Published:Updated:

``காவலர்களாக, தீயணைப்பு வீரர்களாக உருமாறிய இளைஞர்கள்!’’ - இலவச பயிற்சியால் சாதித்த கோச் செந்தில் #MyVikatan

விகடன் வாசகர்

``நான் போட்டிருந்த ஜெர்ஸி, ஷு கூட அவர் வாங்கிக் கொடுத்ததுதான்... குடும்பத்தில அவ்வளவு வறுமை.''

செந்தில் கணேஷ்
செந்தில் கணேஷ்

புதுக்கோட்டை செந்தில் கணேஷை சுற்றி சிறு குழந்தைகள் முதல் ஆண், பெண் என எப்போதும் இளைஞர் படை இருக்கும். எந்த நிகழ்வாய் இருந்தாலும் இவருக்காக வந்து குவியும் இளைய தலைமுறையினர் ஏராளம். புதுக்கோட்டை விளையாட்டு மைதானங்களில் இவரைச் சுற்றி எப்போதும், ``அண்ணே...”, ``சார்......” என்று ஒரு கூட்டம் வலம் வந்துகொண்டே இருக்கும். புதுக்கோட்டையில் விளையாட்டின் மீது நாட்டம் கொண்ட பிஞ்சுகளை எல்லாம் வெற்றித் திசைக்கு அழைத்துச் செல்லும் மனிதர் இவர். புதுகை மாவட்டத்தின் இளம் தலைமுறையினர் பலரும், விளையாட்டுகளில் வெற்றிகளும் விருதுகளும் குவிப்பதற்கும், அரசுப் பணிகளில் இடம் பெறவும் இவர் சிந்தி வரும் வியர்வையும் அளித்து வரும் பயிற்சியும் முக்கிய காரணம்.

செந்தில் கணேஷ்
செந்தில் கணேஷ்

இவரிடம் பயிற்சி பெற்றவர்களில் விளையாட்டுத்துறையின் சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் 9 பேர் காவல்துறை உதவி ஆய்வாளர்களாகவும் 15-க்கும் மேற்பட்டோர் காவலர்கள், தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் ஏராளமானோர் உயர் அரசுப் பணிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் தமிழக அரசு விளையாட்டுத்துறையின் மாவட்ட அளவிலான கோச்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் திருப்பூர் மாவட்ட தடகள பயிற்றுனர் திவ்யா நாகேஸ்வரி. இவர் இலுப்பூர் அருகில் உள்ள காஞ்சிராம்பட்டியில் வறுமையான சூழலில் பிறந்தவர். கிராமத்தின் முதல் தலைமுறை பட்டதாரியும்கூட.

" சாப்பாட்டுக்கே கஷ்டத்துல இருந்த நாங்க இன்னைக்கு பெரிய சம்பளத்துல மாவட்ட தடகள பயிற்றுனராய் உட்கார்ந்திருக்க காரணமே எங்க கோச் செந்தில் சார்தான். அவர் இல்லைன்னா எனக்கு இவ்வளவு பெரிய வாழ்க்கையே இல்லை. நான் போட்டிருந்த ஜெர்ஸி, ஷுகூட அவர் வாங்கிக் கொடுத்ததுதான். குடும்பத்தில அவ்வளவு வறுமை. கை கொடுத்தது விளையாட்டும் அதற்கான பயிற்சியும்தான்’’ என்கிறார் செந்தில் கணேஷிடம் பயிற்சி பெற்று 2,000 மீ, 5,000 மீ, 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தேசிய, தென்மண்டல, மாநில, பல்கலைக் அளவில் ஏராளமான தங்கப் பதக்கங்களைக் குவித்துள்ள திவ்யா நாகேஸ்வரி.

செந்தில் கணேஷிடம் பயிற்சி பெற்ற மாணவி
செந்தில் கணேஷிடம் பயிற்சி பெற்ற மாணவி

அதேபோல் ஈரோடு மாவட்டத் தடகள பயிற்றுனர் கண்மணிதேவியும் இவருடைய மாணவிதான்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள ஆண்டிக்கோன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தாயி. இதுவரை மாநில அளவில் 8 தங்கப் பதக்கங்கள், தேசிய தென்மண்டல அளவில் 2 தங்கப் பதக்கங்கள், வெள்ளிப் பதக்கங்கள்,வெண்கலப் பதக்கங்கள் பெற்றவர். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற தமிழக அரசின் 92-வது தடகளப் போட்டியின் நடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றவர்.

ஆண்டிக்கோன்பட்டி கிராமத்திலிருந்து புதுக்கோட்டைக்குச் சென்று கல்வி பயிலும் முதல் பெண் பிள்ளையும்கூட இவர்.

"எங்க அப்பா ஒரு ஏழை விவசாயி. சின்ன வயசிலிருந்தே விளையாட்டின்மீது எனக்கு தீரா ஆர்வம். இதைப் பார்த்துட்டு இவ என்ன ஆம்பளைப் பையன் மாதிரி விளையாட்டு. ஸ்போர்ட்ஸ்னு அலையுறா என எங்க ஊர் கிண்டலும் கேலியும் பேசியது. அதையெல்லாம் நான் கண்டுக்கவே இல்லை. 2015-ல் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியிலே சேர்ந்தேன். அப்போதான் கோச் செந்தில் சாரோட இலவசப் பயிற்சி தெரிஞ்சு நடைப்பயிற்சியில சேர்ந்தேன். அதிலிருந்து தொடர்ச்சியா வெற்றி பெற்று வர்றேன். இப்போ என்னை எல்லோரும் ஆச்சர்யமா பார்க்கிறாங்க. இன்னும் பெரிய வெற்றிகளைக் குவிப்பேன்..." என உற்சாகமாகப் பேசுகிறார், தற்போது மன்னர் கல்லூரியில் உடற்கல்வித் துறையில் பயின்று வரும் சாதனை மாணவி சாந்தாயி.

