தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 25 பேருக்கு அர்ஜுனா விருதும் 4 பேருக்கு துரோணாச்சாரியா விருதும், 4 பேருக்கு தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த மூன்று விளையாட்டு வீரர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரரான கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டிருக்கிறது. செஸ்ஸில் வளர்ந்து வரும் அடுத்தத் தலைமுறை வீரராக பிரக்ஞானந்தா பல சாதனைகளையும் செய்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாடில் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். உலக சாம்பியனான கார்ல்சனையும் மீண்டும் மீண்டும் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

அர்ஜுனா விருதை துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனும் வென்றிருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது குஜராத்துக்காகவே ஆடி வருகிறார். ஆயினும், துப்பாக்கிச் சுடுதலில் சாதனைகள் பல செய்து தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு மேஜர் தயான்சந்த் விருது வழங்கப்பட்டிருக்கிறது. டேபிள் டென்னிஸின் இந்திய முகம் என சரத் கமலைக் குறிப்பிடலாம். நீண்ட நெடுங்காலமாக டேபிள் டென்னிஸ் ஆடி வருகிறார். தேசிய அளவில் இவர் ஆடாத தொடர்களும் வெல்லாத பதக்கங்களும் கிடையாது. சர்வதேச அளவில் உச்சத்தில் இருக்கும் பல நாடுகளுக்கு எதிராகவும் உத்வேகத்துடன் போராடி அடுத்தத் தலைமுறை வீரர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக உருவெடுத்திருக்கிறார்.