Published:Updated:

அதிர்ச்சியளித்த பவன்; நம்பிக்கையூட்டிய நரேந்தர்; `டை' யைத் தவிர்க்க முடியாத தமிழ் தலைவாஸ்!

Narendra Kandela ( Pro Kabaddi )

நரேந்திர கண்டேலா எனும் இளம் வீரர் தமிழ் தலைவாஸூக்காக மிகச்சிறப்பாக ஆடிக்கொடுத்தார்.முதல் போட்டியிலேயே 10 ரெய்டு புள்ளிகளை அள்ளி 'சூப்பர் 10' அடித்து முத்திரை பதித்தார்.

அதிர்ச்சியளித்த பவன்; நம்பிக்கையூட்டிய நரேந்தர்; `டை' யைத் தவிர்க்க முடியாத தமிழ் தலைவாஸ்!

நரேந்திர கண்டேலா எனும் இளம் வீரர் தமிழ் தலைவாஸூக்காக மிகச்சிறப்பாக ஆடிக்கொடுத்தார்.முதல் போட்டியிலேயே 10 ரெய்டு புள்ளிகளை அள்ளி 'சூப்பர் 10' அடித்து முத்திரை பதித்தார்.

Published:Updated:
Narendra Kandela ( Pro Kabaddi )

புரோ கபடி லீகில் தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் போட்டியில் ஆடி முடித்திருக்கிறது. கடந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி பல போட்டிகளை 'டை' ஆக்கியிருந்தது. வெல்ல வேண்டிய போட்டிகளை 'டை' ஆக்குவதால் ரசிகர்களே அணியின் மீது கொஞ்சம் அதிருப்தியில்தான் இருந்தனர். புதிய சீசனில் புதிய பயணத்தில் தமிழ் தலைவாஸின் 'டை' வழக்கமும் முடிவுக்கு வந்து வெற்றிகளை நோக்கி பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இந்த புதிய பயணத்தையுமே தமிழ் தலைவாஸ் அணி டையுடனேயே தொடங்கியிருக்கிறது.

குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தங்களின் முதல் போட்டியை 31-31 என தமிழ் தலைவாஸ் அணி 'டை' செய்திருக்கிறது. ஒரு கட்டத்தில் நல்ல முன்னிலையில் இருந்த போதும் தமிழ் தலைவாஸ் எப்படி கோட்டைவிட்டது?
Pawan
Pawan
Tamil Thalaivas

பவன் ஷெராவத்தை 2 கோடிக்கும் அதிகமாக கொடுத்து தமிழ் தலைவாஸ் அணி ஏலத்தில் வாங்கியிருந்தது. இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்வதன் மூலமே அணி பவனைத்தான் அதிகம் நம்பியிருக்கப் போகிறது என்பது தெளிவாகியிருந்தது. பெங்களூரு அணிக்காக ரெய்டு புள்ளிகளை குவித்ததை போல இங்கேயும் குவிக்க வேண்டும். பவனிடமிருந்து தமிழ் தலைவாஸின் எதிர்பார்ப்பு இதுதான். ரசிகர்களுமே பவனின் வருகையால் உற்சாகமடைந்திருந்தனர். ஆனால், முதல் போட்டியிலேயே பவன் விஷயத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியிருந்தது.

போட்டி ஆரம்பித்த 10 நிமிடங்களிலேயே தமிழ் தலைவாஸ் அணி 5 வீரர்களை இழந்திருந்தது. பவனும் சாஹிலும் மட்டும் களத்தில் இருந்தனர். குஜராத் அணியின் தமிழக வீரரான சந்திரன் ரஞ்சித் ரெய்டு வர சூப்பர் டேக்கிளுக்கான முயற்சியிம் சாஹில் இறங்கினார்.

பவன் சாஹிலுக்கு உதவி சந்திரனை மடக்க முயலுகையில் முட்டி மடங்கி வலியில் துடித்து போனார். அவரை ஸ்ட்ரெச்சரில் ஏற்றி வெளியே சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

தமிழ் தலைவாஸ் அணிக்கு நிகழ்ந்த மிகப்பெரிய பின்னடைவாக இது பார்க்கப்பட்டது. அணியின் நம்பிக்கையே உடைந்து போனதை போன்ற சம்பவம் இது. இத்தோடு தமிழ் தலைவாஸ் ஆல் அவுட்டும் ஆனது. குஜராத் நல்ல முன்னிலையும் பெற்றது. ஆனால், இப்படி ஒரு சறுக்கலிலிருந்து பவன் இல்லாத நிலையிலும் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாகவே மீண்டு வந்தது.

