பும்ரா, நடால், ஸ்மித், ஸ்டோக்ஸ், சிந்து... செம ஃபார்ம்... உங்கள் வாக்கு யாருக்கு?! #IconOfTheMonth

விளையாட்டு உலகம், கடந்த சில வாரங்களாக பல அசாத்திய செயல்பாடுகளைக் கண்டுகொண்டிருக்கிறது. கிரிக்கெட், டென்னிஸ், கபடி, பேட்மின்டன் என ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு சாம்பியன் ஒட்டுமொத்த விளையாட்டையும் தன் வசப்படுத்துகிறார்கள்.
இதோ, கடந்த ஒரு மாத காலத்தில் உலக அரங்கில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய சில செயல்பாடுகளைப் பட்டியலிடுகிறோம். அதில், உங்களைக் கவர்ந்த பர்ஃபாமன்ஸ் எது? உங்களைக் கவர்ந்த வீரர் யார்? கீழே இருக்கும் 8 வீரர்களின் செயல்பாடுகளையும் பார்த்துவிட்டு, கடைசியாக வாக்களியுங்கள்

ஜஸ்ப்ரீத் பும்ரா
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான்களே ஆச்சர்யப்படும் வகையில் மாபெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளார் பும்ரா. முதல் டெஸ்டில் அவுட்ஸ்விங்கர்களால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை மிரட்டியவர், இரண்டாவது போட்டியில் இன்ஸ்விங்கர்களால் பட்டையைக் கிளப்பினார். இதில் அட்டகாசமான ஹாட்ரிக் போனஸ்!
இந்திய கிரிக்கெட் இதுவரை காணாத... ஏன், மொத்த கிரிக்கெட் உலகமுமே இதுவரை காணாத பௌலராக உருவெடுத்துக்கொண்டிருக்கிறார் பும்ரா!

ரஃபேல் நடால்
33 வயது ஆகிவிட்டது. ஆகட்டுமே! இன்னும் அதே போர் வீரனாகப் போராடிக்கொண்டிருக்கிறார் ரஃபா. அமெரிக்க ஓப்பனை வென்று தன் 19-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றிவிட்டார். ஃபெடரர், ஜோகோவிச் போன்ற முன்னணி வீரர்கள் வெளியேறியபோதும், கொஞ்சம் கூட சறுக்காமல் தன் ஃபார்மைத் தொடர்ந்தார். இறுதிப் போட்டியில் மெத்மதேவ் கடும் சவால் கொடுத்தும், தன் கிளாசிக் ஆட்டத்தை வெளிப்படுத்தி வென்றுவிட்டார் நடால்.

ஸ்டீவ் ஸ்மித்
இப்படியொரு ஃபார்மில் ஒரு கிரிக்கெட் வீரரைப் பார்த்ததுண்டா? கோலி, ரூட், வில்லியம்சன் போன்றவர்களுடன் இவரை ஒப்பிட்டுக்கொண்டிருக்க, கிரிக்கெட் பிதாமகன் பிராட்மேனின் எண்களுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கிறார் 'ஸ்மட்ஜ்'. 5 இன்னிங்ஸில் 672 ரன்கள் எடுத்து, தன்னைப் பார்த்துக் கொக்கரித்த இங்கிலாந்து ரசிகர்களின் முன்பே டெஸ்ட் கிரிக்கெட்டின் அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

பி.வி.சிந்து
இந்தியாவின் முதல் `உலக சாம்பியன்'. ஒவ்வொரு முறையும் நழுவிக் கொண்டிருந்த தங்கத்தை கடைசியில் வசப்படுத்தியே விட்டார் சிந்து. அதுவும் இறுதிப் போட்டியில் நசோமியை அவர் கையாண்ட விதமெல்லாம், உச்சக்கட்ட ஆதிக்கம்! வேகம், துல்லியம், நுட்பம் என ஒவ்வொரு விஷயத்திலும் இது சிந்து 2.0! இதே ஃபார்ம் தொடர்ந்தால், டோக்கியோவில் இந்தியக் கொடி பறப்பது உறுதி.

