
வித்தியாச விளையாட்டுகள்
விளையாட்டுலகில் மாபெரும் ஆளுமைகளாக உச்சபட்ச சாதனைகளைச் செய்துகொண்டிருப்பவர்கள் எங்கிருந்து தங்களது பயணத்தைத் தொடங்கி யிருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?
நெருக்கடிமிக்க புழுதி பறக்கும் நம்மூர் தெருக்கள்தான் அவர்களின் தொடக்கப்புள்ளியாக இருந்திருக்கும். ஒன்றுமே அறியாமல் தங்களை ஒத்தவர்களுடன் தங்களுக்கே தங்களுக்கான விதிமுறைகளை வகுத்துக்கொண்டு மனம்போன போக்கில் ஏதோ ஒரு ஆட்டத்தை ஆடியிருப்பார்கள். அதுதான் அவர்களுக்கான பயிற்சிக்களமாக இருந்திருக்கும். கபில்தேவிலிருந்து சமீபத்திய சாதனையாளரான நடராஜன் வரை நாம் ஹீரோக்களாகக் கொண்டாடும் பலரும் இப்படித் தெருக்களிலிருந்து புறப்பட்டவர்களே.
தெருக்களில் ஆடப்படும் விளையாட்டுகளுக்கு எப்போதுமே ஒரு வரைமுறையே இருப்பதில்லை. கிடைக்கப்பெறும் சௌகரியத்தைப் பொறுத்து ஆட்டத்திற்கான விதிமுறைகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். விறகுக்கட்டை முதல் ஹாக்கி மட்டை வரை அத்தனையையும் கிரிக்கெட் பேட்டாக மாற்றி ஆடிய அனுபவம் என்னைப் போன்றே பலருக்கும் இருக்கக்கூடும். சிக்ஸ் அடித்தால் அவுட், ஒன் பிட்ச் கேட்ச் போன்ற வினோத விதிமுறைகளையெல்லாம் எல்லாருமே சிறுவயதில் கடந்து வந்திருப்போம்.

இந்தியாவைவிட மேற்கிந்தியத் தீவுகளில் இந்த ஸ்ட்ரீட் கிரிக்கெட் கலாசாரம் ரொம்பவே அடர்த்தியாக இருக்கிறது. அதன் விளைவாகத்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட்டர்கள் இந்த அளவுக்கு காட்டடி அடிக்கிறார்கள் என அவர்களின் அதிரடி அணுகுமுறைக்கு ஒரு சமூகக்காரணமும் சொல்லப்படுகிறது. கிரிக்கெட்டைப் போன்றே கால்பந்திலும் தெருக் கலாசாரம் பெரும் பங்கை வகிக்கிறது. ‘ஃபுட்சால்', '7s' போன்றவையெல்லாம் அந்த வகையில் தெருக்களில் ஆடப்படும் கால்பந்திலிருந்து உருவான வகைகள்தான்.
தென் அமெரிக்க நாடுகளில் ஸ்டிரீட் ஃபுட்பால் என்பது அந்த பிராந்தியத்தின் சிறுவர்களின் அன்றாடத்தோடு ஒன்றிப்போனது. அவர்களின் கால்கள் பந்துகளை உதைத்துத் தள்ள, பிரமாண்ட அரங்குகளும் புல் போர்த்திய மைதானங்களும் தேவையே இல்லை. பிரேசிலின் வீதிகளே அவர்களின் போர் பழகும் பயிற்சிக்களம். மெஸ்ஸி, நெய்மார் உட்பட நாம் சூப்பர் ஸ்டார்களாகக் கொண்டாடும் பல வீரர்களும் இப்படி தெருக்களில் கால்பந்து ஆடியவர்கள்தாம்.
குறிப்பாக, ‘ஃபுட்சால்' ஆடியவர்கள். ‘‘ஃபுட்சால் ஆட்டம் என்னுடைய திறனை வளர்க்கப் பெருமளவு உதவியது. என்னுடைய ஆட்டத்தை வேகப்படுத்திக்கொள்ளவும் சமயோசித முடிவுகளை எடுக்கவும் ஃபுட்சாலே அடிப்படையாக இருந்தது’' என நெய்மார் கூறியிருக்கிறார். பள்ளி முடிந்து வேகவேகமாக வீட்டிற்கு வரும் நெய்மார் பந்தைத் தூக்கிக்கொண்டு நண்பர்
களுடன் சேர்ந்து விளையாடச் சென்றால், நேரம் போவதே தெரியாமல் ஆடிவிட்டு தாமதமாகத்தான் வீட்டிற்கே வருவாராம். அந்தக் காலத்தில் தெருக்களில் அவர் ஆடிய ஆட்டம்தான் இப்போது வரை அவருக்குப் பக்கபலமாக இருக்கிறது. நெய்மாருக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு பிரேசில் வீரரின் கதையுமே இதுதான்.

