Published:Updated:

அலிசன் ஃபெலிக்ஸ்: உசைன் போல்ட் சாதனையை முறியடித்தவர்; பெண்களுக்கு மகப்பேறு சலுகைகள் பெற்றுத்தந்தவர்!

அலிசன் ஃபெலிக்ஸ்

2017 உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளி, இரண்டு தங்கம் வென்று சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக பதக்கங்கள் வென்றவர் என்ற உசைன் போல்ட் (14 பதக்கங்கள்) சாதனையை முறியடித்து புது சாதனை (16 பதக்கங்கள்) படைத்தார்.

அலிசன் ஃபெலிக்ஸ்: உசைன் போல்ட் சாதனையை முறியடித்தவர்; பெண்களுக்கு மகப்பேறு சலுகைகள் பெற்றுத்தந்தவர்!

2017 உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளி, இரண்டு தங்கம் வென்று சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக பதக்கங்கள் வென்றவர் என்ற உசைன் போல்ட் (14 பதக்கங்கள்) சாதனையை முறியடித்து புது சாதனை (16 பதக்கங்கள்) படைத்தார்.

Published:Updated:
அலிசன் ஃபெலிக்ஸ்
ஒரு குழந்தை தன் தந்தையுடன் அமெரிக்காவில் உள்ள ஹேவார்ட் மைதானத்திற்கு (Hayward Field) செல்கிறாள். தன் முகத்தில் பெருமகிழ்வுடன் களத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தன் தாயைப் பார்த்து, ஆரவாரமாகக் குதித்து, கைதட்டிக் கொண்டிருக்கிறாள். அவர் மட்டுமல்ல மைதானத்திலிருந்த மக்கள் அனைவரும் அவர் கால்கள் ஓட ஓட கண்களை அதே வேகத்தில் நகர்த்திக்கொண்டிருந்தனர். அமெரிக்காவின் ஆகச்சிறந்த விளையாட்டு வீராங்கனைகளுள் ஒருவரான இவர், முதல் முறையாக தன் சொந்த நாட்டில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஓடிக்கொண்டிருந்தார். ஆனால் வாழ்விலோ கடைசி முறையாக ஒரு சர்வதேச போட்டியில் ஓடிக்கொண்டிருந்தார். இந்த முறையும் பதக்கம் அவர் கழுத்தை அலங்கரிக்கத் தவறவில்லை. ஓடிக்கொண்டிருந்தவர் வேறு யாருமில்லை, அலிசன் ஃபெலிக்ஸ்!
அலிசன் ஃபெலிக்ஸ்
அலிசன் ஃபெலிக்ஸ்
David J. Phillip

கலிபோர்னியா நகரத்தில் நவம்பர் 18, 1985 பிறந்து வளர்ந்தவர் அலிசன் ஃபெலிக்ஸ். அவரின் தந்தை பால், இளம் வயதில் ஒரு ஓட்டப்பந்தய வீரர். இப்போது தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வருகிறார். அவரது தாய் மர்லீன் ஒரு பள்ளி ஆசிரியர். அலிசனிற்கு நீளமான கால்கள். அவருக்கு விளையாட்டு ஆர்வம் அண்ணன் வெஸ்ஸிடம் இருந்து வந்த ஒரு விஷயம். ஆனாலும் ஒன்பதாம் வகுப்புவரை ஓட்டப்பந்தயம் பக்கம் வரவில்லை அலிசன்.

பள்ளியில் ஒருமுறை பயிற்சியாளர் ஜானதன் பேட்டான் புது வீரர்களைத் தேர்ந்தெடுக்க ஓட்டப்பந்தயம் நடத்தும் போது அதில் அலிசன் பங்குபெற்றார். மிகவேகமாக ஓடிய அலிசனைக் கண்டு பயிற்சியாளர் நம்பமுடியாமல் தூரத்தைத் தப்பாக அளந்துவிட்டதாக நினைத்து மீண்டும் ஓடச்சொன்னார். வேகம் குறையாமல் மீண்டும் அதே வேகத்தில் ஓடி பயிற்சியாளரின் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அன்று ஓடத்தொடங்கிய அலிசனின் கால்கள் இப்போதுதான் ஓய்ந்துள்ளன.

