Published:Updated:

`விராட் கோலியின் உதவிமட்டும் கிடைக்காவிட்டால்..!’ அமெரிக்க ஓப்பனில் கலக்கிய சுமித் நாகல் நெகிழ்ச்சி

தினேஷ் ராமையா

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் உதவி மட்டும் கிடைக்காவிட்டால், இந்நேரம்தான் எந்தநிலையில் இருப்பேன் என்றே தெரிந்திருக்காது என இளம் டென்னிஸ் வீரர் சுமித் நாகல் தெரிவித்திருக்கிறார்.

Smit Nagal, Virat kohli
Smit Nagal, Virat kohli ( AP )

கிரிக்கெட்டை மதமாகக் கொண்டாடும் இந்தியாவில் மற்ற விளையாட்டுகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுவது இயல்பு. அதேநேரம், மற்ற விளையாட்டுகளில் திறமையாகச் செயல்படும் வீரர்களை மக்கள் அங்கீகரித்தே வந்திருக்கிறார்கள். கிரிக்கெட் அளவுக்கு இல்லையென்றாலும் அவர்களுக்கென தனித்த அங்கீகாரம் இருக்கவே செய்கிறது. அப்படி, டென்னிஸ் விளையாட்டின் ஒற்றையர் பிரிவில் அசத்தி இந்திய அளவில் சமீபத்தில் கவனம் பெற்றவர் இளம் வீரர் சுமித் நாகல்.

sumit nagal
sumit nagal
AP

கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் தொடருக்குத் தேர்வான அவர், தனது முதல் போட்டியில் எதிர்கொண்டது உலகின் முன்னணி வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை. அந்தப் போட்டியில் தோல்வியைச் சந்தித்திருந்தாலும் உலக டென்னிஸ் அரங்கில் தனது திறமையான ஆட்டத்திறன் மூலம் கவனம் பெற்றிருக்கிறார் சுமித் நாகல்.

டென்னிஸ் விளையாட்டின் ஆல்டைம் சிறந்த வீரர்கள் பட்டியலில் முக்கிய இடம்பிடித்திருக்கும் ஃபெடரருக்கு எதிராக முதல் செட்டைக் கைப்பற்றி அசத்தினார் நாகல். அந்தப் போட்டியில் நாகல் தோல்வியைத் தழுவியிருந்தாலும், இந்திய அளவில் புகழ் வெளிச்சத்துக்கு வந்துவிட்டார் என்றே கூறலாம். போட்டிக்குப் பின்னர் பேசிய பெடரர், நாகலுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது எனப் பாராட்டிவிட்டு சென்றார். அந்த அளவுக்கு பெடரருக்குக் கடும் சவால் அளித்திருந்தார் அவர்.

Roger federer, sumit nagal
Roger federer, sumit nagal
Twitter

இந்தநிலையில், ஸ்ம்த் நாகலுக்கு பல்வேறு வகைகளிலும் இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் அறக்கட்டளை உதவியிருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மற்ற விளையாட்டு வீரர்களைப்போல் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நாகலுக்குச் சரியான தருணத்தில் விராட் கோலியின் அறக்கட்டளை உதவியிருக்கிறது. அந்த நம்பிக்கையில் களமிறங்கி டென்னிஸ் களத்தில் சாதிக்க துடிக்கிறார் ஸ்மித் நாகல்.

இதுகுறித்து பாம்பே டைம்ஸ் ஊடகத்திடம் பேசிய ஸ்மித் நாகல், ``விராட் கோலி அறக்கட்டளை கடந்த 2017-ம் ஆண்டு முதல் எனக்கு உதவி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நான் சரியாக விளையாடவில்லை. அதேபோல், பொருளாதாரரீதியில் கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்தேன். விராட் கோலி, எனக்கு சரியான சமயத்தில் உதவவில்லை என்றால் நான் என்ன செய்திருப்பேன் என என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

kohli
kohli

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு தொடரை முடித்துவிட்டு கனடாவில் இருந்து ஜெர்மனிக்கு விமானத்தில் பறந்துகொண்டிருந்தேன். அப்போது என்னிடம் வெறும் 6 டாலர்கள் மட்டுமே கையில் இருந்தது. எனக்கு உதவி கிடைத்த பின்னரும் என்னிடம் அவ்வளவுதான் பணம் இருந்தது. அப்படியென்றால், அதற்கு முன்பு நான் எத்தகைய சூழலை எதிர்கொண்டிருப்பேன் என்று நினைத்துப் பாருங்கள். ஆனால், அதையும் மீறி என்னால் வாழ முடிந்தது. தற்போது சூழல் நல்ல நிலைமைக்கு மாறியிருக்கிறது.

`ஃபெடரருக்கு எதிராக நம்பிக்கை தந்த இந்தியர்!’- யார் இந்த `ஜூனியர் விம்பிள்டன்’ சாம்பியன் சுமித்?

விளையாட்டு வீரர்களுக்கு சரியான முறையில் பண உதவி செய்து மக்கள் ஊக்குவித்தால், அவர்கள் நமது நாட்டுக்குப் பெருமை சேர்ப்பார்கள். விளையாட்டு உலகில் சிறந்துவிளங்கி, நமக்கு அது பெருமை தேடித் தரும். விராட் கோலியிடமிருந்து உதவி கிடைக்கும் அளவுக்கு நான் அதிர்ஷ்டம் பெற்றவன்’’ என்று கூறி நெகிழ்ந்திருக்கிறார்.