்கள் ஒரு சிலர் அதைப் பெற்றிருக்கிறோம். நான்காவது, ஓய்வுபெறும் நாள். நீங்கள் எல்லோரும் நினைப்பது போல அந்த நான்காவது நாளை அறிவிக்கவே இங்கு நான் வந்திருக்கிறேன். இதுதான் என்னுடைய கடைசி ரேஸ். இந்த ரேஸின் முடிவில் நான் தொழில்முறை பந்தயங்களிலிருந்து ஓய்வு பெறுகிறேன்'' என விடைபெறுதலை அறிவித்தார் லொரன்ஸோ.

லொரன்ஸோ / Lorenzo
லொரன்ஸோ / Lorenzo

லொரன்ஸோ, 2002-ம் ஆண்டு தன்னுடைய 15-ம் வயதில், 125சிசி கிராண்ட் ப்ரீ போட்டியில் முதல்முதலாகக் கலந்துகொண்டார். அந்த ஆண்டே பிரேசிலில் நடைபெற்ற போட்டியில் தன்னுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்தார். அடுத்து வந்த சீசன்களில், தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்று சாம்பியன்ஷிப் போட்டியில் 4-ம் இடத்துக்கு முன்னேறினார். 2005-ம் ஆண்டு, 250சிசி கேட்டகரிக்கு முன்னேறி 6 போடியம் வெற்றிபெற்றார். 2006-ல் 11 வெற்றிகள், 2007-ல் 12 வெற்றிகள் எனத் தொடர்ந்து இரண்டு 250சிசி உலக சாம்பியன்ஷிப் பட்டம் வாங்கி, 2008-ல் உலகின் வேகமான பைக் ரேஸான மோட்டோ ஜிபி-க்கு முன்னேறினார்.

மோட்டோ ஜிபி-யில் கத்தார் போட்டியில் போடியம் ஏறினார் லொரன்ஸோ. அதற்குப் பின், பல காயங்களைச் சந்தித்து போர்ச்சுக்கல் ரேஸில் முதலிடம் பிடித்தார். 2009-ம் ஆண்டு லொரன்ஸோவுக்கு மட்டுமில்லை, மோட்டோ ஜிபி ரசிகர்களாலும் மறக்கமுடியாத வருடம். மோட்டோ ஜிபி லெஜண்டு ராஸிக்கும், லொரன்ஸோவுக்கும் யார் இந்த ஆண்டின் சாம்பியன் என்று கடும்போட்டி நிலவியது. 17 ரேஸ்களில் லொரன்ஸோ 12 போடியம் வெற்றி பெற, ராஸி 13 போடியம் வெற்றியுடன் அந்த ஆண்டின் சாம்பியன் பட்டம் வாங்கினார்.

Lorenzo vs rossi
Lorenzo vs rossi
2013
மார்க் மார்க்கஸின் வருகைக்குப் பிறகு, மார்க்கஸிடம் இருந்து சாம்பியன்ஷிப்பை தட்டிப்பறித்த ஒரே ரைடர், லொரன்ஸோ. 2015-ல் வேலன்ட்டினோ ராஸி மற்றும் மார்க் மார்க்கஸ் இருவருடனும் போட்டிப்போட்டு தனது மூன்றாவது சாம்பியன்ஷிப்பை வென்றார்.

லொரன்ஸோ-ராஸிக்கு இடையேயான போட்டி, அடுத்த ஆண்டும் தொடர, ராஸிக்கு காலில் காயம் ஏற்பட்டு சில போட்டிகளில் பங்கெடுக்க முடியாமல் போனது. 2010-ல், மொத்தம் 16 போடியம் வெற்றி பெற்று, லொரன்ஸோ தனது முதல் மோட்டோ ஜிபி உலகம் சாம்பியன் பட்டத்தை வாங்கினார். 2012-ல் டானி பெட்ரோஸாவுடன் போட்டிபோட்டு, கடைசி நிமிடத்தில் வெற்றி பெற்று தன்னுடைய இரண்டாவது உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றார். பெட்ரோஸா-லொரன்ஸோ ரைவல்ரி என்பது நம்மூர் அஜித், விஜய் போட்டியைப் போன்றது. மோட்டோ ஜிபி-யின் மிகத் தீவிரமான போட்டிகளில் ஒன்று.

டுக்காட்டியில் லொரன்ஸோ
டுக்காட்டியில் லொரன்ஸோ

2015-ல் மீண்டும் ராஸியுடன் கடுமையாகப் போட்டிபோட்டு, தனது மூன்றாவது உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 2013-ல் மார்க் மார்க்கஸின் வருகைக்குப் பிறகு, மார்க்கஸிடமிருந்து சாம்பியன்ஷிப்பை தட்டிப்பறித்த ஒரே ரைடர் லொரன்ஸோ. 9 ஆண்டுகள் யமஹாவில் இருந்த லொரன்ஸோ, 2017-ம் ஆண்டு டுக்காட்டி அணிக்குச் சென்றார். முதல் ஆண்டு டுக்காட்டியில் கொஞ்சம் திணறினாலும், அடுத்த ஆண்டு மூன்று போட்டிகளில் முதலிடமும், ஒரு போட்டியில் இரண்டாவது இடமும் வென்றார். பிறகு, கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக, அந்த ஆண்டு லொரன்ஸோவால் தொடர்ந்து வெற்றிபெற முடியவில்லை.

2019-ல், ஒரு போட்டியில்கூட முதல் 10 இடங்களுக்குள் வரமுடியவில்லை. சாம்பியன்ஷிப் போட்டியில் 19-வது இடத்தில் இருக்கிறார் லொரன்ஸோ. அவருடைய கரியரின் மிக மோசமான சீசன் இதுதான். தன்னுடைய மோசமான சீசனுடன் ஓய்வு பெறுகிறார் லொரன்ஸோ.

Vikatan