Published:Updated:

மைதானத்தை வட்டமிடும் கழுகுகள்... வீராங்கனைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?! #SexualHarassment

Sexual Harassment
Sexual Harassment

PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லைகள் கொடுத்ததைப் அப்பள்ளி மாணவிகள் சில தினங்களுக்கு முன் வெளிப்படுத்தினார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், சென்னையின் முன்னணி தடகள பயிற்சியாளர் நாகராஜன் இப்போது போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

புத்தகத்தைக் கிழித்தெறிந்த வகுப்பறையின் கதை படித்த தமிழகம், இப்போது கால்களை வாரிவிட்ட மைதானத்தின் கதை படித்துக்கொண்டிருக்கிறது. பள்ளி ஆசிரியரைத் தொடர்ந்து, தங்கள் தடகள பயிற்சியாளரால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் இப்போது குரல் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான இன்னொரு அவல அத்தியாயம் இங்கே அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

பல்வேறு தடகள வீரர்களை உருவாக்கியவர், வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தவர் என்று இத்தனை காலம் கொண்டாடப்பட்டவர் நாகராஜன். ஆனால், அந்தப் பிம்பத்துக்குப் பின்னால்தான் இத்தனை ஆண்டுகளாகத் தன் குரூர முகத்தை மறைத்துவைத்திருக்கிறார். 14, 15 வயது சிறுமிகள் உள்பட தன்னிடம் பயிற்சி பெற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட வீராங்கனைளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியிருக்கிறார். அவரால் விளையாட்டை விட்டே ஒதுங்கிய, தங்கள் கனவுகளைத் தொலைத்த பல வீராங்கனைகள் தாங்கள் அனுபவித்த இன்னல்களை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

கஷ்டத்தில் இருப்பவர்களை சங்கடப்படுத்துவதைவிட கொடிய விஷயம் எதுவும் இருந்துவிட முடியாது. பொருளாதார ரீதியாக, உளவியல் ரீதியாக பலவீனமாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து தன் வேலையைக் காட்டியிருக்கிறார் நாகராஜன். "வறுமையான குடும்பத்திலிருந்து, கிராமத்திலிருந்து வந்த பொண்ணுங்கள ரொம்பவே டார்கெட் பண்ணுவாரு" என்கிறார்கள் அவரிடம் பயற்சிபெற்ற வீராங்கனைகள். "அவரால நான் வீட்ல முடங்கியிருக்கேன்" என்று சொல்லும் முன்னாள் தடகள வீராங்கனையின் வார்த்தையில் அவ்வளவு ரணம். எத்தனை கனவுகளை உடைத்திருக்கிறார்கள். எத்தனை பேரை மீண்டும் சமயலறைக்கே அனுப்பியிருக்கிறார்கள்!

P.Nagarajan
P.Nagarajan

நாகராஜன் தங்களுக்கு இழைத்த கொடுமையைப் பற்றி இப்போது சொல்லும் பெண்கள், சமூகத்தின் கேள்விகளுக்குப் பயந்தோ, தாங்கள் அடையாளப்படுத்தப்படுவோம் என்று பயந்தோ அன்று அமைதியாக இருக்கவில்லை. குடும்ப கஷ்டத்துக்கு மத்தியிலும் தங்களை விளையாட அனுப்பும் பெற்றோர்கள் எங்கே தங்களை மீண்டும் மைதானத்துக்கு அனுப்பமாட்டார்களோ, எங்கே தங்கள் கனவுகள் அதனால் கலைந்துவிடுமோ என்ற பயம் அவர்களை ஊமையாக்கிவிடுகிறது.

