Published:Updated:

'எப்போதும் உண்மையின் பக்கமே இருப்போம்' - புரோ கபடி களத்தில் அசத்தும் தமிழக நடுவர்கள் #MyVikatan

விகடன் வாசகர்

கபடி ஒரு சிறந்த விளையாட்டு. மூச்சுப் பயிற்சி, கவனம், சமாளித்தல், சூழலுக்கேற்ப துல்லிய முடிவெடுத்தல்,நேரம் பார்த்து தாக்குதல்.. இப்படி பல்வேறு கோணங்களில் செயல்படக்கூடிய பன்முகத் திறமை கொண்ட வீர விளையாட்டு.

புரோ கபடி நடுவர்கள்
புரோ கபடி நடுவர்கள்

``ஒரு காலத்தில் தெருமுனைகளிலும், பொட்டல் காடுகளிலும், மணல் புழுதிகளிலும் விளையாடிய இந்தக் கபடி தற்போது மிகப்பெரிய சிந்தட்டிக் ஆடுகளங்களின் மேட்களில்தான் விளையாடப்படுகிறது. காலம் மாறிக்கொண்டு வருகிறது.நாமும் மாற வேண்டும்.''

‘கபடி…கபடி…கபடி..’என மூச்சுவிடாமல் ஆடுகளத்தில் தம் கட்டி, தொடை தட்டி.. எதிரணியை துவம்சம் செய்து விளையாடும் இந்த வீர விளையாட்டுக்கு தமிழகம்தான் பூர்வீகம் எனச் சொல்லப்படுகிறது. கபடி விளையாட்டு ஒரு காலத்தில் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் நடந்த ஒரு பரபரப்புத் திருவிழா.

தேர்வுபெற முழுக்க முழுக்க திறமை மட்டுமே அடிப்படைத் தகுதி. திறமையாளர்களுக்கான ஒரு மிகச்சரியான களம்தான் கபடி.

வெற்றிக் கோப்பைகளும், ரொக்கப் பரிசுகளும் கபடி வீரர்களின் வெற்றிக்கு பறைசாற்றும் பட்டயங்கள். சில கபடி வீரர்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்துக்கூட கொண்டாடப்பட்ட மண் நம் தமிழகம். அப்படி பெயர் பெற்ற கபடி விளையாட்டு, கிரிக்கெட்டின் ஆதிக்கத்திற்குப்பின் சற்று மவுசு குறைந்த விளையாட்டாக மாறிப்போனது. இந்தநிலையில் புரோ கபடியின் வருகையால் கபடிக்கு மீண்டும் மறுவாழ்வு கிடைத்திருக்கிறது .

கிரிக்கெட் அளவுக்கு இல்லை என்றாலும் புரோ கபடியை டிவிக்கு முன் அமர்ந்து உணர்வுப்பூர்வமாய் பார்த்து, ரசித்து, பொது இடங்களில் விமர்சிக்க ஒரு பெருங்கூட்டம் இங்கே தோன்றி இருப்பது கபடியின் மறுமலர்ச்சிக்கான அடையாளம்.

அந்த வகையில் புரோ கபடி சீஸன் -7 ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் -19 ஆம் தேதிவரை 90 நாLகள் நாட்டின் 12 மைதானங்களில் நடைபெறுகிறது. தமிழ் தலைவாஸ் உள்பட 12 அணிகள் இதில் மோதுகின்றன. தமிழகத்தைச் சார்ந்த வீரர்கள் பலரும் பல்வேறு மாநில அணிகளில் இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல் திருநெல்வேலி சுந்தர்ராஜ், வேலூர் சந்தியா, திருச்சி காளிதாசன், மதுரை குமரேசன், சென்னை சௌமியா, சிங்கம்புணரி சிவனேஷ்குமரன் என 6 பேர் புரோ கபடி-7 சீஸன் நடுவர்களாக தமிழகத்திலிருந்து தேர்வு பெற்று பொறுப்பேற்றுள்ளனர். இப்போட்டிக்கு மொத்தம் 30 பேர் நடுவர்களாக உள்ளனர். இதில் முதல் மைதானமான ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு தமிழகத்தின் திருநெல்வேலி சுந்தர்ராஜ், வேலூர் சந்தியா, சிங்கம்புணரி சிவனேஷ்குமரன் ஆகிய மூவரும் நடுவர்களாகப் பணிபுரிகின்றனர். மற்ற மூவரும் அடுத்த பேட்ஜில் நடுவர்களாக பணிபுரிய உள்ளனர்.