மெஸ்ஸியுமே ஃபுட்சால் ஆட்டத்தைப் பற்றிய தன்னுடைய அனுபவங்களைச் சிலாகித்தே பேசியிருக்கிறார். ‘‘நான் இன்று எட்டியிருக்கும் இடத்திற்கு ஃபுட்சாலும் ஒரு மிகமுக்கிய காரணம். ஃபுட்சால் பெரும் மகிழ்வையும் உற்சாகத்தையும் கொடுத்தது’' என்றே மெஸ்ஸி கூறியிருக்கிறார்.
1930-ல் முதல் கால்பந்து உலகக்கோப்பைத் தொடர் உருகுவே நாட்டில் நடைபெற்றது. அப்போது அங்கே தொற்றிக்கொண்ட கால்பந்துக் காய்ச்சலில் ஊர் முழுவதும் கால்பந்தோடு தெருவில் இறங்க, அதன் வழியாகத்தான் இந்த ஃபுட்சால் ஆட்டம் தோன்றியதாகவும் கூறப்படுகிறது.
ஃபுட்சாலைப் பற்றி இவ்வளவு பேசுகிறோமே அந்த ஆட்டம் எப்படி ஆடப்படுகிறது என்பதைப் பற்றியும் கொஞ்சம் பார்த்துவிடுவோம். வழக்கமான கால்பந்து ஆட்டத்தை ஆட 11 பேர் தேவைப்படுவர். ஆனால், இந்த ஃபுட்சால் ஆட்டத்திற்கு 5 பேர் மட்டுமே போதும். ஒருவர் கீப்பர், மீதி நான்கு பேரும் களத்தில் ஓடியாடுபவர்கள். கால்பந்திற்குப் பயன்படுத்தப்படும் பந்தைவிட அளவில் சிறிதான பந்தே பயன்படுத்தப்படும். உள்ளரங்கத்தில்தான் நடைபெறும் என்பதால், மைதானத்தின் அளவே சிறிதாகத்தான் இருக்கும். கோல் போஸ்ட்டும் கொஞ்சம் குட்டியாகத்தான் இருக்கும். மொத்தத்தில் இந்த ஆட்டத்தின் வடிவமைப்பே, கால்பந்தின் மினியேச்சர் வெர்ஷன்தான்.
ஆனால், கால்பந்தில் இருக்கும் சில அம்சங்களும் விதிமுறைகளும் இங்கே கிடையாது. குறிப்பாக, கால்பந்தில் யோசித்தாலே தலைவலியை உண்டாக்கும் ஆஃப் சைடு விதிமுறைக்கு ஃபுட்சாலில் இடமே இல்லை. அதேமாதிரி ஹெட்டர் போன்ற சில அம்சங்களும் இங்கே அனுமதிக்கப்படுவதில்லை. வீரர்கள் 3 நொடிகளுக்கு மேல் செயல்படாமல் இருப்பதும் இங்கே அனுமதிக்கப்படுவதில்லை. இதனால்தான் ஃபுட்சால் ஆடுவது வேகத்தையும் உத்வேகத்தையும் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.

தென் அமெரிக்க நாடுகளில் தோன்றி அங்கே அதிகமாகப் பரவலாக ஆடப்பட்டாலும் உலகம் முழுவதுமே ஃபுட்சால் கிளை பரப்பியிருக்கவே செய்கிறது.
FIFA அமைப்பு கால்பந்துக்கு நடத்துவதைப் போலவே உலகக்கோப்பை, சாம்பியன்ஷிப் போன்ற பிரமாண்டத் தொடர்களை ஃபுட்சாலுக்குமே நடத்திவருகிறது.
இந்தியாவிலுமே பரவலாகப் பல இடங்களிலும் தொழில்முறையாகவே இந்த ஆட்டம் ஆடப்படுகிறது. ஐ.பி.எல் போன்ற ப்ரீமியர் லீக் சீசன்களை நடத்தவுமே பல தனியார் நிறுவனங்களும் முயன்றிருக்கின்றனர். சில நிறுவனங்கள் அதை சாத்தியப்படுத்தவும் செய்திருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பு சென்னையிலேயே ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரியோடு ஒரு தொடரை நடத்தி பிரேசில் ஜாம்பவான் ரொனால்டினோவையெல்லாம் அழைத்து வந்து ரணகளம் செய்திருந்தார்கள். கிரிக்கெட் வீரர்கள்கூட தங்களின் பயிற்சியின் ஒரு அங்கமாக ஃபுட்சால் ஆடுவதைப் பலமுறை பார்த்திருப்போம்.
ஃபுட்சால் மட்டுமல்ல. இதேமாதிரி 7 பேர் ஆடும் கால்பந்து ஆட்டம் 7s என்று அழைக்கப்படுகிறது. அதுவுமே ரொம்பவே பிரபலம்தான். விளையாட்டுலகில் வரலாறாக மாறும் பல ஹீரோக்களும் தெருக்களிலிருந்தே உருவாகும்போது, அந்த மாதிரியான வரைமுறைக்குள் சிக்காத விளையாட்டுகளையும் ஒரு வடிவமைப் பிற்குள் கொண்டுவருவதை அவற்றிற்கான அங்கீகாரமாகவே எண்ணிக்கொள்ளலாம். இந்த மாதிரியான ஆட்டங்கள் இன்னும் வெளிச்சம் பெற்று கவனிக்கப்படும்போது நம்மிலிருந்து இன்னும் அதிக ஹீரோக்கள் உருவாகி வருவார்கள்!