கல்வியின் தேவை புரிந்த அளவுக்கு விளையாட்டின் அவசியத்தை நாம் புரிந்துகொள்ளவில்லை. நம் நாட்டில் இன்னும் பொழுதுபோக்காகவும் அநாவசியமாகவுமேதான் பார்க்கப்படுகிறது. இப்படியிருக்கையில், விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுப்பதற்கே பெற்றவர்களிடம் கெஞ்சவேண்டும். அவர்களைச் சமாளிக்கவேண்டுமெனில், வெற்றி பெற்றவர்களைக் காட்டவேண்டும். ஒரு பெண் இந்த இடத்திலேயே எத்தனை சவால்களைச் சந்திக்கவேண்டியிருக்கிறது!

கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் ஒரு சிறுவன், தன் பெற்றோரைச் சமாளிக்க உதாரணம் காட்டுவதற்கு 100 பேர் இருக்கிறார்கள். கவாஸ்கர், கபில்தேவ் தொடங்கி இன்று ரிஷப் பன்ட் வரை சூப்பர் ஸ்டார்கள் ஏராளம். இதுவே ஒரு பெண்ணுக்கு இருக்கும் ஒரே ஸ்டார் மித்தாலி ராஜ். நாட்டின் மிகப்பெரிய விளையாட்டில் இருக்கும் இந்த விகிதாச்சார வித்தியாசம் எல்லா விளையாட்டுகளிலும் இருக்கத்தான் செய்கிறது. தன்னால் இந்தத் துறையில் சாதிக்க முடியும் என்று பெற்றவர்களை நம்பவைத்து மைதானத்துக்குள் நுழைவதற்குள்ளாகவே எக்கச்சக்க இன்னல்களைச் சந்திக்கவேண்டும்.

இந்த சமாளிக்கும் படலத்தில், பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளிப்பது என்னவோ அவர்கள் காட்டும் ரோல் மாடல்களாக இருக்காது. தங்கள் மகளின் கண்ணில் தெரியும் நம்பிக்கையும் தைரியமும்தான். கடினமான ஒரு துறையில், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு துறையில் தன்னால் சாதிக்க முடியும் என்று அவள் காட்டும் தைரியம்தான், அவர்களின் அனுமதியைப் பெற்றுக்கொடுக்கும். தான் கஷ்டத்தைச் சந்திக்கும்போது, பெற்றோர்களிடம் அவள் அதைச் சொல்லத் தயங்கும் காரணமும் அதுதான்.

பெற்றோருக்குத் தைரியம் கொடுத்த அந்த மகளின் தைரியம் இப்போது அந்த கண்களில் தென்படாது. அதனால், பயப்படத் தொடங்குவார்கள். பாதுகாக்க நினைப்பார்கள். அதற்கு அவர்கள் ஒரே தீர்வாக நினைப்பது, விளையாட்டில் இருந்து ஒதுங்குவது மட்டும்தான். பலநூறு பெண்கள் இப்படித் தங்கள் கண் முன் விளையாட்டை விட்டு ஒதுங்கியதைப் பார்த்தவர்கள், அடுத்து என்ன செய்வார்கள்? தங்கள் கனவுக்காக அதைப் பொருத்துக்கொள்ளத் தொடங்குவார்கள்.

ஒதுங்கி நிற்பதல்ல, ஓங்கிக் குரல் கொடுப்பதுதான் பாதுகாப்பு என்பதை நம் சமூகம் புரிந்துகொள்ள சில காலம் ஆகலாம். அப்படிப் புரிந்துகொண்ட பெற்றோர்கள் இருந்தால், தங்கள் கனவின் மீதான பயம் இல்லாமல் பெண்கள் நிச்சயம் வெளியே சொல்வார்கள். இப்போது நாகராஜன் மீதான குற்றச்சாட்டு வெளிவந்திருப்பதும் அப்படியான ஒரு தந்தையால்தான். தன் மகளிடம் தவறாக நடந்துகொண்ட பயிற்சியாளர் மீது நேரடியாக தடகள சங்கத்தில் புகார் செய்திருக்கிறார். தன் மகளுக்கு மோசமானவள் என்ற அடையாளத்தை அந்தப் பயிற்சியாளர் கொடுக்க முயன்றும், தன் மகளை நம்பி, மீண்டும் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்திருக்கிறார். இதுதான் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாபெரும் நம்பிக்கை!