சுந்தர்ராஜ்
சுந்தர்ராஜ்

ஹைதரபாத் மைதானத்தில் ஜூலை 25 அன்று நடைபெற்ற 9 ஆவது லீக் ஆட்டமான தமிழ் தலைவாஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகளின் விறுவிறுப்பான திரில்லிங் ஆட்டத்திற்கு நடுவர்களாக பொறுப்பை முடித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.

தமிழகத்தின் பிரபல கபடி நடுவர் சுந்தர்ராஜ். திருநெல்வேலியை சேர்ந்தவர். அங்குள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இது அவர் சந்திக்கும் மூன்றாவது புரோ கபடி நடுவர் பணி. இதற்கு முன்னர் சீஸன்-2 மற்றும் சீஸன்-6 ஆகிய தொடர்களில் நடுவராக இருந்திருக்கிறார். அவருக்கு மூன்றாவது முறையாக இந்த சீஸன்-7லும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

2012 ஆம் ஆண்டில் பெண்கள் உலகக் கோப்பை கபடி போட்டிக்கு நடுவராகப் பணியாற்றி இருக்கிறார். அதுதான் அவருடைய முதல் இன்டர்நேஷனல் கபடி போட்டிக்கான நடுவர் பணி. அடுத்து 2016 இல நடைபெற்ற உலகக் கோப்பை ஆடவர் கபடி போட்டியிலும் நடுவர் பொறுப்பு வகித்திருக்கிறார்.அதேபோல் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய கோப்பைக்கான கபடி போட்டிக்கும் இந்தியா சார்பில் நடுவராக பணிபுரிந்திருக்கிறார்.

``தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடிக் கழகம்தான் கபடியை தமிழகத்தின் சிறந்த விளையாட்டாக உருவாக்க முடிவு செய்து ஏராளமான சிறந்த வீரர்களையும், எங்களைப் போன்ற நடுவர்களையும் உருவாக்கி வருகிறது. அவர்கள் இதற்காகவே சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறார்கள். அதில் கிடைக்கும் பயிற்சி எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. அதேபோல் புரோ கபடி சார்பாகவும் எங்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி பயிற்சி கொடுத்தார்கள். அதில் நாங்கள் நிறையக் கற்றுக் கொண்டோம்.

புரோ கபடி இன்று நிறைய இளம் வீரர்களை உருவாக்கி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஏராளமான கபடி வீரர்கள் உருவாகி வருகிறார்கள். இதற்கு தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடிக் கழகம் மிகப்பெரிய பங்களிப்பை செய்து வருகிறது. அவர்களின் கடும் முயற்சியால்தான் கபடியில் நிறைய வீரர்கள் பெயர் சொல்லும் அளவுக்கு அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும்.

