சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ஒலிம்பிக் காட்டும் ஒளியின் திசை!

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி
பிரீமியம் ஸ்டோரி
News
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி

பெற்றவர்களில் இருந்து, பள்ளிக்கூடப் பாடத் திட்டத்திலிருந்து, தொலைக்காட்சி ஒளிபரப்புத் திட்டங்கள்வரை ஒட்டு மொத்தமாக அனைத்துமே மாறவேண்டும் என்ற புரிதலுக்கு வரலாம்

ஒலிம்பிக்ஸ் - எதற்காகத் தொடங்கப்பட்டதோ, எதை வலியுறுத்தத் தொடர்ந்து நடத்தப்படுகிறதோ, அதைச் சரியாக உணர்த்தியிருக்கிறது.

உலகம் ஒரு மோசமான சூழ்நிலையில் இருக்கும்போது, மொத்த மனித இனமும் கவனம் குவிக்கும் இடம் ஜப்பானாக இருந்தது தற்செயலாக இருக்க வாய்ப்பில்லை. இவ்வளவு காலம் தங்கள் மக்களுக்கு போதித்த விஷயத்தை இன்று டோக்கியோ ஒலிம்பிக்ஸ் வழியே ஒவ்வொருவருக்கும் கடத்தியிருக்கிறது ஜப்பான் - நம்பிக்கையோடு நாளையை நோக்கி நகர்வோம்!

ஜப்பானைப் பற்றிப் பேசும்போது நாம்தான் ஹிரோஷிமாவையும் ஃபுகுஷிமாவையும் பற்றிப் பேசுவோம். அந்தத் துயர்களிலிருந்து எப்படி மீண்டு வந்தார்கள் என்று ஆச்சர்யப்படுவோம். ஆனால், ஜப்பானியர்கள் அப்படி யோசிப்பதேயில்லை. கடந்த காலத்தை உந்துவிசையாகப் பயன்படுத்தி எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு முன்னேறிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த ஒலிம்பிக் அதற்கான மிகப்பெரிய சான்று.

மீராபாய் சானு
மீராபாய் சானு
நயோமி ஒசாகா
நயோமி ஒசாகா

தொடக்க விழாவில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றுவதென்பது மாபெரும் கௌரவம். அதை மிகப்பெரிய சாதனையாளருக்கு, ஜாம்பவானுக்கு அளிப்பார்கள். ஆனால், டோக்கியோவில் அந்த தீபத்தை ஏற்றிவைத்து 32-வது ஒலிம்பிக் தொடரைத் தொடங்கிவைத்தவர் 23 வயது டென்னிஸ் வீராங்கனை நயோமி ஒசாகா. ஏன்?

ஒசாகா - கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பெறும் வெற்றியைவிட மனநலன் முக்கியம் என்று கருதியவர். மிகப்பெரிய விளையாட்டு அரங்கில் இனவெறிக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர். அடுத்த தலைமுறைக்கு ரோல் மாடலாக விளங்குபவர். ஜப்பானுக்குத் தேவை அதுதான். ‘அடுத்த தலைமுறை யாரை கவனிக்கிறது. எதிர்காலத்தை வழிநடத்தப்போவது யார்...’ அவர்களுக்கு அதுவே முக்கியம். அதை அந்த முதல் நாளிலேயே காட்டினார்கள். நாம் போகவேண்டிய பாதையும் அதுவே!

லெசாண்ட்ரா பெரில்லி, கியான் மார்கோ பெர்டி
லெசாண்ட்ரா பெரில்லி, கியான் மார்கோ பெர்டி
பி.வி.சிந்து
பி.வி.சிந்து

சான் மரினோ - வெறும் 33,630 மக்கள் வாழும் நாடு. ஐந்தே வீரர்களை மட்டும் டோக்கியோவுக்கு அனுப்பி 3 பதக்கங்களை வென்றது. ஒவ்வொரு 11,210 பேருக்கும் ஒரு பதக்கம். 137 கோடிப் பேர் இருக்கும் நாடு 7 பதக்கங்கள்தான் வென்றிருக்கிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு 19 கோடிப் பேருக்கும் ஒரு பதக்கம். இப்படி மக்கள் தொகையையும் புள்ளியியலையும் இணைத்து நிறைய விமர்சிக்கலாம். அரசின் பங்களிப்பை, விளையாட்டு அமைப்புகளின் செயல்பாட்டை, வீரர்களின் திறமையை, கிரிக்கெட்டின் ஆதிக்கத்தை, ஊடகத்தை - அனைத்தையும் விமர்சிக்கலாம்.