பள்ளியில் ஓடத்தொடங்கிய பத்து வாரத்திலேயே மாநில போட்டிக்குத் தகுதி பெற்ற அலிசன் அங்கு அனுபவமிக்க பலவீரர்களுக்கு நடுவில் புதுமுகமாய் சென்று 200மீ ஓட்டப்பந்தயத்தில் ஏழாவது இடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அடுத்த மூன்று ஆண்டுகளில் பல வெற்றிகள் அலிசன் பக்கம் வந்துசேர்ந்தன. 2003இல் 200 மீட்டரை 22.51 நொடிகளில் கடந்து கலிஃபோர்னியாவில் உயர்நிலைப் பள்ளி அளவிலான சாதனையை முறியடித்தார். விரைவிலேயே மெக்ஸிகோவில் நடந்த போட்டி ஒன்றில் 200 மீட்டரை 22.11 நொடிகளில் ஓடி U20 பிரிவில் புதிய உலக சாதனைப் படைத்தார் அலிசன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அலிசன் ஃபெலிக்ஸ்
அலிசன் ஃபெலிக்ஸ்
Ashley Landis

அந்த நேரத்தில் அமெரிக்காவின் சிறந்த ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்த மரியோன் ஜோன்ஸ் குழந்தை பெற்று ஓய்விலிருந்ததால் அலிசன் மீது அனைவரின் கண்களும் இருந்தது. பள்ளியில் இருக்கும் போதே புகழின் வெளிச்சத்திற்கு வரத்தொடங்கினர் அலிசன். ஆனால் உலக சாதனை நீண்ட நாள் நீடிக்கவில்லை. 22.11 நொடிகளில் வைத்த உலக சாதனை போட்டி முடிந்த ஒரு மணி நேரத்தில் ஊக்கமருந்து சோதனை செய்யாத காரணத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் அது வெறும் அமெரிக்கா அளவிலான சாதனையாக மாறியது. இது அலிசனின் அறியாமையால் வந்த விளைவு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பள்ளி முடித்தபின் ஒட்டப்பந்தையத்தை இன்னும் தீவிரமாகப் பார்க்கத் தொடங்கினர் அலிசன். கலிஃபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் சேர்ந்த அலிசன் அந்தப் பல்கலைக்கழகத்திற்காக ஓடாமல் அதற்குப் பதில் அடிடாஸ் நிறுவனத்துடன் ஆறாண்டு ஒப்பந்தம் கையெழுத்திட்டார். அந்த ஒப்பந்தத்தில் முன்னாள் ஒலிம்பிக் ஒட்டப்பந்தய வீரரும் பிரபல பயிற்சியாளருமான பேட் கனொலி அலிசனுக்குப் பயிற்சியளித்தார். அப்போதுதான் அலிசனின் வாழ்வின் ஓட்டத்தில் ஒரு தடுமாற்றம் வந்தது.
அலிசன் ஃபெலிக்ஸ்
அலிசன் ஃபெலிக்ஸ்
Ashley Landis

2004 ஜூன் மாதம் அலிசன் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டார். பொதுவாக இன்ஹேலர் பயன்படுத்த அனுமதி இருந்ததால் அந்தத் தடுமாற்றத்தால் அவர் வாழ்வின் ஓட்டத்தை நிறுத்தமுடியவில்லை. 2000ஆம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக்ஸில் அமெரிக்காவின் நட்சத்திர வீராங்கனை மரியோன் ஜோன்ஸ் பெற்ற ஐந்து பதக்கங்களும் ஊக்கமருந்து பிரச்னையால் திரும்பி வாங்கப்பட்டன. மேலும் ஜோன்ஸால் 2004 ஒலிம்பிக்ஸின் ஒட்டப்பந்தயங்களில் பங்குபெற முடியவில்லை. இதனால் பல புதுமுக அமெரிக்கர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதைப் பயன்படுத்தி அலிசன் 2004 ஒலிம்பிக்ஸில் 200 மீட்டரை 22.18 நொடிகளில் கடந்து, தன் முதல் ஒலிம்பிக் பதக்கத்தை (வெள்ளி) வென்று ஜூனியர் உலக சாதனை படைத்தார்.