சந்தியா
சந்தியா

ஒரு காலத்தில் தெருமுனைகளிலும், பொட்டல் காடுகளிலும், மணல் புழுதிகளிலும் விளையாடிய இந்தக் கபடி தற்போது மிகப்பெரிய சிந்தட்டிக் ஆடுகளங்களின் மேட்களில்தான் விளையாடப்படுகிறது. காலம் மாறிக்கொண்டு வருகிறது.நாமும் மாற வேண்டும். மேட்டில் போட்டிகள் நடக்கும்போதுதான் கேம் ஸ்பீட் ஆகுது. எனவே நம் தமிழக வீரர்கள் மேட்டில் பயிற்சி பெற்றால்தான் சர்வதேச தர மைதானங்களில் விளையாட முடியும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிராமப்புற வீரர்கள் மேட்டில் பயிற்சி பெெறும் வாய்ப்பு மிகவும் குறைவு. இதற்கு தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தற்போது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆடுகளத்துக்காக ஒரு மேட் கொடுத்துள்ளது. அதற்காக, தமிழக அரசினைப் பாராட்ட வேண்டும். இதனை இரண்டாகக் கொடுத்தால் இன்னும் ஏராளமானோர் பயிற்சி பெற முடியும். விளையாட்டுத்துறைக்கு தமிழக அரசு இன்னும் சிறப்பான உதவிகளைச் செய்ய வேண்டும்.குறிப்பாக அரசின் அனைத்து துறைகளிலும் கபடி வீரர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படவேண்டும். இப்போது தமிழக காவல் துறையில் மட்டும் கபடி வீரர்களுக்கு பணி வாய்ப்புகள் குறிப்பிட்டுச் சொல்லும்படி வழங்கப்பட்டு வருகின்றன. இதுபோல் மற்ற அரசுத் துறைகளிலும் கபடி வீரர்களுக்கு பணி வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். கபடி நம் தமிழகத்தின் வீரவிளையாட்டு. அதனை உயர்த்திப் பிடிக்க வேண்டிய பொறுப்பு நம் அரசின் கைகளில்தான் இருக்கிறது….” என்கிறார் சுந்தர்ராஜ்.

``எனக்கு சொந்த ஊர் வேலூர். இங்குள்ள தனியார்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிகிறேன். நான் தேசிய அளவிலான கபடிப் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். திருமணத்திற்குப்பின் விளையாட முடியவில்லை. எனவே நடுவர் பணிக்கான தேர்வெழுதி வெற்றி பெற்றேன். இதனையடுத்து நான் புரோ கபடியில் 6 ஆவது சீஸனிலும் நடுவாரக இருந்தேன். தற்போது இந்த தொடரிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடிக் கழகத்தின் வழிகாட்டல், கணவர் கதிரவன் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இதனால்தான் இந்த இடத்தில் நான் நிற்க முடிகிறது.கபடிப் போட்டியில் இளம் வீர்ரகளுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்கிறார் சந்தியா.

சந்தியா
சந்தியா

அடுத்து புரோ கபடியின் நடுவர் பணிக்கு புதுமுகமாய் தேர்வு பெற்றிருப்பவர்களில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சிவனேஷ்குமரனும் ஒருவர். அப்பா சிவனேசன். அம்மா தனலெட்சுமி. பொருளாதாரத்தில் நலிவுற்ற விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 12 ஆம் வகுப்புவரை அரசுப் பள்ளியில் படித்தவர். திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்து பின்னர் அதில் முதுகலை, எம்.எட். மற்றும் எம்.பில் பட்டங்கள் பெற்று தற்போது தனியார் பாலிடெக்னிக்கில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.

`` எனக்குச் சிறுவயது முதலே விளையாட்டில் மிகப்பெரும் ஆர்வம். குறிப்பாக கபடி விளையாட்டில் மிகப்பெரிய காதல் என்றுகூடச் சொல்லலாம். பள்ளி, கல்லூரி காலங்களில் மாவட்ட அளவிலும் பல்கலைக்கழக அளவிலும் விளையாடி பல்வேறு பரிசுகள் வாங்கி இருக்கிறேன்.

2013 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடிக் கழகம் நடத்திய நடுவர் பணிக்கான தேர்வில் மாநில கபடிப் போட்டிக்கான நடுவராக தேர்வு பெற்றேன். 2016 ஆம் ஆண்டில் இந்திய அமெச்சூர் கபடிக் கழகம் நடத்திய தேர்வில் தேசிய நடுவராக தேர்வானேன். இதற்கான எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு, உடல் தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நான் தேர்வு செய்யப்பட்டேன்.

2016 முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற கபடி போட்டிகளுக்கு நடுவராகப் பணிபுரிந்திருக்கிறேன். புரோ கபடி-7க்கான நடுவர் தேர்வு இந்தாண்டின் தொடக்கத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள தேசிய அளவிலான போட்டிகளுக்கு நடுவராக பணிபுரிந்திருக்க வேண்டும். 40 வயதுக்குள் இருக்க வேண்டும், பட்டப்படிப்பில் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இப்படி சில தகுதிகள் உள்ளன. அந்த அடிப்படையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 பேர் இந்த நேர்காணலில் கலந்துகொண்டோம். அதில் 7 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டோம்.