விமர்சனம் செய்தே ஆகவேண்டும் என்ற எண்ணத்திலிருந்து விலகி ஆழமாக யோசித்தாலும்கூட, பெற்றோர்கள், கல்வி முறை, இந்தியா எட்டவே முடியாத சமூக - பொருளாதார சமநிலை, ஒளிபரப்புத் திட்டங்கள் எனப் பல்வேறு விஷயங்களை இதற்குக் காரணமாகக் கூறலாம். மேற்சொன்ன அத்தனையுமே காரணங்கள்தான், அரசு மாறினால் மட்டும் போதாது; பெற்றவர்களில் இருந்து, பள்ளிக்கூடப் பாடத் திட்டத்திலிருந்து, தொலைக்காட்சி ஒளிபரப்புத் திட்டங்கள்வரை ஒட்டு மொத்தமாக அனைத்துமே மாறவேண்டும் என்ற புரிதலுக்கு வரலாம். இல்லை, மீண்டும் நமக்கு முன்னிருப்பவரைக் கைகாட்டித் தப்பித்துக்கொள்ளலாம்.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி
இந்திய மகளிர் ஹாக்கி அணி
இந்திய மகளிர் ஹாக்கி அணி

கடந்த 20 ஆண்டுகளாகப் பேசும் அதே விஷயத்தை இன்றும் ஏன் பேசவேண்டும்? ஜப்பானைப் போல் நாமும் நாளையினை நோக்கி நடக்கலாமே. இந்த ஒலிம்பிக் நமக்கு அப்படியான விஷயங்களைக் காட்டவில்லையா என்ன?

தனிநபர் விளையாட்டுகளில் 6 வீரர்கள் போடியம் ஏறியிருக் கிறார்கள். 41 ஆண்டுக் கால தாகம் தீர்த்து ஹாக்கியில் பதக்கம் வென்றிருக்கிறது இந்திய ஆண்கள் அணி. அந்தப் பதக்கங் களுக்கெல்லாம் இணையான ஒரு வெற்றியைக் காலிறுதியில் பெற்றது மகளிர் ஹாக்கி அணி. கோல்ஃப் பற்றி எதுவுமே தெரிந்திடாத நடுத்தர இந்தியச் சமூகத்தை அதிகாலை 4 மணிக்கு எழுந்து 4 மணி நேரம் அந்த விளையாட்டைப் பார்க்க வைத்திருக்கிறார் அதிதி அஷோக் என்ற இந்திய வீராங்கனை. 30+ வயதான வீரர்கள் மட்டுமே ஏந்திக் கொண்டிருந்த துப்பாக்கிகளை இப்போது 2கே கிட்ஸ் எடுத்து சுட்டுத் தள்ளுகிறார்கள். பேச, கொண்டாட, எதிர்காலத்தை நோக்கி நகர, முன்னேற்றத்துக்கு விதை தூவிட நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

அதிதி அஷோக்
அதிதி அஷோக்
லல்லினா போர்கஹெய்ன்
லல்லினா போர்கஹெய்ன்

நீங்களும் நானும் கொண்டாட, இந்தியா எனும் தேசம் பெருமைகொள்ள இந்த ஒலிம்பிக் பெரிதாக எதையும் கொடுக்காமல் இருக்கலாம். விளையாட்டே உயிரென மைதானத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் அடுத்த தலைமுறைக்கு டோக்கியோ 2020 ஒரு மாபெரும் உந்துசக்தி!

சற்றுப் பின்னோக்கி யோசித்துப் பாத்தோமெனில், நம்மில் 80 சதவிகிதம் பேர் ‘இந்தியா தடகளத்தில் எதுவும் சாதிக்க முடியாது’ என்று சொல்லியிருப்போம். பயிற்சி முறைகள் போதவில்லை, உடல் அமைப்பு ஏற்பாக இல்லை, அதற்கேற்ற ஜீன்கள் இல்லை என ஃபிட்னஸ் முதல் பயாலஜி வரை அனைத்தையும் வாதத்துக்குத் துணையாய் அழைத்திருப்போம்.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா
பஜ்ரங் பூனியா
பஜ்ரங் பூனியா

இந்தப் பொதுப்புத்திக்கு மத்தியில்தான் ஒவ்வொரு ஊரிலிருந்தும் தடகள ஆசையோடு வீரர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். இலக்கற்றது என்று நாம் கருதிய பாதையில் அவர்களாக ஓர் இலக்கை நிர்ணயித்துப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆசிய அளவில் சாதிக்கும்போது ‘ஜமைக்கா, அமெரிக்காவெல்லாம் வரலையே, இது என்ன வெற்றி’ என்போம். காமன்வெல்த் தொடரில் ஆடும்போது, ‘சீனா, அமெரிக்காவெல்லாம் வரலையே, இது என்ன வெற்றி’ என்போம்.

இவையெல்லாம் ஏதோவொரு பயத்தையும், அவநம்பிக்கையையும் அடுத்த தலைமுறைக்கு ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அவர்களின் தகுதிமீது அவர்களையே கேள்வி எழுப்பவைக்கும். ஆனால், இத்தனை ஆண்டுகள் நம்மால் நம்பிக்கை இழந்தவர்களுக்கெல்லாம் ஒரே நாளில் உயிர்கொடுத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா.

