Election bannerElection banner
Published:Updated:

கோபே பிரையன்ட் ஷூட்டிங்  கார்டாக ஆடினால், எதிரணிக்கு கிலி கிளம்பும்! #RIPKobeBryant

கோபே
கோபே

தன் 20 ஆண்டுகாலக் காதலான கூடைப்பந்துக்கு, 'டியர் பேஸ்கட்பால்' என்ற பெயரில் குறும்படம் மூலமாக ஒரு காதல் கவிதை எழுதினார். அது சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது

கூடைப்பந்து ரசிகர்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலகையும் நெஞ்சை கனமாக்கி, கண்களைக் கண்ணீர் குளமாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார் கோபே பீன் பிரையன்ட். யார் இவர்? இவரின் மரணம் உலகையே உலுக்கும் அளவுக்கு அப்படி என்ன சாதித்திருக்கிறார் அவர்?

கோபே
கோபே

அவர் இறுதி அத்தியாத்தின் முந்தைய பக்கங்களை எல்லாம் புரட்டிப்பாருங்கள். அவர் செய்த சாதனைகள் தெரியும். கூடைப்பந்து விளையாட்டுலகின் ஜாம்பவான் அவர் எனப் புரியும். இந்த ஆறரை அடி அசுரன், கூடைப்பந்தாட்ட உலகின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவர். அதிக வெற்றிகளால் அலங்கரிக்கபட்ட வீரர். லாஸ் ஏஞ்சலஸ் லேக்கர்ஸ் அணிக்காக இவர் அணிந்து விளையாடிய 8 மற்றும் 24 என்கிற இரண்டு ஜெர்ஸி எண்களையும் வேறு எவரும் தன் ஜெர்ஸி எண்களுக்கு வேறு யாரும் நியாயம் சேர்க்க முடியாது என, அந்த எண்களுக்கு ஓய்வளித்துவிட்டது அந்த அணி. இது அவர் படைத்த சாதனைகளின் ஒரு சோற்றுப் பதம்.

கூடைப்பந்தாட்ட ரசிகர்களால், `பிளாக் மாம்பா' என அழைக்கப்படும் பிரையன்ட், முன்னாள் கூடைப்பந்து வீரரான ஜோ பிரையன்டின் மகன். இவரின் இடைப்பெயரான `பீன்' அவரின் அப்பாவின் பட்டப்பெயரான `ஜெல்லி பீன்' என்பதிலிருந்து எடுத்தாளப்பட்டது. தனது 3 வயதில் கூடைப்பந்தைக் கையில் எடுத்தவர், ஹை ஸ்கூல் போட்டிகளில் பந்துகளை விரட்டி, கூடைகளை நொறுக்கிப் புள்ளிகளோடு சேர்த்து வெற்றிகளையும் சாதனைகளையும் தனதாக்கினார். NBA அரங்கில் கால் பதித்தபோது அவருக்கு வயது 17.

கோபே
கோபே

பிரையன்ட், ஷூட்டிங் கார்டாக நிற்பதைப் பார்க்கும்போதெல்லாம் எதிரணியினருக்கு கிலி கிளம்பும். அணியிலுள்ள சக வீரர்களுக்கு, அவர்தான் ஃபேவரைட் டீம் மேட். கிறிஸ்துமல் தினங்களில் அதிக பாயின்ட்களைக் குவித்த வீரர் என விசித்திரமான பல எண்களும் அவர் ரெக்கார்ட் புக்கில் இடம்பெற்றிருக்கின்றன. 2 முறை சம்மர் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம், எண்ணிலடங்கா ரெக்கார்டுகள் எனக் கூடைப்பந்தாட்ட சாம்ராஜ்யத்தின் மூடிசுடா மன்னன்களில் ஒருவராக ராஜநடைப் போட்டுக்கொண்டிருந்த பிரையன்ட், கடந்த 2017-ம் ஆண்டு விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். தன் 20 ஆண்டுகாலக் காதலான கூடைப்பந்துக்கு, 'டியர் பேஸ்கட்பால்' என்ற பெயரில் குறும்படம் மூலமாக ஒரு காதல் கவிதை எழுதினார். அது சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றது தனிக்கதை!

கூடைப்பந்து மட்டுமல்ல, இசை, தொலைக்காட்சி எனப் பல்வேறு துறைகளிலும் தன் தடம் பதித்த பன்முகக் கலைஞர் அவர். தன் 21வது வயதில், பின்னணி நடனக்கலைஞராகப் பணியாற்றிய வெனெஸா லெய்னை (17 வயது) காதலித்தார். இருவரும் திருமணம் எனும் பந்தத்துக்குள் தங்களை இணைத்துக்கொண்டு, சந்தோஷம், சச்சரவுகள் அனைத்தும் கண்டு நான்கு பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாகவும் மாறினர். ஜியனா, நடாலியா, பியன்கா மற்றும் கேப்ரி என நான்கு மகள்கள் இவர்களுக்கு.

கோபேவும் அவர் மகளும்
கோபேவும் அவர் மகளும்

இந்நிலையில்தான் அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நேற்று நடந்தேறியது. மரணம் பல நேரங்களில், இன்னும் மிளிரக் காத்திருக்கும் மின்மினி பூச்சிகளையும் தன் வலையில் பிடித்துக்கொள்கிறது. நேற்று காலை, இந்திய நேரப்படி இரவு 10.36 மணியளவில், தன் 13 வயது மகள் ஜியனா மற்றும் சில நண்பர்கள் சகிதம் ஹெலிகாப்டரில் பயணம் செய்தவர், 11.15 மணியளவில் மலையில் மோதி, விபத்துக்குள்ளாகி மறைந்தார். கூடவே, அவள் மகளும். கூடைப்பந்தாட்ட உலகில் ஜாம்பவனாக வலம் வந்தவரை, கடைசியாகக் காலம் அதன் கூடைக்குள் வாங்கிக்கொண்டது. அவர் உடல் மறைந்தாலும், பிரையன்ட் எனும் உணர்வு எல்லோர் ரசிகர்களின் மனதிலும் அவர்கள் வாழ்நாள் வரை உயிர்ப்போடுதான் இருக்கும்!

`5 முறை சாம்பியன்; அடுக்கடுக்கான சாதனைகள்!' - கோப் பிரயன்ட் மரணத்தால் கலங்கும் அமெரிக்கா #KobeBraynt
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு