Published:Updated:

தனலட்சுமி மட்டுமல்ல... தமிழகம் வென்றது 8 தங்கங்கள்!

எல்லோரும் தனலட்சுமியைப் பற்றித் தெரிந்துகொண்டிருக்க, சத்தமேயில்லாமல் பல தமிழக வீரர்கள் தேசிய அரங்கில் ஜொலிக்கத் தொடங்கினார்கள். மொத்தம் 8 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலம் என 24 பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியது தமிழ்நாடு. தனலட்சுமியைத் தவிர்த்து மேலும் 7 வீரர்கள் தங்கம் வென்றார்கள்.

தனலட்சுமி... கடந்த வாரம் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியது இந்த திருச்சி மின்னல். தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் டூட்டி சந்த், ஹீமா தாஸ் என இந்தியாவின் மிகப்பெரிய வீராங்கனைகளை வென்று அதிர்வலைகள் ஏற்படுத்தினார் தனலட்சுமி. அது ஓய்வதற்குள்ளாகவே பி.டி.உஷாவின் ஃபெடரேஷன் கோப்பை ரெகார்டை உடைத்தார். மொத்த இந்தியாவும் யார் இந்த தனலட்சுமி என்று கேட்கத் தொடங்கியது. எல்லோரும் அவரைப் பற்றித் தெரிந்துகொண்டிருக்க, சத்தமேயில்லாமல் இன்னும் பல தமிழக வீரர்கள் தேசிய அரங்கில் ஜொலிக்கத் தொடங்கினார்கள். மொத்தம் 8 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலம் என 24 பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியது தமிழ்நாடு. தனலட்சுமியைத் தவிர்த்து மேலும் 7 வீரர்கள் தங்கம் வென்றார்கள். அவர்களைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.

Elakkiyadasan (left) with Manikanda Arumugam & Dhanalakshmi

இலக்கியதாசன் - 200 மீட்டர்

200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கமும், 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும் வென்று அசத்தியிருக்கிறார் இலக்கியதாசன் கண்ணதாசன். தனலட்சுமியின் பயிற்சியாளரான மணிகண்ட ஆறுமுகம்தான் இவருக்கும் பயிற்சியாளர். நீளம் தாண்டுதலில் தன் தடகள வாழ்க்கையைத் தொடங்கிய இலக்கியதாசன், கடந்த 3 ஆண்டுகளாகத்தான் ஓட்டப்பந்தய பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். 21.19 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 200 மீட்டரில் தங்கம் வென்றிருந்தாலும், தன் செயல்பாட்டில் இலக்கியதாசனுக்குத் திருப்தியில்லை. “லாக்டெளன் பிரேக்கால் திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்கவேண்டியதாப் போச்சு. இன்னும் சிறப்பா பண்ணியிருக்கலாம்” என்று சொல்லும் அவர், வேகமெடுப்பதற்கு இன்னும் தன் கால்களை விரட்டிக்கொண்டிருக்கிறார்.

Vithya

வித்யா - 400 மீட்டர் தடை ஓட்டம்

கோயமுத்தூரைச் சேர்ந்த வித்யாதான் 400 மீட்டர் தடையோட்டத்தில் சாம்பியன். 59.59 நொடிகளில் இலக்கை எட்டி தங்கத்தைத் தட்டியிருக்கிறார் இந்த 22 வயது இளம் வீராங்கனை. ஆறாம் வகுப்பு படிக்கும்போது துளிர்விட்ட விளையாட்டு ஆசை இன்று அவர் கழுத்தில் தங்கத்தை அணிவித்திருக்கிறது. அப்பா டெம்போ வாகன ஓட்டுனர். வீட்டில் 3 பெண் பிள்ளைகள். ஆனால், அவை எதுவும் தன் பிள்ளைகளின் கனவுகளுக்குத் தடையாய் இருந்துவிடக்கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்திருக்கிறார் வித்யாவின் அம்மா. வித்யாவின் இரட்டைச் சகோதரி நித்யா 100 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலம் வென்றிருக்கிறார்.

Dharun Ayyasamy

தருண் அய்யாசாமி - 400 மீட்டர் தடை ஓட்டம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலேயே வெள்ளி வென்றவர், தேசிய அளவிலான போட்டியில் விட்டுவிடுவாரா என்ன! 50.16 நொடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றிருக்கிறார் தருண். ஆனால், நிச்சயம் இது தருணுக்குமே சந்தோஷமாக அமைந்திருக்காது. ஏனெனில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே தொடரில் 48.80 நொடிகளில் இலக்கை அடைந்து தேசிய சாதனை படைத்தார் அவர். அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு தன் வேகத்தை அவர் நிச்சயம் அதிகப்படுத்துவார் என்று நம்பலாம். திருப்பூரைச் சேர்ந்த தருணுக்கு அப்பா இல்லை. சிறுவயதிலிருந்தே, ஆசிரியரான அவர் அம்மாதான் தருணுக்கு எல்லாமுமாக இருந்துவருகிறார்.

