அமெரிக்காவின் ஒரேகன் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவருக்கான 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் முதல் இடத்தைப் பிடித்துத் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார் அமெரிக்க வீரர் ஃப்ரெட் கெர்லி. சாதனையாளராகத் திகழும் யாருமே அத்தனை எளிதான பாதையைக் கடந்து வந்திருக்கமாட்டார்கள். ஃப்ரெட் கெர்லியின் வாழ்க்கைப் பயணமும் இதில் விதிவிலக்கல்ல.
ஃப்ரெட் கெர்லிக்கு வெறும் இரண்டு வயது இருக்கும்போது அவரின் தந்தை சிறைக்குச் செல்கிறார். அதன்பிறகு இவரையும் இவரின் 4 உடன்பிறப்புகளையும் தத்தெடுத்து வளர்க்கிறார் இவரின் அத்தை. ஆனால் அத்தை வீட்டில் மொத்தம் 13 பேர். அனைவருக்கும் சேர்த்து ஒரே ஒரு படுக்கையறைதான்.
தன் இளமைக் காலம் பற்றிக் கூறும் கெர்லி, "நாங்கள் 13 பேரும் ஓவிய பேலட்டில் இருக்கும் வண்ணங்களைப் போலத்தான் அந்த அறையிலிருந்தோம். ஆனாலும், நாங்கள் தினமும் மகிழ்ச்சியாகவே நாள்களைக் கழித்தோம்."


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டெக்சாஸில் உயர்கல்வி படித்து முடிக்கும் வரை ஓட்டப்பந்தயத்தின் பக்கம் கெர்லி வரவே இல்லையாம். காரணம் அவர் ஒரு கால்பந்தாட்ட வீரர். ஆனால், தோள்பட்டை எலும்பில் ஏற்பட்ட முறிவு காரணமாகக் கால்பந்தை விட்டு ஒதுங்க வேண்டிய நிலை ஏற்படவே ஓட்டப்பந்தயத்தின் பக்கம் நகர்ந்தார் அவர். மேலும் மூன்றாண்டுகளுக்கு முன்புவரை 400 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் மட்டும் கவனம் செலுத்திய கெர்லி, கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அதன்பிறகே 200 மீட்டருக்கு வந்தார். பின்னர் கோவிட் காலத்தில்தான் 100 மீட்டர் ஒட்டப்பந்தயங்கள் ஓடத்தொடங்கினார்.
2017-ம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் 4×400 தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர், அதே பிரிவில் 2019-ம் ஆண்டு தங்கம் வென்றார். 2018-ம் ஆண்டு வாண்டா டைமண்ட் லீகின் 400 மீட்டர் பந்தயத்தில் முதலிடம், 2021-ம் ஆண்டு அதே தொடரின் 100 மீட்டர் பந்தயத்தில் முதலிடம் வென்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கின் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் எனத் தொடர்ந்து தன்னை நிரூபித்து வந்தார் கெர்லி.

Popeye கெர்லி!
Popeye என்ற கார்ட்டூன் பாத்திரத்தை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். அதுவரை சாதுவாக இருக்கும் Popeye ஒரு டப்பா கீரையைச் சாப்பிட்டவுடன் பலசாலியாக மாறுவார். இதைப்போலவே தன் வீட்டில் வளரும் Spinach-ஐ கையுடன் கொண்டு வரும் கெர்லி, அதைப் போட்டிக்கு முன் சாப்பிட்டதாகத் தெரிவித்துள்ளார். அதனால், இவரை ‘Real Popeye’ என்று செல்லமாக அழைத்து அதை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
தற்போது நடைபெற்று வரும் உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டிகளில் ஒலிம்பிக் தங்கம் வென்ற இத்தாலியின் மார்ஷல் ஜேக்கப்ஸ் மற்றும் பிரிட்டனின் சார்னல் ஹியூக்ஸ் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க வீரர்கள் காயம் காரணமாகக் கலந்து கொள்ளவில்லை.

இறுதிப்போட்டியின் முதல் 85 மீட்டர்கள் பின்னடைவிலிருந்த கெர்லி சரியான நேரத்தில் வேகமெடுத்து 100 மீட்டர்களை 9.86 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். 100 மீட்டர் பந்தயத்தின் முதல் மூன்று இடங்களைப் பிடித்ததும் அமெரிக்கர்களே. இரண்டாம் இடத்தை பேர்சியும் (Marvin Barcy), மூன்றாம் இடத்தை ப்ரோமெல் (Trayven Bromell) ஆகியோர் கைப்பற்றினர். இதேமாதிரியான சாதனையை 1991-ம் ஆண்டு டோக்கியோவில் நிகழ்த்தியது அமெரிக்கா. தற்போது 31 ஆண்டுகளுக்குப் பிறகு இச்சாதனையைச் சொந்த மண்ணில் நிகழ்த்தியுள்ளது அமெரிக்கா.
"சிறந்த செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். நீங்கள் எங்கு உள்ளீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. அப்படிச் செய்கையில் உங்கள் பழைய இடத்தில் இல்லாமல் நிச்சயம் வளர்ந்து இருப்பீர்கள்!"போட்டிக்குப் பின் கெர்லி உதிர்த்த வார்த்தைகள் இவை.
கெர்லி கூறியதுபோல, நம் வாழ்க்கையின் 85 மீட்டர் வரை நாமும் பின்னிலையில் இருக்கலாம். ஆனால் கடைசி 15 மீட்டரில் நாம் உழைத்த உழைப்பு நமக்கான வெற்றியை நிச்சயம் பரிசளித்திடும். கெர்லியின் வெற்றியும் நமக்குச் சொல்வது இதைத்தான்!