Larry Nasser
Larry Nasser

இது ஏதோ நம் ஊரில் மட்டும் நடக்கும் பிரச்னையோ, ஏழைக் குடும்பத்துப் பெண்களை மட்டும் குறிவைத்து நடக்கும் பிரச்னையோ மட்டுமல்ல. உலகின் ஒவ்வொரு மூலையிலும் நடந்துகொண்டிருக்கிறது. ஒலிம்பிக் சாம்பியனுக்கும் நடந்துகொண்டிருக்கிறது! அமெரிக்க ஜிம்னாஸ்டிக் டீமின் டாக்டர் லாரி நாசர், 14 ஆண்டுகளுக்கும் மேலாக வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததற்காக 125 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றார். இந்திய விளையாட்டு ஆணையத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் மட்டுமே 45. அதில் பெரும்பாலானவை பயிற்சியாளர்கள் மீதானது. அவற்றில் பல குற்றச்சாட்டுகள் இன்னும் முடித்துவைக்கப்படவில்லை.

இந்தியாவில் இந்த பிரச்னைகள் முடிவுக்கு வரவேண்டுமெனில், நம் குரல்கள் ஓங்கி ஒலிக்கவேண்டும். இல்லையேல், இதுவும் நிலுவையில் உள்ள விசாரணையாகவே முடிந்துவிடக்கூடும். அதேசமயம், சட்ட ரீதியான நடவடிக்கைகளால் மட்டுமே இந்த பிரச்னை சரியாகிவிடாது. மாற்றம் சமூகத்தின் ஒவ்வொரு தரப்பிலிருந்து வரவேண்டும். பெற்றோர்கள், பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள், விளையாட்டு அமைப்புகள், சக தோழர்கள் என எல்லோரிடமும் ஏற்படவேண்டும்.

"சாதிக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். பொண்ணுங்க தங்களோட முழு எனர்ஜியையும் இந்த மாதிரி கழுகுகிட்ட இருந்து காப்பாத்திக்கிறதுக்காகவே செலவு பண்றாங்களே. ஒவ்வொரு நாளும் பிராக்டீஸ் போகணும், தன்னை சங்கடப்படுத்தியவன் முகத்தைப் பாக்கணும் அப்டிங்கும்போது அது எவ்ளோ கொடுமை. அப்பவும் இப்பவும் பொண்ணுங்கதான் குரல் கொடுத்திருக்காங்க. கூட இருந்த பசங்களாம் எதுவும் செய்யலைனு நினைக்கும்போது கோபமா வருது" என்கிறார் இந்திய கால்பந்து ஜாம்பவான் ராமன் விஜயன்.

'ஆண்களாக' யாரும் பெண்களைக் காப்பாற்றத் தேவையில்லை. ஆனால், ஒரு சகோதரனாக, தோழனாக அவர்களுக்குத் தோள் கொடுத்திருக்கவேண்டும். இப்படியொரு சூழலில் ஆண்கள் குரல் எழுப்பாமல் இருப்பதுவே, நாகராஜன் போன்றவர்களுக்குத் துணை இருப்பதாக தோன்றியிருக்கும். குரல் எழுப்பாமல் ஒவ்வொருவரும் தவறுக்குத் துணைபோயிருக்கிறார்கள். இனியேனும் இது நிகழாமல் இருக்கவேண்டும்.