நரேந்திர கண்டேலா எனும் இளம் வீரர் தமிழ் தலைவாஸூக்காக மிகச்சிறப்பாக ஆடிக்கொடுத்தார். கேலோ இந்தியா தொடர் மூலம் வெளிச்சம் பெற்று வந்திருக்கும் நரேந்திரனுக்கு புரோ கபடியில் இதுதான் முதல் போட்டி. முதல் போட்டியிலேயே 10 ரெய்டு புள்ளிகளை அள்ளி 'சூப்பர் 10' அடித்து முத்திரை பதித்தார்.
Narendra Kandela
Narendra Kandela
Pro Kabaddi

தமிழ் தலைவாஸ் அணிக்காக முதல் ரெய்டுக்கு பவன்தான் சென்றிருந்தார். ஆனால், அவர் முதல் புள்ளியை எடுத்துக் கொடுக்கவில்லை. நரேந்திர கண்டேலாதான் ரெய்டு சென்று போனஸோடு சேர்த்து 2 புள்ளிகளை வென்று கொடுத்தார். தமிழ் தலைவாஸ் பவனிடமிருந்து எதிர்பார்த்தை இந்த போட்டியில் நரேந்திர கண்டேலா செய்து கொடுத்தார். இந்த போட்டியின் ராக் ஸ்டார் அவர்தான். பவனுக்கு பதில் வந்த ஹிமான்ஸூவும் அஜிங்கியாவும் நரேந்தருக்கு ஓரளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

முதல் பாதி முடிவடைகயில் 16-18 என தமிழ் தலைவாஸ் கொஞ்சம் பின் தங்கியே இருந்தது. ஆனால், அடுத்த இரண்டாம் பாதி தொடக்கத்திலிருந்தே தமிழ் தலைவாஸ் மீண்டு வந்து ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. நரேந்தரின் தீவிரமான ரெய்டாலும் அபிஷேக்கின் வலுவான டேக்கிளும் குஜராத் அணி ஆல் அவுட் ஆனது. 21-18 என தமிழ் தலைவாஸ் அணி முன்னிலையை பெற்றது. இந்த முன்னிலை ஏறக்குறைய கடைசி நிமிடங்கள் வரை தமிழ் தலைவாஸ் வசமே இருந்தது. கடைசி ஒரு நான்கு நிமிடங்களில்தான் ஆட்டமே மாறியது.

குஜராத் கொஞ்சம் துடிப்பாக ஆடி புள்ளிகளை குவித்தது. முக்கியமான ரெய்டர்களான நரேந்தர், அஜிங்கியா, ஹிமான்சு மூவரும் பென்ச்சுக்கு சென்றனர். குஜராத் தேவையான புள்ளிகளை பெறவே போட்டி 31-31 என டை ஆனது.
Tamil Thalaivas
Tamil Thalaivas
Pro Kabaddi

போட்டி முழுவதும் ஒரு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது தமிழ் தலைவாஸ் அணிக்கு பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக, அந்தக் கடைசி சில நிமிடங்களில் நல்ல முன்னிலையிலிருந்து கோட்டைவிட்டது ஏமாற்றமே. குஜராத்தின் Do or Die ரெய்டுகளின்போது வம்படியாக டேக்கிளுக்கு சென்று பெரும்பாலான சமயங்களில் சொதப்பியது. டிஃபன்ஸில் லெஃப்ட் கார்னரில் சாஹில் வலுவாக இருக்க, அதே அளவு திறனை ரைட் கார்னரில் நின்ற சாஹர் வெளிக்காட்டவில்லை. ரைட் கவரில் நின்ற அபிஷேக்கே சில அசகாய முயற்சிகளை செய்து புள்ளிகளை வென்று கொடுத்தார்.

டிஃபன்ஸில் இன்னுமே ஒருங்கிணைந்த தன்மையை தமிழ் தலைவாஸ் அடைய வேண்டும். ரெய்டில் அஜிங்கியா இன்னும் அதிக புள்ளிகளை பெற்று கொடுத்தாக வேண்டும். பவனின் காயம் குணமடைந்து அவர் எப்போது வருவார் என தெரியவில்லை. அவர் வரும் வரை எப்படியாவது சமாளித்து சில வெற்றிகளை பெற்றுதான் ஆக வேண்டும். அதற்கான நம்பிக்கையை நரேந்திர கண்டேலா போன்ற வீரர்கள் கொடுத்திருக்கின்றனர். தமிழ் தலைவாஸ் அடுத்தடுத்து என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.