ஜெர்மனி, செக் குடியரசு, பெலாரஸ் போன்ற நாட்டினர் எறிதலுக்காக அளவெடுத்துச் செய்யப்பட்டவர்கள் என்பார்கள். ஆனால், 97 மீட்டர் தூரம் வீசக்கூடிய உலகின் நம்பர் 1 வீரர் யோஹன்னஸ் வெட்டர் 85 மீட்டர் வீசவே தடுமாறியபோது, தடகளத்துக்கான உடல்வாகு இல்லை என்று கருதப்பட்ட ஓர் இந்தியன் தன் ஈட்டியால் தங்கத்தை வேட்டையாடி வந்திருக்கிறாரே! பானிப்பட்டில் பிறந்த அந்த 23 வயது இளைஞனின் ஜீன்கள் எந்த மாற்றமும் கண்டிருக்கவில்லையே!

மைல்ஸ் அமின்
மைல்ஸ் அமின்
ரவி குமார் தாஹியா
ரவி குமார் தாஹியா

எறிந்துகொண்டிருக்கும், ஓடிக்கொண்டிருக்கும், தாண்டிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சிறுவருக்கும் மாபெரும் நம்பிக்கை கொடுத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. தடகளத்தில் இந்தியர்கள் சர்வதேச அரங்கில் ஜொலிக்க முடியும் எனப் பாடம் எடுத்திருக்கிறார். அவர் தங்கம் ஒரு தேசத்தின் கொண்டாட்டமோ, முந்தைய தலைமுறையின் கனவோ மட்டுமல்ல. அடுத்த தலைமுறையின் லட்சியம். அவர்களுக்கான மரியாதை.

நீரஜ் வென்ற தங்கத்துக்கு எந்த வகையிலும் குறைவில்லாதது இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் வெண்கலமும், பெண்கள் ஹாக்கி அணியின் காலிறுதி வெற்றியும். 41 ஆண்டுகளாய்க் காணாமல் போயிருந்த விளையாட்டுக்கு மீண்டும் முகவரி கொடுத்திருக்கிறார்கள். பஞ்சாப், ஹரியானா, ஒடிசா என ஒருசில மாநிலங்களுக்குள் முடங்கிப்போயிருந்த விளையாட்டுக்குப் பெரும் வெளி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.

கடைசியாக 1980-ல் தங்கம் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஒரு தமிழர். ஆனால், இப்போது நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது. ஆண்கள், பெண்கள் என இரண்டு அணியிலும் சேர்ந்து 34 வீரர்கள். அதில் ஒருவர் மட்டுமே தென்னிந்தியர்! காரணம், தோல்விகள். தென்னிந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறியிருக்கிறது. நடுத்தட்டு, மேல்தட்டு மக்கள் அதிகம் இருக்கிறார்கள். அதாவது, வெற்றியின் பின் மட்டுமே செல்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். அதனால்தான், ஹாக்கி மட்டை பிடித்த கைகள் கிரிக்கெட் பேட்டும், பேட்மின்டன் ராக்கெட்டும் பிடிக்கத் தொடங்கிவிட்டன.

விஜய் ஹசாரே, சையது முஷ்தாக் அலி போன்ற கிரிக்கெட் தொடர்களில் கர்நாடகாவும், தமிழ்நாடும், மும்பையும்தான் மாறி மாறி வெல்கின்றன. இந்த ஊர்களில்தான் தனி டி-20 லீக்குகளும் நடக்கின்றன. பேட்மின்டன் வீரர்கள் ஹைதராபாத்தில்தான் உருவாகிறார்கள். ஆக, வெற்றிபெறும் விளையாட்டே இந்த ஊர்களில் தாக்குப்பிடிக்க முடியும்.

சௌரப் சௌத்ரி
சௌரப் சௌத்ரி
மனு பாக்கர்
மனு பாக்கர்

ஆனால், போர்க்குணம் மிகுந்த இந்தியர்கள் இனி எங்கிருந்தும் உதயமாவார்கள். 19 வயது மனுபாக்கரும், சௌரப் சௌத்ரியும் இனிவரும் ஒலிம்பிக் தொடர்களில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்பதை துப்பாக்கி சுடுதல் உலகம் இப்போதே கணித்திருக்கும். பாரிஸில் சிந்துவை வீழ்த்த என்ன செய்யவேண்டும் என சீன பேட்மின்டன் சங்கம் திட்டம் தீட்டத் தொடங்கியிருக்கும். அதிதி அஷோக்கிற்கு எப்படி 200-வது ரேங்க் கொடுத்தோம் என கோல்ஃப் அசோஷியேஷன் குழம்பிக்கொண்டிருக்கும். 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆசிய சாதனை படைத்த இந்திய அணியைப் பற்றிப் பல ஆசிய அணிகள் இப்போதே ஆலோசனை நடத்தத் தொடங்கியிருக்கும். பதக்கம் வென்ற ஏழு பேர் மட்டுமல்லாமல், ஒவ்வொருவரும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை இந்திய விளையாட்டு அரங்கில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். எதிர்காலத்துக்கு அடித்தளம் அமைத்திருக்கிறார்கள். நாம் நகர வேண்டியது அதை நோக்கித்தான்!