Published:Updated:

தேஜஸ்வின் சங்கர்: நீதிமன்றம் டு காமன்வெல்த் - நிராகரிக்கப்பட்டவர் வெண்கலம் வென்ற கதை!

தேஜஸ்வின் சங்கர் | Tejaswin Shankar

காமன்வெல்த் தொடருக்காக இந்தியத் தடகள கூட்டமைப்பு அறிவித்த 36 பேர் கொண்ட குழுவில் முதலில் தேஜஸ்வின் சங்கர் பெயர் இடம்பெறவில்லை. ஆனால்...

தேஜஸ்வின் சங்கர்: நீதிமன்றம் டு காமன்வெல்த் - நிராகரிக்கப்பட்டவர் வெண்கலம் வென்ற கதை!

காமன்வெல்த் தொடருக்காக இந்தியத் தடகள கூட்டமைப்பு அறிவித்த 36 பேர் கொண்ட குழுவில் முதலில் தேஜஸ்வின் சங்கர் பெயர் இடம்பெறவில்லை. ஆனால்...

Published:Updated:
தேஜஸ்வின் சங்கர் | Tejaswin Shankar
காமன்வெல்த் தொடரின் தொடக்க விழாவை நம்மில் ஒருவராய் நான்கு தினங்களுக்கு முன் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த தேஜஸ்வின் சங்கர் அத்தொடரின் நம்பிக்கை நாயகனாக தற்போது மாறியுள்ளார். உயரம் தாண்டுதல் போட்டியில் 2.22 மீட்டர் தாண்டி காமன்வெல்த் வரலாற்றில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்றுள்ளார் அவர்!

சங்கருக்கும் அவரின் வெற்றிக்குமான இடைவெளி வெறும் 2.22 மீட்டர் மட்டும் அல்ல… இவரின் பதக்கத்திற்குப் பின்னான ஒரு மாத காலத்தை இந்தியத் தடகள கூட்டமைப்புடனான போராட்டத்தில் செலவிட்டிருக்கிறார். அவரின் முழு கவனமும் பயிற்சியில் இல்லாமல் நீதிமன்றத்தில் உச்சரிக்கப்படும் அவரின் பெயரிலேயே இருந்தது.

தேஜஸ்வின் சங்கர்
தேஜஸ்வின் சங்கர்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காமன்வெல்த் தொடருக்காக இந்தியத் தடகள கூட்டமைப்பு அறிவித்த 36 பேர் கொண்ட குழுவில் முதலில் தேஜஸ்வின் சங்கர் பெயர் இடம்பெறவில்லை. சென்னையில் நடந்த தேசிய அளவிலான தடகளத் தொடரில் பங்கேற்காததுதான் அக்குழுவில் தேஜஸ்வின் பெயர் இடம்பெறாததுக்குக் காரணமாக இந்தியத் தடகள கூட்டமைப்பு கூறியது. அமெரிக்காவில் நடந்து வந்த NCAA (National Collegiate Athletic Association) சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று வந்ததால் அவரால் தேசிய அளவிலான தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. அமெரிக்காவில் படித்து வரும் தேஜஸ்வின் அங்கு நடைபெறும் NCAA Division 1 தொடரில் பங்கேற்று அதில் சாம்பியன்ஷிப் பட்டமும் வென்றுள்ளார். அதே நேரத்தில் 2 NCAA பட்டங்கள் வென்றிருக்கும் ஒரே இந்தியத் தடகள வீரர் இவரே. காமன்வெல்த்திற்குத் தகுதிபெற வேண்டிய 2.27 மீ உயரத்தை வைத்திருந்தும் காமன்வெல்த்திற்கான இந்திய அணியில் இடம்பெறாதது தேஜஸ்வினுக்கு அதிர்ச்சி அளித்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் தேஜஸ்வின் சங்கர். அவர் சார்பாக முதன்மை வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் மற்றும் வழக்கறிஞர் மாலக் பாட் ஆகியோர் வாதாடினர். 'தேஜஸ்வின் தேசிய சாதனையை (2.29மீ) அவர் வசம் வைத்துள்ளார். மேலும் தகுதி பெறுவதற்கான இந்தியத் தடகள கூட்டமைப்பின் அளவுகோலைக் கடந்த ஒரே இந்தியரும் இவரே. இந்நிலையில் தேசிய அளவில் நடந்த தொடரில் பங்கேற்க முடியாமல் போனதை தேசிய தலைமை பயிற்சியாளரிடம் தொடரின் முன்னே கூறியிருந்தார்' என்று தேஜஸ்வின் தரப்பிலான வாதங்களும் முன்வைக்கப்பட்டன.

