சினிமா
தொடர்கள்
Published:Updated:

துணிவு வருமா இந்திய அணிக்கு?

இங்கிலாந்து அணி
பிரீமியம் ஸ்டோரி
News
இங்கிலாந்து அணி

விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங் போன்ற ஒரு சில வீரர்களின் அசாத்தியமான செயல்பாடுகள் காரணமாகவே இந்திய அணி அரையிறுதி வரை வந்தது.

உலகக்கோப்பை

நாக் அவுட்

இந்தியா!

விளையாட்டு விரும்பிகளின் மனத்தில் ஒரே நொடியில் பெரும் வலியைப் பாய்ச்சக்கூடிய குறுங்கவிதை இது. ஒன்றிரண்டு முறையென்றால் பரவாயில்லை, ஒவ்வொரு முறையுமே ஏமாற்றம் மட்டுமேதான் வாய்க்குமெனில் எப்படி? இந்திய கிரிக்கெட் அணி அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. ஐ.சி.சி தொடர்களில் இந்திய அணியின் தொடர் சொதப்பல்களுக்கு இந்த முறையும் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் அரையிறுதி வரை தகுதிபெற்று, இங்கிலாந்திடம் மொத்தமாக சரணாகதி அடைந்து இந்திய அணி வெளியேறியிருக்கிறது.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

கடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்குக்கூடத் தகுதி பெற்றிருக்கவில்லை. ‘இந்த முறை அரையிறுதிக்காவது இந்திய அணி தகுதிபெற்றதே' என ஆறுதல்பட்டுக்கொள்ளக்கூட முடியாது. ஏனெனில், கடந்த முறை நிகழ்த்திய தவறுகளுக்கு சற்றும் குறைவில்லாமல் இந்த முறையும் இந்திய அணி தவறிழைத்திருக்கிறது.

விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங் போன்ற ஒரு சில வீரர்களின் அசாத்தியமான செயல்பாடுகள் காரணமாகவே இந்திய அணி அரையிறுதி வரை வந்தது. ஓர் அணியாக முழுமையாக எங்கேயும் சிறப்பான செயல்பாடுகளை வெளிக்காட்டவே இல்லை. ஓப்பனிங்கிலிருந்தே பிரச்னைதான். கேப்டன் ரோஹித் சர்மாவும் ராகுலும் இந்தத் தொடரில் கூட்டணியாக ஒரு அரைசதத்தைக்கூட ஓப்பனிங் விக்கெட்டுக்குக் கடக்கவில்லை. அதுகூடப் பரவாயில்லை, பவர்ப்ளேயில் ஒவ்வொரு முறையும் அவர்கள் கொடுத்த மந்தமான தொடக்கத்திற்கு எதைக் கூறியும் நியாயம் கற்பிக்க முடியாது. இந்தத் தொடரின் சராசரி பவர்ப்ளே ரன்ரேட் 8.5-க்கும் மேலாக இருக்க, இந்திய அணியின் ரன்ரேட் 6-ஐச் சுற்றியே இருந்தது. டி20-க்கான தடயமே தெரியாத வகையில்தான் ரோஹித்தும் ராகுலும் தொடக்கங்களைக் கொடுத்திருந்தனர்.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

இதில் கூடுதலாகக் கடுப்பேற்றும் விஷயம் என்னவெனில், ‘பவர்ப்ளேயை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பவர்ப்ளேயில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ரன்களை எடுக்க வேண்டும்' என ரோஹித்தே வாய் வலிக்க பல போட்டிகளுக்கும் பிறகு பேசியிருக்கிறார். பேசியதோடு மட்டுமல்லாமல் இந்திய அணியும் அதைக் கடைப்பிடித்தது. இந்த உலகக்கோப்பைக்கு முன்பாக இந்த ஆண்டில் இந்திய அணியின் சராசரி பவர்ப்ளே ஸ்கோர் 51-ஆக இருந்தது. சராசரி ரன்ரேட் 8.5-ஆக இருந்தது. இருதரப்புத் தொடர்களிலெல்லாம் இப்படிப் புலியாகப் பாய்ந்துவிட்டு உலகக்கோப்பையில் பம்மியதற்கான காரணம் புரியவே இல்லை.

புரிந்தது ஒன்றே ஒன்றுதான், அரையிறுதியில் பாகிஸ்தான் ஓப்பனர்கள் பாபர் அசாமும் ரிஸ்வானும் முழுப் பொறுப்பையும் ஏற்று அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றனர். பட்லரும் ஹேல்ஸும் இந்திய அணியை ஈவு இரக்கமின்றி அட்டாக் செய்து இங்கிலாந்தை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றனர். இந்திய அணியின் ஓப்பனர்களால் அவர்கள் செய்ததில் 10%கூட செய்ய முடியவில்லை.

துணிவு வருமா இந்திய அணிக்கு?

சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலிய அணி தனது கடைசிப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மோதியிருந்தது. ஆஸ்திரேலிய அணி பெரிய வித்தியாசத்தில் வென்றே ஆக வேண்டிய போட்டி அது. அந்த முக்கியமான போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதன் நட்சத்திர வீரரான ஸ்டார்க்கை பெஞ்சில் உட்கார வைத்தது. காரணம், அவர் முந்தைய போட்டிகளில் எதிர்பார்த்த பெர்ஃபா மென்ஸைக் கொடுக்கவில்லை. பெரும் துணிச்சலான முடிவு அது. ஆஸ்திரேலிய அணிக்கு இருந்த துணிச்சலும் திராணியும் இந்திய அணிக்கு இருந்திருந்தால், இவ்வளவு மோசமான தோல்வி வாய்த்திருக்காது. தீபக் ஹூடா மாதிரியான வீரரை கடைசிவரை பெஞ்சிலேயே உட்கார வைத்து, ஓட மறுக்கும் குதிரையான ராகுலுக்கு வாய்ப்புகளை வாரி வழங்கியதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதேமாதிரிதான், அத்தனை அணிகளும் தரமான லெக் ஸ்பின்னர்களைத் துருப்புச் சீட்டாக வைத்திருக்க, இந்திய அணியோ சஹாலை பெஞ்சில் மட்டுமே வைத்திருந்தது. ஒரு போட்டியில்கூட வாய்ப்பு வழங்கவில்லை. உலகக்கோப்பைத் தொடர்களில் இந்திய அணி எடுத்த அதிவிநோதமான முடிவாக இது காலத்திற்கும் பேசப்படப்போகிறது.

ஹர்திக் பாண்ட்யா
ஹர்திக் பாண்ட்யா

‘பும்ரா இருந்திருந்தால் கதையே வேறு' என்கிற பஞ்சாங்கம் இப்போதும் பாடப்படுகிறது. ஒரே ஒரு வீரரை மட்டுமே நம்பி, அவரின் தலையில் ஒட்டுமொத்தச் சுமையையும் ஏற்றி வைக்கும் வழக்கம் எப்போதுதான் மாறப்போகிறது? இங்கிலாந்து அணியிலும் ஆர்ச்சர் போன்ற அபாயகரமான பௌலர் இல்லைதான். இந்த உலகக்கோப்பைக்காகவே அவர்கள் தேற்றிக் கொண்டு வந்திருந்த வேகப்பந்து வீச்சாளர் டாப்ளே இந்தத் தொடருக்கு முன்பாகவே காயம் காரணமாக வெளியேறிவிட்டார். இந்தத் தொடரில் முக்கியப் பங்களித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டும் காயம் காரணமாக அரையிறுதிலும் இறுதிப்போட்டியிலும் ஆடவே இல்லை. இவ்வளவுக்குப் பிறகும் இங்கிலாந்து அணி சாம்பியன் ஆகியிருக்கிறது. ஓர் அணி இப்படித்தான் கட்டமைக்கப்பட வேண்டும். வெறுமென கோலி, சூர்யகுமார், பும்ரா என ஒரு சில வீரர்களை மட்டுமே நம்பியிருப்பது ஒரு காலத்திலும் உதவப்போவதில்லை.

டிராவிட் பயிற்சியாளர் ஆனபிறகு ஒரே ஆண்டில் ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை என இரண்டு பெரிய தொடர்களில் அணி தோற்றிருக்கிறது. அணியில் முடிவுகளை எடுப்பதில் ரோஹித்தின் பங்குக்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் டிராவிட்டின் பங்கும் இருக்கிறது. ‘ஜென்டில்மேன்' என்கிற இமேஜைக் கடந்து டிராவிட் யோசித்தாக வேண்டும். அணிக்கு ஒரு ஜென்டில்மேனைவிட வெற்றிக்குத் தேவையானதைச் செய்யும் துணிச்சல்காரரே அதிகம் தேவைப்படுகிறார்.

விராட் கோலி
விராட் கோலி

இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைவிட இந்திய அணிக்கு இருக்கும் பெரும்பலம், அதன் மனிதவளம். வேறெங்கும் இல்லாத அளவுக்கு ஏராளமான வீரர்கள் உள்ளூர்ப் போட்டிகளில் ஆடி வருகிறார்கள். இந்த வளத்தை இந்திய அணி முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இங்கிலாந்து அணியின் இப்போதைய வெற்றிகளுக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தவர் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன். இங்கிலாந்து அணி 2019-ல் இவர் தலைமையில்தான் உலகக்கோப்பையை வென்றிருந்தது. இப்போது இந்த டி20 உலகக்கோப்பையையுமே இங்கிலாந்து இவர் கட்டமைத்துக் கொடுத்த அணியை வைத்தே வென்றிருக்கிறது. அப்படிப்பட்ட இயான் மோர்கன் சில மாதங்களுக்கு முன் கேப்டன் பதவியிலிருந்து விலகியதோடு, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார். ஓய்வுக்காக அவர் சொன்ன காரணம் நேர்மையாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. ‘‘இனியும் அணியில் தொடர்ந்தால் பெரும் மோசடிக்காரனாகவே அறியப்படுவேன். தனிப்பட்ட முறையிலும் சரி, இங்கிலாந்து அணியின் நலனை மனதில் வைத்தும், நான் ஓய்வுபெற்றுக்கொள்ள இதுவே சரியான நேரம்'' என மோர்கன் கூறியிருந்தார். மோர்கன் மாதிரியே இந்திய டி20 அணியிலும் சில வீரர்கள் நேர்மையான மதிப்பீடுகளைச் செய்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்
அர்ஷ்தீப் சிங்
அர்ஷ்தீப் சிங்

கடைசியாக 2013-ல் இந்திய அணி சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றிருந்தது. அதன்பிறகு, எந்தப் பெரிய தொடரையும் வெல்லவில்லை. வெல்ல வேண்டுமெனில், அணியின் அணுகுமுறைக்கும் எடுக்க வேண்டிய முடிவுகளுக்கும் பெரும் துணிவு மட்டுமே வேண்டும்.