ஐசிசியை ஏமாற்றி 20 கோடி கொள்ளை!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியை ஏமாற்றி சுமார் 20 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் மின்னஞ்சல் கணக்குகளைப் பயன்படுத்தி இந்த கொள்ளை நிகழ்த்தப்பட்டுள்ளது. Phishing யுக்தி எனப்படும் இதில் ஐசிசியின் மின்னஞ்சல் முகவரி போன்ற போலி முகவரிக் கொண்டு பலருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகிறது. இதை நம்பி பணம் அனுப்புவோரின் தொகை, அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும். இது போல் ஒரு முறை அல்ல நான்கு முறை ஏமாந்துள்ளது ஐசிசி.

மறுப்புக்கிடமான சொற்களைப் பயன்படுத்தாதீர்கள்!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான ப்ரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார்கள் உள்ளிட்டவற்றைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷரண் சிங், சமூக வலைத்தளங்களில் தவறான கோஷங்கள், புகைப்படங்கள், கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. எந்த ஒரு அரசியல் கட்சியையோ, சமூகத்தையோ, இனம், மதத்தையோ இழிவு படுத்தும் கருத்தை நான் மறுக்கிறேன். மேலும் நான் எந்த ஒரு கட்சியையும் விட உயர்ந்தவன் அல்ல. என்னை ஆதரிப்போர் இத்தகைய பதிவுகளிடம் இருந்து விலகியிருங்கள் என பதிவிட்டுள்ளார்.

உம்ரானுக்கு ஷமியின் அட்வைஸ்!
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் முகம்மது ஷமி, ஜம்மு காஷ்மீரின் இளம் வீரர் உம்ரான் மாலிகிடம், "நீ வீசும் பந்தின் வேகத்திற்கு எதிராக விளையாடுவது அத்தகைய சுலபம் அல்ல. சரியான லைன் மற்றும் லெந்தில் வீசுவதில் கவனம் செலுத்த வேண்டும். அது நன்றாக வந்துவிட்டால், நீ இந்த கிரிக்கெட் உலகையே ஆளலாம்" என அறிவுரை வழங்கியுள்ளார்.
ரொனால்டோவின் லேட்டஸ்ட் ட்வீட்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சவுதி ப்ரோ லீக் போட்டியில் ரொனால்டோவின் முதல் ஆட்டம் அவருக்கு வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது. அல் நசீர் அணிக்காக விளையாடிவரும் ரொனால்டோ, நேற்றைய ஆட்டத்தில், எட்டிஃபாக் அணிக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இது குறித்து தனது ட்விட்டரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ரொனால்டோ.
இந்திய ஹாக்கி அணி சொதப்பல்!
ஒடிசாவில் நடந்து வரும் ஹாக்கி உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. இந்தியாவில் நடைபெறும் போட்டி என்பதால் ஆதிக்கம் செலுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, காலிறுதிக்கு கூட செல்லாமல் தோற்றிருக்கிறது. இதனால் ஒன்பதாவது இடத்திற்கான போட்டியில் ஜப்பானுடன் மோதவுள்ளது இந்தியா.

இனி ஹிஜாப் அணியப்போவதில்லை!
கஜகஸ்தானில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் ஈரான் நாட்டை சேர்ந்த சாரா ஹதீம் ஹிஜாப் அணியாமல் விளையாடினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இவருக்குத் தண்டனை வழங்க ஈரான் அரசு முடிவு செய்தது. இதனால் ஸ்பெயினில் தஞ்சமடைந்தார் சாரா. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "ஹிஜாப் அணிந்திருக்கும்போது நான் நானாக இல்லை, நான் நன்றாக உணரவில்லை. இந்த சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினேன். அதனால் இனி ஹிஜாப் அணியப்போவதில்லை என முடிவெடுத்தேன்" என்றார் சாரா.