லசித் மலிங்கா
ஒரு சில ஓவர்கள் இருந்தால் போதும் மலிங்காவால் ஒட்டுமொத்தமாக அனைத்தையும் தலைகீழாகத் திருப்ப முடியும். ஒன் சைடாகப் போய்க்கொண்டிருந்த உலகக் கோப்பைக்கு இரண்டே ஸ்பெல்களில் உயிர் கொடுத்த இந்த 36 வயது சீனியர், இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் புத்துயிர் அளித்திருக்கிறார். 125 ரன்களை டிஃபண்ட் செய்யவேண்டிய நிலையில், 4 பந்துகளில் 4 விக்கெட்! இன்னும் இவரது யார்க்கர்களுக்குப் பதில் சொல்லத் திணறிக்கொண்டிருக்கிறார்கள் பேட்ஸ்மேன்கள்.

பர்தீப் நர்வால்
ப்ரோ கபடி வரலாற்றில் 1000 ரெய்ட் புள்ளிகளைப் பெற்ற முதல் டெய்டர் என்ற மகத்தான சாதனையைப் படைத்திருக்கிறார் பர்தீப் நர்வால்! பாட்னா பைரேட்ஸ் அணிக்கு இந்த ப்ரோ கபடி சீசன் எதிர்பார்த்ததைப் போல் அமையவில்லை. தமிழ் தலைவாஸுக்கும் கீழே இருக்கும் அந்த அணியில் ஒருவர்கூட சோபிப்பதில்லை. யார் நன்றாக ஆடாவிட்டாலும் ஒற்றை ஆளாகப் போராடிக் கொண்டிருக்கிறார் பர்தீப். முதல் சில வாரங்கள் சொதப்பினாலும், இப்போது தன் வழக்கமான ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறார். கடைசி 6 போட்டிகளில் மட்டும் 103 புள்ளிகள் குவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆகச் சிறந்த இன்னிங்ஸை ஆடியிருக்கிறார் ஸ்டோக்ஸ். ஆஷஸ் தொடரின் உஷ்ணத்தைப் பொறுத்துக்கொண்டு, டெயல் எண்டர்களைத் துணையாய் வைத்துக்கொண்டு மிகச் சிறந்த சேஸிங்கை சாத்தியப்படுத்தியிருக்கிறார். கடைசி விக்கெட்டுக்கு ஜேக் லீச்சை வைத்துக்கொண்டு 76 ரன்கள்! கம்மின்ஸின் பௌன்சர்கள், ஹேசில்வுட்டின் பக்கா லைன், லயானின் சுழல் அனைத்தையும் சமாளித்து அவர் ஆடிய அந்த ஆட்டம், கிரிக்கெட்டின் வரலாற்றில் நிச்சயம் ஒரு மிகச்சிறந்த இன்னிங்ஸ்.

அஜித் குமார்
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்த் தலைவாஸ் அணிக்கு நடந்த ஒரே நல்ல விஷயம் என்றால் அது இது மட்டும்தான் - அஜித் குமாரின் எழுச்சி. கேலோ இந்தியா பள்ளிப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டு தமிழ்த் தலைவாஸ் அணிக்குள் நுழைந்தவர், வாய்ப்புக்காக கொஞ்சம் காத்திருக்கத்தான் வேண்டியிருந்தது. சீனியர் பிளேயர்கள் இருந்தும் அணி சொதப்ப, ஏதோ ஒரு வாய்ப்பு கொடுப்போமே என்று கொடுத்தார்கள். அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அசத்திவருகிறார் அஜித். கடைசி 3 போட்டிகளில் 14, 9, 10 என விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். தமிழ்த் தலைவாஸின் எதிர்காலம் இதோ..!
இவர்களுள் உங்களைக் கவர்ந்தவர் யார் என்பதை இங்கே வாக்களியுங்கள். அவர்களை ஏன் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதை கமென்ட்டில் பதிவிடுங்கள்.