Gracena G Merly

கிரேஸினா மெர்லி - உயரம் தாண்டுதல்

கொரோனா லாக்டெளனுக்குப் பிறகு அனைவரின் செயல்பாடும் கொஞ்சம் மந்தமாக இருந்தது. ஆனால், இப்போதுதான் தன் முழு திறனையும் கொட்டி விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் கிரேஸினா மெர்லி. உயரம் தாண்டுதலில், 1.84 மீட்டர் தாண்டி தங்கம் வென்றிருக்கிறார் இவர். லாக்டெளனுக்கு முன்பு புவனேஷ்வரில் நடந்த உலக யுனிவர்சிட்டி டிரயல்ஸில் தங்கம், மங்களூரில் நடந்த இந்திய யுனிவர்சிட்டி போட்டிகளில் தங்கம் என ரவுண்டு கட்டி அடித்தவர், இன்னும் தன்னை மெருகேற்றிக்கொண்டே இருக்கிறார். லாக்டெளனில் ஒவ்வொரு நாளும் மொட்டை மாடியில் செய்த வொர்க் அவுட்டுக்கும், பயிற்சிக்கும் பலனாக தன் சிறப்பான செயல்பாட்டைப் பதிவு செய்திருக்கிறார் மெர்லி.

Kanimozhi

கனிமொழி - 100 மீட்டர் தடையோட்டம்

100 மீட்டர் தடையோட்டத்தில் நம் கனிமொழியை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. 3 ஆண்டுகளாக நேஷனல் மீட்களில் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருப்பவர், ஃபெடரேஷன் கோப்பையிலும் தன் வெற்றிப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். புயல் வேகத்தில் தடைகளைத் தாண்டி ஓடியவர், 13.63 நொடிகளில் இலக்கை அடைந்தார். 11 வருடங்களாக தடகள பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அவர், தென்னக ரெயில்வேயில் பணிபுரிந்துவருகிறார். 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் பங்கெடுத்த கனிமொழி, அதில் ஆறாவது இடம் பிடித்தார்.

Veeramani

வீரமணி - 110 மீட்டர் தடையோட்டம்

110 மீட்டர் தடை ஓட்டத்தில் தங்கம் வென்று தேசிய அளவில் தன் முதல் பதக்கத்தை ருசித்திருக்கிறார் வீரமணி. கிரிக்கெட்டோடு தன் விளையாட்டுப் பயணத்தைத் தொடங்கியவர், ஃபிட்னஸை மேம்படுத்த தடகளம் பக்கம் தலைவைத்தார். மாரத்தான், 800 மீட்டர் என அப்படியே தடம் மாறி, 2013-ம் ஆண்டு தடை ஓட்ட டிராக்கில் கால்பதித்தார். ஒவ்வொரு முறையும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி வசப்படாமல் போக, கடந்த சில ஆண்டுகளாக வீரமணி ஓடிய ஒவ்வொரு ஓட்டமுமே வாழ்வா சாவா போராட்டம்தான். அந்தப் போராட்டத்தில் இப்போது இந்த 27 வயது இளைஞர் வென்றிருக்கிறார். தர்மபுரியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான வீரமணிக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை.

Rosy Paulraj

ரோஸி பால்ராஜ் - போல் வால்ட்

சிவகங்கையைச் சேர்ந்த ரோஸி பால்ராஜ் தான் இந்தியாவின் போல் வால்ட் சாம்பியன். 3.9 மீட்டர் குதித்து தங்கம் வென்றிருக்கிறார் இந்த சிவகங்கைப் பெண். ஈட்டி எறிதலில் தொடங்கிய இவரது தடகள வாழ்க்கை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் போல் வால்ட் பக்கம் திரும்பியது. தமிழகத்தில் இருப்பதோ இரண்டே போல் வால்ட் பயிற்சியாளர்கள். அதனால் சென்னை வரவேண்டும் என்ற நிலை. தன் மெடல்களால் பெற்றோருக்கு நம்பிக்கை கொடுத்து சென்னை வந்திறங்கினார் ரோஸி. அதே நம்பிக்கை இவரிடமும் இருக்க, தன் சிறப்பான செயல்பாட்டை பட்டியாலாவில் காட்டியிருக்கிறார். தங்கம் வென்றவர், இப்போது வேலை கிடைக்குமா என்று காத்துக்கொண்டிருக்கிறார். அதற்கு அவர் இன்னும் எவ்வளவு உயரம் தாண்ட வேண்டுமோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு