Published:Updated:

"லாக்டெளனில் ஒலிம்பிக் பயிற்சி என்பது பெரும் சவால்!" டோக்கியோ கனவுகளோடு TT வீரர் சத்யன்!

Sathiyan Gnansekaran
Sathiyan Gnansekaran

சத்யன் ஞானசேகரன் - இந்தியாவின் நம்பர் 2 டேபிள் டென்னிஸ் வீரர். தன் முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்காக டோக்கியோ செல்லத் தயாராகிக்கொண்டிருக்கிறார்.

கடந்த வாரம் தன் முதல் பயிற்சியாளரும் டேபிள் டென்னிஸ் ஜாம்பவானுமான சந்திரசேகரை கொரோனாவால் இழந்தவர், சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 1 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். பிரபலங்கள் பலர் முன்வந்து நிதி கொடுத்தாலும், தமிழக விளையாட்டு வீரர்களில் கொரோனா, லாக்டெளன் சவால்களை மீறி தன் கனவை நனவாக்கத் தயாராகிக்கொண்டிருப்பவரோடு பேசினேன்.

"சந்திரசேகர் சார் உங்களோட முதல் பயிற்சியாளர். அவருடைய இழப்பு உங்களை எந்த அளவுக்கு பாதிச்சது. எப்படி அதைக் கடந்து வந்தீங்க?"

"அதை ஏற்றுக்கொள்ளவே முடியல. ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. எனக்கு முதன் முதலா பேட் பிடிச்சு விளையாடக் கத்துக்கொடுத்தது அவர்தான். என்னை என்னோட ஸ்டைல்ல ஆடுறதுக்கு சப்போர்ட் பண்ணதும் அவர்தான். என்னோட ப்ளேஸ்மென்ட், வேரியேஷன் ரொம்பவுமே வித்யாசமா இருக்கும். ஆனால், அதுதான் என் பலம்னு ரொம்ப என்கரேஜ் பண்ணார். கோச் அப்டின்றதைத்தாண்டி பர்சனலாவும் ரொம்பப் பெரிய இழப்பு இது. என் அக்காவும் அவர்கிட்டதான் பிராக்டீஸ் ஸ்டார்ட் பண்ணாங்க. அதனால, என் அம்மா, அப்பானு மொத்த குடும்பத்துக்கும் அவர் ரொம்ப நெருக்கமானவர். அவர் இறந்த அன்னிக்கு எதுவுமே செய்யமுடியல. இன்னும் கஷ்டமா இருக்கு."

"இந்த மாதிரி கடினமான சூழ்நிலையை உளவியல் ரீதியா எப்படி சமாளிக்கிறீங்க. இந்த சூழ்நிலைல உங்க பயிற்சிகளை சரியா தொடர முடியுதா?"

"கஷ்டமான விஷயம்தான். ஏன்னா நாளுக்கு நாள் இந்தப் பிரச்னை தீவிரமாகிட்டே போகுது. நெருக்கமானவங்க, தெரிஞ்சவங்கனு பலருக்கும் வந்ததும் ரொம்ப பயத்தை ஏற்படுத்தியிருக்கு. அதனால, சோஷியல் மீடியால மெடிக்கல் தேவைகள் பற்றிய ரிக்வெஸ்ட்கள் வரும். அதை ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் ஒதுக்கி உதவி செய்ய முடிஞ்சவங்களுக்கு ஃபார்வேர்ட் பண்றேன். நியூஸ்கூட அப்பப்போதான் பார்க்குறேன். முடிஞ்ச வரை மனசை இலகுவா வச்சிக்க முயற்சி பண்றேன். யோகா, மூச்சுப் பயிற்சி தொடர்ந்து செஞ்சிட்டு இருக்கேன். என்னோட mental conditioning கோச், டிரெய்னர் எல்லோரோடவும் தினமும் வீடியோ கால் மூலமா பேசிட்டே இருக்கேன். தூக்கத்தை கரெக்டா மெயின்டெய்ன் பண்றேன். தினமும் 8 மணி நேரம் கட்டாயம் தூங்கிடுறேன்."

"உங்க ரெகுலர் ட்ரெய்னிங், ஃபிட்னஸ் பயிற்சிகள் எல்லாம் எப்படிப் போகுது?"

"இந்த முறை ரொம்பவுமே பிளான் பண்ணி பண்ணிட்டிருக்கேன். ஏன்னா மொமன்டம் ரொம்ப முக்கியம். போன லாக்டெளன்ல ரொம்பவுமே தடுமாறினேன். அதனால, இந்த முறை சரியான schedule ரெடி பண்ணி, அதை ஃபாலோ பண்றேன். லாக்டெளன் வருதுனு தெரிஞ்சதும் ஜிம் எக்யூப்மென்ட்லாம் வாங்கி வெச்சிட்டேன். அதனால, வெயிட் டிரெய்னிங்லாம் பிரச்னை இல்ல. போன லாக்டெளன் அப்போ எதுவும் சரியா பண்ண முடியல. அதனால 4 கிலோ வெயிட் போட்டிடுச்சு. என்னோட பாடி மெட்டபாலிஸத்துக்கு அது 4 வருஷத்துக்கான வெயிட்! இருந்தாலும், போன லாக்டெளன்ல இருந்து நிறைய விஷயம் கத்துக்கிட்டேன்.

