Published:Updated:

சுஷில் குமார் மட்டுமல்ல... பா.ஜ.க எம்பியான இந்திய மல்யுத்த அமைப்பின் தலைவரும் கொலைக் குற்றவாளிதான்?!

சுஷில் குமார்
சுஷில் குமார்

சொத்து தகராற்றில் ஆரம்பித்த சண்டை ஒரு இளம் மல்யுத்த வீரரைப் பலி கொண்டிருப்பதோடு, இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன், முன்னாள் உலக சாம்பியனை கொலைகாரனாகவும் மக்கள் முன் நிறுத்தியிருக்கிறது.

"நான் யார், என் பலம் என்ன என்பதைக் காட்டவும், என்னை எதிர்த்தவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்பதை எல்லோருக்கும் புரிய வைக்கவும் சாகரை அடித்தேன். அதை என் நண்பனிடம் சொல்லி வீடியோ எடுக்கவும் வைத்தேன்!"
சுஷில் குமார்

மல்யுத்த உலகம் களங்கப்பட்டு நிற்கிறது. ‘இந்தியாவில் மல்யுத்தம் என்கிற விளையாட்டு இருக்கிறது, இங்கே மிகச்சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள்’ என்பதை உலகுக்குக் காட்டியவர் சுஷில் குமார். 2008-ம் ஆண்டு பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுஷில் குமார், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப்பிறகு மல்யுத்த விளையாட்டில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்பதோடு, தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்த பெருமையும் சுஷில் குமாருக்கு உண்டு.

இதற்கு நடுவே 2010-ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் பட்டமும் வென்று உலகின் மிகச் சிறந்த வீரராகவும், இந்திய மல்யுத்த வீரர்களுக்கெல்லாம் மிகப்பெரிய முன்னுதாரணமாகவும் உருவெடுத்தார் சுஷில்.

டெல்லியில் உள்ள சத்ரசால் ஸ்டேடியத்தில் அமைந்திருக்கும் அகாரா (குருகுலம்) என அழைக்கப்படும் மல்யுத்த பயிற்சியகத்தில் சுஷில் குமாரின் காலைத்தொட்டு வணங்கிவிட்டுத்தான் இளம் வீரர்கள் பயிற்சியை தினமும் தொடங்குவார்கள். மல்யுத்த அரங்கில் கிட்டத்தட்ட கடவுள் போல் வணங்கப்பட்டு வந்த சுஷில் குமாரின் இன்னொரு பக்கம் மோசமானது.

சத்ரசால் ஸ்டேடியத்தில் மல்யுத்த பயிற்சி மையத்தை தொடங்கிய சத்பல் சிங்கின் சீடன்தான் சுஷீல்குமார். சீடன் மட்டுமல்ல இப்போது அவரது மருமகனும்கூட. பல்வேறு பதக்கங்களை வென்று விளையாட்டு வீரனாக நாட்டின் மிக உயர்ந்த விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதையும் வென்ற சுஷில்குமார் கடந்த சில ஆண்டுகளாகவே குண்டர்களுடனும், கிரிமினல்களுடனும் தொடர்பில் இருந்திருக்கிறார். நிலப்பிரச்னை, சொத்து தகராறு, தொழில் மோதல் எனப் பலவற்றிலும் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்துகள் செய்யும் கும்பலோடு நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார் சுஷில்குமார். அதன் தொடர்ச்சியாகத்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்த கொலையில் கொலைக்குற்றவாளி ஆகியிருக்கிறார்.

