அப்படியே இருக்கிறார் பி.டி.உஷா!
கால்களில் அதே உறுதி, கண்களில் அதே வெறி, நெஞ்சில் அதே லட்சியத் தாகம்! ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்று இப்போதும் அவரது உதடுகள் முணுமுணுக்கின்றன.
இந்தியாவின் தங்கப் பெண்ணான பழைய உஷாவுக்கும் இப்போதைய புதிய உஷாவுக்கும் இடையே ஒரே ஒரு வித்தியாசம்... முன்பு அவர் ஒரு தடகள வீராங்கனை.
இப்போது புதிய புதிய புயல்களை உருவாக்கி வரும் பயிற்சியாளர்!
'லண்டன் 2012' என்பதே இப்போது உஷாவின் இலக்கு. இன்னும் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, லண்டனில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு, வலுவான தடகள அணியை அனுப்ப, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒவ்வொரு நாளும் உழைத்துவருகிறார் உஷா. அதற்காகப் புதிய சீடர்களைத் தேடி அலைகிறார் இந்தியாவெங்கும்!
சென்னை - நேரு ஸ்டேடியத்தில், சின்னச் சின்னப் பட்டாம்பூச்சிகளுக்கு நடுவே, தனக்கான தேவதைகளைத் தேடிக்கொண்டு இருந்த பி.டி.உஷாவிடம் பேசினோம்....

"இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கி வருவேன் என்று தடகள வீராங்கனையாக இருந்தபோது பல முறை சொல்லியிருக்கிறேன். ஆனால், 84 ' லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் அதை நிறைவேற்ற முடியவில்லை. வெண்கலம்கூட வெல்ல முடியாமல் திரும்பினேன். அந்தக் குற்ற உணர்ச்சி என்னை அழுத்திக்கொண்டே இருந்தது. இன்னும் எனக்கு அந்த வேதனை குறையவே இல்லை. அதிலிருந்து விடு படத்தான் இந்தப் புதிய முயற்சி. வீராங்கனையாக இருந்து நான் இழந்தது ஒரு பதக்கம்தான். பயிற்சியாளராக இருந்து 10 பதக்கங்களையாவது வாங்கித் தராமல் விடமாட்டேன்!"
“ உங்களின் கனவு நனவாகக்கூடிய அளவுக்குச் சீடர்கள் கிடைத்திருக் கிறார்களா? "
" அந்த விஷயத்தில் நான் ரொம்ப லக்கி! முன்பு, எனக்கு எப்படி ஓ.எம். நம்பியார் என்கிற நல்ல பயிற்சியாளர் கிடைத்தாரோ, அதேபோல் இப்போது பத்து சிறந்த சிஷ்யைகள் கிடைத் திருக்கிறார்கள். இரண்டு வருடங்களாக என்னிடம் பயிற்சி பெற்றுவரும் அந்தச் சின்னப் பெண்கள், 2012 - ல் நிச்சயம் கலக்குவார்கள்! ”

“ என்ன மாதிரியான பயிற்சிகள் தருகிறீர்கள்? "
" என் சிஷ்யைகள் களத்தில் இறங்கு வதற்கு முன், தங்களுக்கு எந்தப் பிரிவில் வாய்ப்பு அதிகம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நான் ஒரு வீராங்கனையை 13 வயதில் தேர்ந்தெடுக்கிறேன். அவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு எல்லாப் பிரிவிலும் பயிற்சி கொடுக்கிறேன். பிறகு ஒரு தேர்வு நடத்துகிறேன். அவர் 100 - மீட்டர் ஓட்டத்தில் சிறந்தவராக இருந்தால், மேற்கொண்டு அந்த ஒரு பிரிவில் மட்டுமே பயிற்சி அளிப்பேன். மற்ற பிரிவுகளில் அவர் மூக்கை நுழைக்கக் கூடாது.
அந்த வகையில் என்னிடம் சேர்ந்த வர்கள் எதில் ஸ்பெஷலிஸ்ட் என்பதை இப்போதுதான் அடையாளம் கண்டுள்ளேன். குறிப்பாக, என் சிஷ்யைகளில் டின்டு லுகா என்ற பெண் 400 மீட்டர். ஓட்டத்தில் என்னைவிடச் சிறப்பாக ஓடுகிறாள். இன்னும் ஒரு வருடத்தில் - பாருங்கள்... அவள் எங்கேயோ போய்விடுவாள்! "
“ உங்கள் சிஷ்யைகள் ஏதாவது ஒரு பிரிவில் மட்டும்தான் கலந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானிப்பது ஏன்?
" என்றைக்குமே இலக்கு ஒன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி தேடி வரும். நானோ பல பிரிவுகளிலும் ஒலிம்பிக் பதக்கத்துக்கு ஆசைப்பட்டு, எதிலுமே தங்கம் வெல்ல முடியவில்லை. அந்த துரதிர்ஷ்ட நிலை என் சிஷ்யைகளுக்கு வரக் கூடாது. அதுதான் காரணம்! "

" முன்பு இருந்ததைப் போல், தடகளத்துக்கு இப்போது அவ்வள வாக ஆதரவில்லையே? ”
" யார் சொன்னது? ஒரு சானியா மிர்ஸா உருவானதும், ஒட்டுமொத்த இந்தியாவும் டென்னிஸ் பக்கம் திரும்பியதுபோல், என் சிஷ்யைகள் ஜெயிக்கத் துவங்கியதும், ஒட்டு மொத்த தேசமும் தடகளத்தின் பக்கம் திரும்பும்! "
“ ஊருக்கெல்லாம் பயிற்சி கொடுக்கிறீர்களே, உங்கள் மகனைத் தடகளத்துக்குக் கொண்டு வரும் எண்ணம் இல்லையா? "
சாருக்கு நீச்சலில்தான் ஆர்வம்! என் கணவர் சீனி வாசன் மாதிரியே உஜ்வலும் நீச்சல் குளத்திலேயே கிடக்கிறார். எழுந்து வரும்போது, எத்தனை பதக்கங்கள் கொண்டு வருகிறார் எனப் பார்க்கலாம்! ”
- புன்னகைக்கிறார் உஷா, புதிய கனவுகளுடன்!