செந்தில் கணேஷ்
செந்தில் கணேஷ்

அதிகாலை 4 மணிக்கே எழுந்துவிடும் கோச் செந்தில் கணேஷ் தன்னை நாடிவரும் இளைய சமூகத்தினர் அனைவருக்கும் சாதி, மதம், கல்வித் தகுதி இப்படி எந்தப் பாகுபாடும் பார்க்காமல், அத்துடன் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் பயிற்சி அளித்து வருகிறார்.

தற்போது காலையிலும் மாலையிலும் 80 பேர் இவரிடம் பயிற்சி பெறுகின்றனர். குத்துச்சண்டை, ஓட்டம், பேட்மின்டன், நடை எனப் பல்வேறு தடகளப் பிரிவுகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சியளித்து வருகிறார்.

செந்தில் கணேஷ்
செந்தில் கணேஷ்

இவரிடம் பயிற்சிக்கு வருபவர்கள் பெரும்பாலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களே அதிகம். விளையாட்டு உடைகள், காலணிகள்கூட சொந்தமாக வாங்க முடியாத பிள்ளைகள் நிறைய பேர் இவரிடம் பயிற்சிக்கு வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான அடிப்படை உதவிகளையும் இவரே செய்து வருகிறார்.

உடற்கல்வித்துறையில் முதுகலைப் பட்டம், எம்.பில், தடகளத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றுள்ள இவர், தற்போது புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு ஆணையத்தில் பகுதி நேர தடகளப் பயிற்றுனராகப் பணிபுரிந்து வருகிறார்.

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் உடற்கல்வித்துறையில் பணியாற்றி திடீர் மரணமடைந்த முனைவர் வெ.சுந்தரமூர்த்தியை தன் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர். அவர்மீது கொண்ட அளவற்ற அன்பால் ஆண்டுதோறும் அவர் பெயரால் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி வருகிறார். இதனால் தன்னுடைய மாணவர்களை ஊக்குவிப்பதுடன், தான் நேசித்த ஆசிரியருக்கு அவருக்குப் பிடித்த விளையாட்டு மூலமாகவே அஞ்சலி செலுத்தி வருகிறார்.

ஆன்லைன் கேம்ஸ்களில் மூழ்கிப்போய்க் கிடக்கும் இளைய சமூகம் விளையாட்டு மைதானங்களை நோக்கி வர வேண்டும் என்பதே என் ஆசை.
கோச் செந்தில்

"விளையாட்டுமீது இப்போது எல்லோருக்கும் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கு. பெற்றோரும் நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கிறாங்க. உடல் நலம், மன நலம் எதையும் வெற்றி கொள்ளலாம் என்ற திடமான நம்பிக்கை,தோல்வியைத் தைரியத்துடன் எதிர்கொள்வது போன்ற பல விஷயங்களை விளையாட்டு மூலம் பெறலாம். குறிப்பாக, டீன் ஏஜ்ல பசங்களை எவ்வித தீய பழக்கங்களுக்கும் உள்ளாகாமல் கொண்டுபோக முடியும். ஆன்லைன் கேம்ஸ்களில் மூழ்கிப்போய்க் கிடக்கும் இளைய சமூகம் விளையாட்டு மைதானங்களை நோக்கி வர வேண்டும் என்பதே என் ஆசை.

விளையாட்டால் கட்டுக்கோப்பான உடல்நலத்தைப் பெறமுடியும். வாழ்க்கையில் எந்த ஒரு தோல்விக்காகவும் விளையாட்டு வீரன் தற்கொலை செய்துகொள்வதே கிடையாது. அந்த மனப்பக்குவத்தையும் பயிற்சியையும் விளையாட்டுதான் கொடுக்கிறது. இன்னும் சொல்லப்போனால் விளையாட்டின் மூலம் போதை பழக்கத்துக்கும் சமூக விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடாத ஒரு நல்ல இளைய சமூகத்தை உருவாக்க முடியும். இந்தப் பயிற்சியைக் கொடுப்பதில் நான் ஒரு கோச்சாக மிகுந்த சந்தோஷப்படுறேன். அண்ணன், தம்பி, தங்கை என்ற குடும்ப உணர்வோடு ஒவ்வொருவரும் பழகுகிறோம்.

செந்தில் கணேஷ்
செந்தில் கணேஷ்

நான் ஒரு நாள் கிரவுண்ட்டுக்கு வந்து என்னோட பிள்ளைகளை பார்க்க முடியலைன்னாக்கூட எனக்கு ரொம்ப வருத்தமாகிடும். எனக்குத் தெரிந்ததைக் கற்றுக்கொடுக்கிறேன். நல்ல மனிதர்களை அதுவும் சாதனைமிக்க மனிதர்களை உருவாக்குகிறேன். இந்த ஒற்றைச் சந்தோஷம் என் ஆயுளுக்கும் போதும்...." என்கிறார் செந்தில் கணேஷ்.

இதைவிட வேற என்ன வேண்டும் ஒரு மனுசனுக்கு..?!

செய்தி : பழ.அசோக்குமார்

MyVikatan
MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/