அடுத்து இரண்டாவது தகுதிச் சுற்று மும்பையில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 20 பேர் மட்டும் தேர்வானோம். அத்துடன் இதற்கு முன்னர் நடைபெற்ற புரோ கபடி போட்டிகளில் நடுவர்களாய்ப் பணிபுரிந்தவர்களில் 10 பேர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு மொத்தம் 30 பேர் புரோ-7 கபடி போட்டிக்கான நடுவர்களாக தேர்வாகி மும்பையில் பயிற்சி பெற்றோம்.

ஒரு போட்டி நடைபெறும்போது மொத்தம் 15 நடுவர்கள் களத்தைக் கண்காணிப்பார்கள். இந்த 30 நடுவர்களும் இரண்டு பேட்ச்களாக பிரிக்கப்பட்டு தற்போது பணிபுரிந்து வருகிறோம். நாங்கள் மூவரும் இந்த முதல் பேட்ச்சில் இருக்கிறோம். திருச்சி காளிதாசன், மதுரை குமரேசன், சென்னை சௌமியா ஆகியோர் அடுத்த பேட்ச்சில் நடுவர்களாக உள்ளனர். அவர்கள் மும்பையில் நடைபெற உள்ள போட்டிகளுக்கு நடுவர்களாக இருப்பார்கள். இவர்களில் திருச்சி காளிதாசன், சென்னை சௌமியா ஆகிய இருவரும் புரோ கபடி போட்டிக்கு என்னைப் போலவே புதிய நடுவர்கள்.

புரோ கபடி நடுவர்கள்
புரோ கபடி நடுவர்கள்

ஒவ்வொரு புள்ளியும் ஒரு அணிக்கு மிகமுக்கியமானது. எனவே மிகச் சரியான தீர்ப்பினை வழங்குவதில் நடுவர்கள் மிகஉன்னிப்பாக இருக்கிறோம். அப்படியும் தவறும் பட்சத்தில் மூன்றாவது நடுவர்கள் ஒளிப்பதிவுக் காட்சிகளின் பரீசீலனை அடிப்படையில் தீர்ப்பளிக்கிறார்கள். ஒவ்வொரு போட்டியின்போதும் ஆடுகளத்தில் மட்டும் 7 நடுவர்கள் இருப்பார்கள். மற்ற 8 பேரும் வெவ்வேறு இடங்களிலிருந்து வீரர்களை கண்காணிப்பார்கள். ஒருபோதும் தவறான தீர்ப்பினை வழங்கிவிடக்கூடாது என்பதில் நடுவர்களாகிய நாங்கள் மிகவும் கவனமாகவே இருக்கிறோம்.

ஒரு காலத்தில் கபடி என்பது கரடு முரடான, கொடுங்காயத்தையும், ஏன் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விளையாட்டு என்ற தோற்றம்தான் இருந்தது. ஆனால், தற்போது அவ்வாறில்லாமல் சர்வதேச அளவில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால் ஆபத்துக்கு இடமில்லை.

கபடி ஒரு சிறந்த விளையாட்டு. மூச்சுப் பயிற்சி, கவனம், சமாளித்தல், சூழலுக்கேற்ப துல்லிய முடிவெடுத்தல்,நேரம் பார்த்து தாக்குதல்.. இப்படி பல்வேறு கோணங்களில் செயல்படக்கூடிய பன்முகத் திறமை கொண்ட வீர விளையாட்டு.

சிறந்த கபடி வீரர்கள் பெரிய அளவில் புகழும், பணமும் சம்பாதிப்பதற்கான களமாக இன்று கபடி மாறி இருக்கிறது. அதனை நம் தமிழக இளைஞர்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது கபடியில் ஹரியானா, ராஜஸ்தான் மாநில இளைஞர்கள்தான் பெரிய அளவில் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால்தான் அவர்களின் எண்ணிக்கை புரோ கபடியில் இடம்பெறுவது அதிகமாய் இருக்கிறது.

தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடிக் கழகம் கபடியை ஒரு முன்னணி விளையாட்டாக மாற்ற முழு முயற்சிகள் எடுத்து வருகிறது. அதனுடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானது. அந்த அமைப்பின் மூலமாகவே கபடி வீரர்களும் என்னைப்போன்ற நடுவர்களும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

சிறந்த கபடி வீரர்கள் நம் தமிழக கிராமப்புறங்களில் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குப் போதுமான பயிற்சி அளித்தால் இன்னும் ஏராளமான நட்சத்திர கபடி வீரர்களை நாமும் நிச்சயம் உருவாக்க முடியும்
சிவனேஷ்குமரன்

இதில் மாநில அரசும் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும். மிகச் சிறந்த கபடி வீரர்கள் நம் தமிழக கிராமப்புறங்களில் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குப் போதுமான பயிற்சி அளித்தால் இன்னும் ஏராளமான நட்சத்திர கபடி வீரர்களை நாமும் நிச்சயம் உருவாக்க முடியும். .

புரோ கபடி-7 இல் தமிழகத்தைச் சேர்ந்த சேரலாதன், பிரபஞ்சன், செல்வமணி,சந்திரன் ரஞ்சித், அஜித் போன்றோர் இடம் பெற்றுள்ளனர். இன்னும் தமிழகத்தின் புதிய வீரர்கள் புரோ கபடியில் இடம்பெற வண்டும். இதில் தேர்வு ஆவதற்கு எவ்விதப் பரிந்துரைகளோ, பணமோ தேவை இல்லை. தேர்வுபெற முழுக்க முழுக்க திறமை மட்டுமே அடிப்படைத் தகுதி. திறமையாளர்களுக்கான ஒரு மிகச்சரியான களம்தான் கபடி.

கரூரைச் சேர்ந்த அஜித் என்ற வீரர் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கியவர். இருந்தும் அவருடைய திறமை மட்டுமே அவரை புரோ கபடி மைதானத்திற்கு அழைத்து வந்திருக்கிறது. நான்கூட அப்படித்தான்.

எனவே நம்முடைய தனித்துவமிக்க திறமை மட்டுமே நமக்கான தகுதியை உருவாக்கிக் கொடுக்கும். . இதில் மதம், ஜாதி, பணம்,அரசியல் என்ற பின்னணிக்கு எல்லாம் வேலை இல்லை. சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கு கபடி ஒரு மிகச்சிறந்த களம். அதனை புரோ கபடி தேசம் முழுவதும் ஏன் உலகம் முழுவதும் வெளிச்சப்படுத்தி வருகிறது.140 நாடுகளில் புரோ கபடி போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதனை நம் மாநில இளைஞர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சிவனேஷ்குமரன்
சிவனேஷ்குமரன்

கபடியில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. இன்று ஒவ்வொன்றையும் துல்லியமாய் கண்காணிக்க நவீனத் தொழில் நுட்பம் வந்து விட்டது. நம் மாநில வீரர்கள்தானே என்று நடுவர்கள் எவரும் எவ்வித 'சாப்ட் கார்னரும்' செய்ய முடியாது. சொல்லப் போனால் இது நேர்மையின் களம். புரோ கபடித் தொடர் முடியும்வரை இதில் பங்கேற்றுள்ள வீரர்கள் எவருடனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடுவர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. இப்படி கடுமையான விதிமுறைகள் நடுவர்களுக்கும் இருக்கிறது. நடுவர்களாகிய நாங்கள் எப்போதும் உண்மையின் பக்கமே இருப்போம்…” என்கிறார் இன்னும் மணமாகாத 31 வயது கபடி நடுவர் சிவனேஷ்குமரன்.

--பழ.அசோக்குமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

'எப்போதும் உண்மையின் பக்கமே இருப்போம்' - புரோ கபடி களத்தில் அசத்தும் தமிழக நடுவர்கள் #MyVikatan

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக்கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணைய வெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/