ஒலிம்பிக் பதக்கம் வென்றபின் அவரது பதக்க வேட்டை தொடங்கியது. 2005 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சாம்பியன் பட்டம் வென்று இளம் வயதிலேயே (19 வயது) சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையைப் படைத்தார். பின்னர் 2007 தடகள சாம்பியன்ஷிப்பிலும் சாம்பியன் ஆனார். இவர் முதல் முறையாக 22 நொடிக்குக் கீழ் சென்று 200 மீட்டரை 21.81 நொடிகளில் கடந்தார். அதுமட்டுமில்லாமல் தொடர் ஓட்டப்பந்தயத்திலும் (4x 100மீ மற்றும் 4x400மீ) பங்குபெற்ற அலிசன் அதிலும் தங்கப்பதக்கம் வென்று ஒரே உலக சாம்பியன்ஷிப்பில் மூன்று தங்கம் வென்ற இரண்டாவது வீரர் ஆனார். 2008 ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற அலிசன் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தன் முதல் ஒலிம்பிக் தங்கத்தை வென்றார். 2009 சாம்பியன்ஷிப்பில் மீண்டும் தங்கம் வென்று 23 வயதிலேயே மூன்று முறை உலக சாம்பியன் ஆகி உலகத்தின் கவனத்தை ஈர்த்தார். மேலும் 200 மீட்டரில் மட்டும் கலக்கி வந்த அலிசன் விரைவில் அமெரிக்கா அளவிலான போட்டியில் 100மீ சாம்பியனும் ஆனார்.

அலிசன் ஃபெலிக்ஸ்
அலிசன் ஃபெலிக்ஸ்
Gregory Bull

2011 சாம்பியன்ஷிப்பில் எப்போதும் போல் கலக்கி நான்கு பதக்கங்கள் வென்ற ஓரே வீரராக நாடு திரும்பினார் அலிசன். 2012 ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற நான்கு பிரிவுகளில் 100மீ ஓட்டப்பந்தயத்தில் மட்டும் தோல்வி, மற்ற மூன்று பிரிவுகளில் தங்கப் பதக்கம். 2013 சாம்பியோன்ஷிப்பில் காயம் காரணமாக 200மீ போட்டியின் பாதியில் வெளியேறியதால் அந்தத் தொடரில் எந்தப் பதக்கமும் வெல்லவில்லை. காயத்திலிருந்து மீண்டு வர அலிசனிற்கு ஒன்பது மாதங்களாகின. பின்னர் 2015 சாம்பியன்ஷிப்பில் 200மீ மற்றும் 400மீ போட்டிகள் இடையே குறுகிய கால இடைவெளி மட்டும் இருந்ததால் அலிசன் 400மீ ஒட்டப்பந்தயத்தில் மட்டும் பங்குபெற்றார். அதில் தங்கப் பதக்கம் வென்று சாம்பியன்ஷிப் வரலாற்றில் 200மீ மற்றும் 400மீ சாம்பியனான முதல் பெண் என்ற சாதனை படைத்தார். 400 மீட்டரில் தங்கத்தோடு சேர்த்து இரண்டு தொடர் ஓட்டப்பந்தய போட்டியில் வெள்ளியும் வென்றார்.

