Published:Updated:

`இப்படியொரு பந்துவீச்சை பார்த்ததில்லை...அசால்ட்டாக செய்கிறார்!’ - ஆர்ச்சரைப் புகழ்ந்த பென் ஸ்டோக்ஸ்

ஆஷஸ் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ஆர்ச்சரை சக வீரரான பென் ஸ்டோக்ஸ் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Jofra Archer
Jofra Archer ( AP )

"ஆஷஸ் டெஸ்டில் மட்டும் என்னைத் தேர்வு செய்தால் நான் நிலவுக்கே சென்று வருவேன். என்னைக் கையில் பிடிக்க முடியாது" - உலகக்கோப்பைத் தொடருக்கு தேர்வானபோது ஆர்ச்சர் ஆஷஸ் டெஸ்ட் கனவு குறித்து இவ்வாறு பேசியிருந்தார். அவரது விருப்பப்படியே ஆஷஸ் கனவும் நிறைவேறியது. அறிமுக டெஸ்டிலே ஆர்ச்சர் முத்திரை பதித்துவிட்டார்.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு அச்சத்தை விதைத்த ஸ்டீவ் ஸ்மித்தை, ஆர்ச்சர் தனது பவுன்சர்களில் நிலைக்குலைய வைத்தார். காயம் காரணமாக ரிட்டர்யர்ட் ஹெட் முறையில் வெளியேறிய ஸ்மித் சிறிது நேரத்துக்குப் பின்னர் களத்துக்கு வந்து விளையாடினார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் லார்ட்ஸ் டெஸ்டில் இருந்து காயம் காரணமாக ஸ்மித் வெளியேறினார்.

Steve smith
Steve smith
AP

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் தடைவிதிக்கப்பட்ட ஸ்மித் ஓராண்டு தடைக்குப்பின் மீண்டும் களத்துக்குத் திரும்பினார். ஆஷஸ் தொடர் தொடங்கியதில் இருந்தே ஸ்மித் இணையத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆஸ்திரேலியா வீரர்கள் வரிசையாக நடையைக் கட்ட தனி ஆளாக செஞ்சுரி அடித்து பிரமிக்க வைத்தார்.

இங்கிலாந்து பந்துவீச்சை ஆடாமல் ஸ்மித் வித்தியாசமாக எதிர்கொண்ட வீடியோ கடந்த சில நாள்களாக இணையத்தை ஆக்கிரமித்திருந்தது. இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு தலைவலியாக இருந்த ஸ்மித்தை காலி செய்ததன் மூலம் ஆர்ச்சர் ஹாட் டாபிக் ஆனார். ஆர்ச்சரின் பவுன்சர்கள் ஆஸ்திரேலியா வீரர்களை அசைத்துப் பார்த்தது. சீரான வேகத்தில் அடுத்தடுத்து வரும் பவுன்சர்களை எந்த பேட்ஸ்மேன்கள்தாம் ரசிப்பார்கள்.

இந்நிலையில், ஜோப்ரா ஆர்ச்சரை சக வீரரான பென் ஸ்டோக்ஸ் புகழ்ந்து தள்ளியுள்ளார். ``ஜோப்ரா ஆர்ச்சரின் ஆக்ரோஷம் பேட்ஸ்மேன்களைக் களத்தில் நீடிக்கவிடுவதில்லை. இது விளையாட்டின் ஒரு பகுதிதான். பவுன்சர்தான் ஆர்ச்சரின் மிகப்பெரிய சொத்து. அவரிடம் இருந்து நிறைய பவுன்சர்களை நீங்கள் இனி எதிர்பார்க்கலாம். சிலர் அவரது பந்துவீச்சை விமர்சனம் செய்கிறார்கள். பேட்ஸ்மேன்கள் பந்துகளில் அடிவாங்குகிறார்கள் என்பதற்காக எந்தப் பந்துவீச்சாளரும் இனி நான் பந்துவீச மாட்டேன். நான் இன்னொரு முறை மற்றவர்களைக் காயப்படுத்த விரும்பவில்லை எனக் கூறப்போவதில்லை. உங்கள் பந்துவீச்சை அவர்கள் மீண்டும் எதிர்கொண்டால் மீண்டும் பவுன்சரை ஆயுதமாகத்தான் எடுக்க வேண்டும்.

England Cricket Team
England Cricket Team
AP

ஜோப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சு சீரானதாக இருக்கும். ஸ்டெம்புகளுக்கு அருகில் அவரது பவுன்சர்கள் இருக்கும். எங்கள் பந்துவீச்சின் மற்றொரு பரிமாணத்தை அவர் அளிக்கிறார். முதல் இன்னிங்ஸில் அவர் 29 முதல் 30 ஓவர்களை வீசியிருப்பார். கடைசியாக அவர் வீசிய அந்த 8 ஓவர்கள் அற்புதமானது. அது ஒரு தரமான பந்துவீச்சு. நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததில் இருந்து இப்படியொரு பந்துவீச்சை பார்த்ததில்லை. ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஜான்சனிடம் இந்த ஆக்ரோஷம் இருந்தது. குறிப்பாக, 2013-ம் ஆண்டில் ஜான்சனிடம் இந்த ஆக்ரோஷம் காணப்பட்டது. ஆர்ச்சர் இதை மிக எளிதாக வெளிப்படுத்துகிறார். போராட்டக்குணம் அவரை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும். அவரின் திறமைக்கு வானமே எல்லை. ஆர்ச்சர் இங்கிலாந்தின் டெஸ்ட் அணிக்கு சரியான தேர்வு. மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும் அவர் இருப்பார்” என்றதோடு முடித்துக்கொண்டார்.