அப்போ சரியா பிராக்டீஸ், வொர்க் அவுட்லாம் பண்ண முடியாம இருந்துச்சு. அதனால, இந்த முறை schedule-கு ஏத்த மாதிரி சரியா ஒவ்வொன்னையும் செஞ்சிட்டு இருக்கேன். முன்னையே சொன்ன மாதிரி என் ட்ரெய்னர்ஸ் கூடலாம் தினமும் ஆன்லைன்ல டிஸ்கஸ் பண்ணிட்டே இருக்கேன். என்ன இருந்தாலும் நேர்ல இருந்து டிரெய்ன் பண்ற மாதிரி இல்ல. லாக்டெளன் காலத்துல பயிற்சி என்பது சவால்தான். ஆனா, சூழ்நிலை இப்படி இருக்கு. முடிஞ்ச அளவுக்கு புரொடக்டிவா நேரத்தை உபயோகிக்கிறேன்."

"ஒரு அத்லெட்டுக்கு டயட் ரொம்பவே முக்கியம். ஆனா, வீட்ல இருக்கும்போது அதை சரியா மெயின்டெய்ன் பண்ண முடியுதா? என்ன டயட் ஃபாலோ பண்றிங்க?"

"போன லாக்டெளன் அப்போ முடியல. வீட்ல இருந்ததால அதிகம் சாப்பிடுற பழக்கம் வந்திடுச்சு. இப்போ அதையும் சரி பண்ணியாச்சு. என் டயட்டீஷியன்கூட தொடர்ந்து டச்ல இருக்கேன். ஒரு டயட் சார்ட் போட்டிருக்கு. ஸ்வீட், சாக்லேட் எல்லாம் முழுசா தவிர்த்தாச்சு. எனக்கு காபி ரொம்ப பிடிகும். ஆனா, பால் சேத்திக்கக்கூடாதுன்றதால அதையும் குறைச்சாச்சு. இப்போ தினமும் காலைல ஒரேயொரு தடவை மட்டும்தான். மத்த நேரத்துல கிரீன் டீ குடிக்க ஆரம்பிச்சிட்டேன். ஆரம்பத்தில கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. இப்போ பழகிடிச்சு.

அதேமாதிரி சாப்பாடும் பிரவுன் ரைஸுக்கு மாறியாச்சு. புரோட்டீன் டயட் அப்டின்றதால சிக்கன், காய்கறி, பழங்கள்லாம் அதிகம் சாப்பிட்றேன். ஒரே டைம்ல நிறைய சாப்பிட வேணாம்ன்றதால பழங்களை அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுக்கிறேன். இப்போ வீட்டில இருக்கிறது ஒருவகையில நல்லதாவும் இருக்கு. தேவையான உணவை நல்லபடியா சாப்பிட முடியுது.”

Sathiyan Gnansekaran
Sathiyan Gnansekaran

“ஒலிம்பிக் நெருங்கிட்டே இருக்கு. உங்களுக்கு முதல் ஒலிம்பிக் வேற எப்படி ஃபீல் பண்றீங்க?”

“ஆமா. இன்னும் ரெண்டு மாசம்தான் இருக்குன்னும்போது பயங்கரமா மோட்டிவேட் ஆகுது. ஆனா, இந்த சூழ்நிலையில இன்னும் அதிகமா ரெடி ஆகவேண்டியிருக்கு. மத்த நாட்டு அத்லெட்ஸ்லாம் ரெகுலர் பிராக்டீஸ் எப்பயோ ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. அதனால, நாம மொமன்டம் மெயின்டெய்ன் பண்றது ரொம்ப முக்கியம். இந்தியாவுக்காக ஒலிம்பிக்ல ஆடறதுக்குக் காத்துட்டிருக்கேன்."

"பிராக்டீஸ், ஜிம், யோகா... இதைத் தவிர்த்து வேற எப்படி நேரத்தைக் கழிக்கிறீங்க. எதாவது பொழுதுபோக்கு?"

"படம் பார்க்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். எல்லா மொழி படமும் பார்த்திடுவேன். முன்ன நிறைய பாத்துட்டு இருந்தேன். இப்போ வீக் எண்ட்ல அம்மா கூட சேர்ந்த எதாவது படம் பார்க்கிறேன். எப்போமே அம்மா கூட நேரம் செலவழிக்கப் பிடிக்கும். சினிமா, டேபிள் டென்னிஸ், அரசியல்னு நிறையப் பேசுவோம்."

அடுத்த கட்டுரைக்கு