2016இல் மீண்டும் வாழ்வின் ஓட்டத்தில் தடுமாற்றம் வந்தது. இந்த முறை அது சற்று பெரிய தடுமாற்றம். உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்யும் போது ஏற்பட்ட விபத்தால் பல தசைகள் கிழிந்துவிட்டன. இதனால் அலிசனால் 2016 ரியோ ஒலிம்பிக்ஸில் 200மீ போட்டிக்குத் தகுதி பெற முடியவில்லை. 400மீ , 4x 100மீ , 4x 400மீ போட்டிகளில் பங்குபெற்ற அலிசன் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு தங்கம் வென்றார். பின்னர் 2017 உலக சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளி, இரண்டு தங்கம் வென்று சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக பதக்கங்கள் வென்றவர் என்ற உசைன் போல்ட் (14 பதக்கங்கள்) சாதனையை முறியடித்து புது சாதனை (16 பதக்கங்கள்) படைத்தார்.

19 ஆண்டுகளாய் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்த கால்கள் 2018இல் சிறிய ஓய்வுக்குத் தள்ளப்பட்டன. காரணம் அந்தாண்டு அலிசன் அமெரிக்காவின் ஒட்டப்பந்தய வீரர் கென்னெத் பெர்குசனை திருமணம் செய்து குழந்தை பெற்றார். வெளியில் யாருக்கும் சொல்லாமல் இருந்த அவர்கள் காதலுக்கு அன்று வயது 17. அதாவது 2002இல் ஜூனியர் அளவிலான போட்டியில் பங்கேற்கும் போதே இருவரும் சந்தித்து அவர்களுக்கிடையே காதல் மலர்ந்துள்ளது. அலிசன் கர்ப்பமாய் இருந்த 32வது வாரம் அலிசனிற்கு pre-eclampsia இருப்பது கண்டறியப்பட்டது.

அலிசன் ஃபெலிக்ஸ்
அலிசன் ஃபெலிக்ஸ்
Ashley Landis
ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களுக்கு அதிகமாய் இருக்கும் இந்தப் பிரச்னை அலிசனையும் விட்டுவைக்கவில்லை. குழந்தையின் ரத்த ஓட்டம் குறைவானதால் முன்கூட்டியே உயிருக்கு ஆபத்தான நிலையில் பிறந்தவள்தான் இன்று மைதானத்தில் தாய்க்கு ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் மகள் கேம்ரின்.

இந்த ஓய்வுக் காலத்தால் போட்டிக் காலத்திலும் பிரச்னைகளைச் சந்தித்தார் அலிசன். 2017 டிசம்பர் மாதம் Nike நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட்ட அலிசனால் 2018இல் நடந்த போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனபோது அவர் நிறுவனத்திடம் தொடர்ந்து ஊதியம் வழங்கக் கேட்டிருந்தார். ஆனால் Nike நிறுவனமோ முழு ஊதியம் வழங்க முடியாது என்றது. அதுமட்டுமில்லாமல் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றால் நீங்கள் Nike-ன் பெண்கள் முன்னேற்றத்துக்கான விளம்பரத்தில் இப்போதே நடிக்க வேண்டும் என்று கேட்டது.

அலிசன் ஃபெலிக்ஸ்
அலிசன் ஃபெலிக்ஸ்
Manuel Balce Ceneta

பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான அலிசன் Nike நிறுவன ஒப்பந்தத்தை நிறுத்தி வேறொரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தார். ஊதியம் வழங்காதது பெரிய பேசுபொருளாகி சர்ச்சை வெடித்தது. பின்னர் சர்ச்சையின் விளைவாக ஆகஸ்ட் 2019ஆம் ஆண்டு Nike நிறுவனம் பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியம் குறையாமல் 18 மாதம் ஓய்வு அளிக்கப்படும் என்றும் மேலும் போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பது அவரவரின் விருப்பம் என்றும் அறிவித்தது. இன்று Nike நிறுவனத்திடம் ஒப்பந்தத்திலுள்ள பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை இருக்கக் காரணம் அலிசனின் போராட்டம். அதாவது, சாதாரணமாக ஒப்பந்தத்திலிருந்து விலகியே அவ்வளவு பெரிய நிறுவனத்தை உலுக்கி இந்த நிலையைத் தேர்ந்தெடுக்கச் செய்திருக்கிறார் அலிசன்.