ஏனெனில், நாளை பெண்கள் இந்தத் துறைக்கு வருவது அவசியம். நாகராஜன் பற்றிய செய்தி அறிந்ததுமே பல பெற்றோர்கள் தங்களை விளையாட்டுக்கு அனுப்பவேண்டுமா என்று யோசிக்கத் தொடங்கியிருப்பார்கள். பல பெண்களே கூட அப்படி யோசித்து ஒதுங்கிவிடக்கூடும். அட எத்தனை இடத்தில்தான் அவர்கள் போராடுவார்கள். பெற்றோர்களிடம் அனுமதி தொடங்கி, இப்படியான பயிற்சியாளர்களையெல்லம் கடந்து பெரிய அரங்குக்குச் சென்றால்கூட, அவர்களின் ஹார்மோன் அளவுவரை சரியாக இருந்தால்தான் அவர்களால் போட்டியிடமுடிகிறது. இவர்களுக்கு இதற்கு மேலும் எத்தனை கஷ்டங்கள்தான் கொடுக்கப்போகிறோம்!

"13 வருஷம் இந்தத் துறையில இருந்திருக்கேன். இருந்தும் இதுபத்தித் தெரியல. போன்லயே பேசிட்டு கிரவுண்டு பக்கம் போகாம இருந்திட்டோம். அப்டி தொடர்ந்து போயிருந்தா, ஏதோவொரு பொண்ணுக்கு நம்ம மேல நம்பிக்கை வந்து அப்பவே சொல்லியிருக்கலாம்" என்று குற்றவுணர்ச்சியில் கலங்குகிறார் இந்தப் பிரச்னையை வெளியே கொண்டுவந்த பத்திரிகையாளர் டி.என்.ரகு.

"நாங்கதான் அவருக்கு இடம் கொடுத்துட்டோமோனு எங்கள நாங்களே வருத்திக்கிட்டோம்", "அன்னிக்கு நாங்க சொல்லியிருந்தா, இன்னைக்கு வரைக்கும் நடக்காம இருந்திருக்குமோ" என்று நாகராஜனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் குற்றவுணர்ச்சியிலேயே தினமும் வெதும்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப் பலரும் தங்கள் மீது குற்றமோ என்று வருந்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், நேற்றுவரை நடந்த குற்றங்களுக்கு நாகராஜனும் அவரைப் போன்றவர்களுமே குற்றவாளிகள். ஆனால், நாளை இன்னொரு பெண்ணுக்கு இந்த இன்னல்கள் நடக்காமல் இருக்க, இந்தப் பிரச்னைகளால் பயந்து விளையாடிக்கொண்டிருக்கும் தன் பெண்ணை வீட்டுக்குள் பெற்றோர்கள் அடைக்காமல் இருக்க, இன்று நீதிக்காக குரல் கொடுப்பதும் நம்மை நாம் மாற்றிக்கொள்வதும் அவசியம். இன்று குரல் எழுப்பாதவர்கள், மாறாதவர்கள் ஒவ்வொருவருக்கும் நாளைய தவறில் நிச்சயம் பங்கிருக்கிறது.

நாகராஜனிடம் பயிற்சி பெற்ற பெண்கள் முன்னால் இருக்கும் இலக்கை நோக்கி மட்டும் ஓடியிருக்கவில்லை. பின்னால் துரத்தும் மிருகத்தின் பிடியிலிருந்து தப்பித்துவிடவும்தான் ஓடியிருக்கிறார்கள். ஆனால், கால்களை மட்டும் பார்த்துவிட்டு பதைபதைத்த அவர்கள் முகத்தைக் கவனிக்கத் தவறிவிட்டோம் நாம். அவர்களாக தங்கள் பிரச்னையைச் சொல்வதற்கான வெளியையும், நம்பிக்கையையும் இச்சமூகம் அவர்களுக்குக் கொடுத்திருக்கவில்லை. தடகள வீரர்களுக்கான அங்கீகாரத்தையும், வாழ்வாதாரத்தையும் எளிதில் கொடுக்க மறுக்கும் நாம், இனி அந்த நம்பிக்கையையாவது கொடுக்கலாம்!

அடுத்த கட்டுரைக்கு