சுஷில் குமார்
சுஷில் குமார்

சொத்துப் பிரச்னைக்காக நடந்த மோதலில் சத்ராசல் ஸ்டேடியத்தின் கார் பார்க்கிங்கில் வைத்தே சாகர் ராணா எனும் 23 வயது இளம் மல்யுத்த வீரர் கொல்லப்பட்டிருக்கிறார். சுஷில் குமார்தான் இதில் முக்கிய குற்றவாளி. 18 நாள் தலைமறைவாக இருந்து ஓடி ஒளிந்த சுஷில் குமாரை உலக மல்யுத்த தினமான நேற்று கைது செய்தது டெல்லி போலீஸ். சுஷில் குமாரின் கொலைக்குற்றமும், அவரது கைதும் இந்திய மல்யுத்த விளையாட்டுக்குப்பின் இருக்கும் கிரிமினல் குற்றத் தொடர்புகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் குற்றச்செயல்களில் ஈடுபவர்களில் மல்யுத்த வீரர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கிறது. வட இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கு பாடிகார்டாக இருப்பதில் தொடங்கி, வங்கிகளுக்கு சரியாகக் கடன் தொகையைக் கட்டாதவர்களை மிரட்ட, தொழிலதிபர்களிடம் இருந்து பணம் பறிக்க, டோல்கேட்களில் வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்ய என மல்யுத்த வீரர்களே பணியில் அமர்த்தப்படுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் ஹரியானாவில் ஒரு பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டதில் மல்யுத்த வீரரே சம்பந்தப்பட்டிருந்தார். ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித்தை சுட்டுக்கொல்ல முயன்ற கொலைக்குற்றவாளி முன்னாள் மல்யுத்த வீரர். கடந்த பிப்ரவரி மாதம் பெண் வீராங்கனையால் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மல்யுத்த பயிற்சியாளர் 5 பேரை சுட்டுக்கொன்றார். இப்படி மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து பல கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கிவருகின்றனர்.

மல்யுத்த வீரர்கள் மீது குவியும் குற்றச்சாட்டுகளை இந்திய மல்யுத்த அமைப்பு கண்டுகொள்வதே இல்லை என்கிற புகாரும் இருக்கிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (Wrestling Federation of India) டெல்லியில் இருக்கிறது. இதன் தலைவராக பொறுப்பில் இருப்பவர் பிரிஜி பூஷன் சரண் சிங்.

சுஷில் குமார்
சுஷில் குமார்

உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த இவர் கைசர்கஞ்ச் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். இந்தத் தொகுதியில் இருந்து ஆறு முறை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பா.ஜ.க எம்பியான இவர் மீதே பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதில் கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட வழக்குகளும் அடக்கம்.

இந்திய மல்யுத்த விளையாட்டைப் பொருத்தவரை சரண் சிங் சொல்வதுதான் சட்டம். போட்டிகள் நடக்கும்போது மைக் பிடித்தபடி அரங்கில் அமரும் சரண் சிங், நடுவர்களை மிரட்டுவது, தவறாக புள்ளிகளை வழங்கினார் என நடுவர்களை போட்டியின் இடையில் இருந்தே வெளியேற்றுவது, மல்யுத்த வீரர்களை கண்டபடி திட்டுவது என அதிரடி நிர்வாகத்துக்குப் பெயர்பெற்றவர்.

மல்யுத்தம் என்பது இரு முனை கத்தி. ஒரு பக்கம் புகழையும், பெருமையையும், அரசு வேலையும் தேடித்தரும் இந்த விளையாட்டு, கிரிமினல்களுடன் சேருவதற்கான வாய்ப்பையும் உருவாக்கித் தருகிறது. கிரிமினல்களுடனான தொடர்பும், அதன் மூலம் கிடைக்கும் பணமும், அரசியல் செல்வாக்கும் மல்யுத்த வீரர்களை ரவுடிகளாகவும், குண்டர்களாகவும், குற்றவாளிகளாகவும் மாற்றுகிறது.

ஒலிம்பிக் தொடரில் ஒவ்வொருமுறையும் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடித்தந்த ஒரு விளையாட்டு அமைப்பை முற்றிலும் சீரமைக்க வேண்டிய சரியான தருணம் இது!

அடுத்த கட்டுரைக்கு