மகப்பேறு காலம் முடிந்து மீண்டும் களத்திற்கு வந்த அலிசனால் 2019 உலக தடகள சாம்பியன்ஷிப்பின் தொடர் ஒட்டப்பந்தயத்துக்கு மட்டுமே தகுதி பெற முடிந்தது. பங்கேற்ற பெண்கள் மற்றும் கலப்புத் தொடர் ஒட்டப்பந்தயங்களில் இரண்டு தங்கம் வென்று சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக தங்கம் வென்ற வீரராக இருந்த உசைன் போல்ட் சாதனையை முறியடித்தார்.
அலிசன் ஃபெலிக்ஸ்
அலிசன் ஃபெலிக்ஸ்
Ashley Landis

2020இல் கொரோனா, ஓடிக்கொண்டிருந்த மக்களை நிற்கச் செய்தது. ஆனால் அப்போதும் தெருக்களிலும் கடற்கரையிலும் காலியாக இருந்த மைதானங்களையும் பயன்படுத்தி தாயான பின்னர் களம் காணப் போகும் முதல் ஒலிம்பிக்ஸிற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார் அலிசன். ஜூன் 2021இல் அலிசன், அதாவது Nike நிறுவனத்திடம் இருந்து விலகிய இரண்டே ஆண்டுகளில் தன் சொந்த காலணி நிறுவனத்தை சாய்ஷ் (Saysh) என்ற பெயரில் தொடங்கினார். தன் சொந்த நிறுவனத்தின் காலணி அணிந்து 2021இல் நடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஓடத்தொடங்கிய அலிசனைப் பார்த்து, தாயானப்பின் முன்புபோல் இப்போதும் வெற்றி பெறுவாரா என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அந்தக் கேள்விக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து தன் கடைசி ஒலிம்பிக்ஸில் 400மீ ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும் தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும் வென்றார். இந்த வெற்றியின் மூலம் அதிக ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற அமெரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

அதேபோல, பராக் ஒபாமாவின் ஆட்சிக்குக் கீழ் செயல்பட்ட விளையாட்டுத் துறையின் பரிந்துரைக் குழுவிலும் அலிசன் ஃபெலிக்ஸ் இடம்பெற்றார் என்பது மற்றொரு பெருமைக்குரிய விஷயம்.

இப்போது நடந்துவரும் 2022 தடகள சாம்பியன்ஷிப்பில் தன் கடைசி போட்டியில் ஓடிய அவரின் கால்களுடன் மக்கள் கண்களை நகர்த்தியதற்குக் காரணம் 200 மீட்டர்கள் இல்லை, 19 ஆண்டுக்கால ஓட்டங்கள்! அலிசனின் குழந்தை கேம்ரின் மட்டும் தாயின் ஓட்டத்தைப் பார்க்கவில்லை, எத்தனையோ குழந்தைகள் அலிசனைப் பார்த்து ஓடத்தொடங்கியிருப்பார்கள். நிச்சயம் தொடங்குவார்கள்.

அலிசன் ஃபெலிக்ஸ்
அலிசன் ஃபெலிக்ஸ்
David J. Phillip
நம்மில் பலரும் ஓட்டப்பந்தயம் என்றால் உசைன் போல்ட் மட்டும்தான் என்ற மனநிலையில் உள்ளவர்கள்தான். அதற்குக் காரணமாக உசைன் போல்ட்டின் சிறப்புகள் ஒருபக்கம் இருந்தாலும், நம்மிடையே உள்ள மற்ற வீரர்களைப் பற்றியுள்ள அறியாமையும் பெரிய காரணம்தான். ஊரே உசைன் போல்டை புகழ்ந்த காலத்திலேயேதான் உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்தவர் அலிசன் ஃபெலிக்ஸ். ஓடிய கால்கள் ஓய்ந்தாலும் ஓடிக் கடந்த தூரத்தின் புகழ் தடயங்கள் என்றும் மறையாது.