கடந்த ஜூன் 22ம் தேதி தேஜஸ்வின் சங்கரை காமன்வெல்த் போட்டிகளுக்குத் தேர்வு செய்யப் பரிசீலனை செய்ய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்காததை வைத்துத் தேர்வு செய்யாமல் இருக்க முடியாது என்றும் பதக்கம் வெல்ல வாய்ப்பிருப்பவரை ஈகோ காரணமாய் எடுக்காமல் இருப்பது தவறு என்றும் தன் கண்டனத்தைத் தெரிவித்தது உயர்நீதிமன்றம். மேலும் இதற்குப் பதில் அளிக்க இந்தியத் தடகள கூட்டமைப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பினார் நீதிபதி ஜாஸ்மீட் சிங்.

இந்தியத் தடகள கூட்டமைப்பு சார்பாக வழக்கறிஞர் பார்த் கோஸ்வாமி நீதிமன்றத்தில் பதிலளித்தார். இந்தியத் தடகள கூட்டமைப்பின் தேர்வுக்குழு தேஜஸ்வின் உட்பட ஐந்து பேரைக் காமன்வெல்த்துக்குத் தேர்வு செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளது. ஆனால் இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்தியா சார்பாகப் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே இதைச் செயல்படுத்த முடியும் என்றும் அப்படி இல்லாவிட்டால் முன்னர் அறிவித்த வீரர்கள் பட்டியலே இறுதியாக இருக்க முடியும் என்றும் தெரிவித்தது.

இடங்களை அதிகரித்தால் தேஜஸ்வின் சேர்க்கப்படுவார் என்று உறுதியளித்ததையடுத்து பதில் வாதத்தை உயர்நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. மேலும், "ஒரு வீரரால் 4-5 ஆண்டுகள் மட்டுமே அவரின் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தமுடியும். அக்காலத்தில் இருக்கும் தேஜஸ்வினிற்கு நிறைய வாய்ப்புகள் வழங்க வேண்டும். நானாக இருந்தால் நிச்சயம் எல்லோரையும் போட்டியில் பங்கேற்க அனுப்பியிருப்பேன்" என்று நீதிபதி கூறினார்.

தேஜஸ்வின் சங்கர்
தேஜஸ்வின் சங்கர்

இச்சூழலில் உடற்தகுதிடத் தேர்வில் தோல்வியடைந்ததையடுத்து இந்திய தடகள அணியில் ஓட்டப்பந்தய வீரர் ஆரோக்கிய ராஜிவ் நீக்கப்படவே அவருக்குப் பதிலாக தேஜஸ்வின் சங்கர் வாய்ப்பு பெற்றார். ஆனால் காமன்வெல்த் கூட்டமைப்போ அவர் பெயர் தாமதமாகச் சேர்க்கப்பட்டிருப்பதால் அவரை விளையாட அனுமதிக்க இயலாது என்று தேஜஸ்வினின் பெயரை நிராகரித்தது. இதையடுத்து இரண்டு இந்திய வீரர்கள் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடையவே காமன்வெல்த் கூட்டமைப்போடு சந்திப்பு ஒன்றை நடத்தியது இந்தியத் தடகள கூட்டமைப்பு. அதற்குப் பின் கடந்த ஜூலை 22ம் தேதி அன்று தேஜஸ்வினிற்கு காமன்வெல்த்தில் பங்கேற்க அனுமதி கிடைத்தது. கடைசி நிமிடத்தில் கிடைத்த இவ்வாய்ப்பால் விசா பெற்று போட்டித் தொடங்குவதற்கு மூன்று நாள்கள் முன்பாகவே பர்மிங்ஹாமிற்கு சென்றார் தேஜஸ்வின்.

இத்தனை விஷயங்களை தாண்டித்தான் இவ்வெண்கலப் பதக்கம் தேஜஸ்வின் சங்கரின் கைகளை எட்டியிருக்கிறது. மனரீதியாக இவ்வனைத்தையும் சமாளித்து தேஜஸ்வின் நிகழ்த்தியிருக்கும் இச்சாதனை அத்தனை எளிய காரியமல்ல. வெளியில் பல தடைகளைத் தாண்டிய பின்னரே காமன்வெல்த் களத்தில் உயரம் தாண்டியிருக்கிறார் தேஜஸ்வின். அவர் தாண்டிய உயரம் பதக்கத்தை மட்டும் பெற்றுத் தரவில்லை, பல பேருக்குத் தக்க பதிலடியையும் பெற்று தந்துள்ளது.

எந்தக் கூட்டமைப்பு தேஜஸ்வினைத் தேர்ந்தெடுக்கவில்லையோ அதே கூட்டமைப்பு டிவிட்டரில் இப்போது அவருக்கான வாழ்த்து செய்தியைப் பதிவிட்டுள்ளது. வாழ்வில் பல உயரங்களை எட்ட வாழ்த்துகள் தேஜஸ்வின்!