
விளையாட்டு
கிரிக்கெட் மீதான ஆர்வமே இந்தியர்களுக்குக் குறைந்ததைப்போல இருக்கிறது. கில், இஷன் கிஷன் போல யாராவது பெரும் அசாத்தியத்தை நிகழ்த்தினால் மட்டுமே கொஞ்சம் அந்தப் பக்கமும் தலையைத் திருப்பிப் பார்க்கிறார்கள். கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் நடந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான போட்டியை நேரில் காண வெறும் 20,000 ரசிகர்கள் மட்டுமே வந்திருந்தனர். மைதானமே வெறிச்சோடியிருந்தது. அதேசமயத்தில் ஒடிசாவில் நடந்த இந்தியா Vs இங்கிலாந்து உலகக்கோப்பை ஹாக்கி போட்டியை 21,800 ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு பார்த்திருந்தனர். ஆக, கடந்த வாரம் என்பதே கிரிக்கெட்டுக்கு கொஞ்சம் மந்தமாகத்தான் நகர்ந்திருக்கிறது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜனவரி மூன்றாம் வாரம் இந்திய கிரிக்கெட்டிலேயே மறக்க முடியாத வாரமாக அமைந்திருந்தது. அந்த நினைவுகளைக் கொஞ்சம் அசைபோடுவதன் மூலம் தற்போதைய மந்த கதியிலிருந்து தப்பிக்க முயல்வோம்.

2020-ம் ஆண்டை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. கொரோனா கோரதாண்டவம் ஆடிய கொடூர ஆண்டு அது. அந்த ஆண்டின் இறுதியில்தான் இந்தச் சம்பவத்திற்கான விதையும் தூவப்பட்டது. கொரோனாப் பரவல் காரணமாக ஒட்டுமொத்த விளையாட்டுலகமுமே முடங்கியிருந்தது. தளர்வுகளால் விளையாட்டுலகம் மெது மெதுவாகப் புத்துயிர் பெற்ற தறுவாயில், ஐ.பி.எல்-ஐ முடித்துக்கொண்டு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை விளையாட ஆஸ்திரேலியாவிற்குப் பயணப்பட்டது. முதல் போட்டியே அடிலெய்டில் இரவு பகல் ஆட்டமாக நடந்தது. பிங்க் பந்தில் இரவில் வேட்டைக்காக உழலும் மிருகங்களுக்கு ஒப்பான திறனைக் கொண்டது ஆஸ்திரேலிய அணி. அதுவரை அந்த அணி ஆடிய எந்த பிங்க் பால் போட்டியிலும் தோற்றதே இல்லை. இந்தியாவிற்கு எதிரான இந்தப் போட்டியிலும் அதே ஆதிக்கத்தை ஆஸ்திரேலியா தொடர்ந்தது. இந்தியாவிற்குத் தோல்வி என்பதைத் தாண்டி, அவமானகரமான தோல்வி. இரண்டாம் இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களில் ஒட்டுமொத்த அணியும் ஆல் அவுட் ஆனது. விராட் கோலி பெரும் சோகத்தோடு நாடு திரும்பினார். மனைவியின் பிரசவத்திற்காக உடனிருக்க நினைத்த கோலியின் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.
ஆனால், கோலி இந்தியாவிற்குத் திரும்பும் முன்பு இந்திய அணிக்கே பெரும் தெம்பை ஊட்டிவிட்டே திரும்பினார். 36-க்கு ஆல் அவுட் ஆன ஒரு அணி அடுத்த போட்டிக்கு முன்பாக எதை மனதில் வைத்துக் களமிறங்கும்? சேதாரம் விளைவித்த பேட்டிங்கை பலப்படுத்தவே பெரும்பாலும் நினைப்பார்கள். ஆனால், கோலி மாற்றி யோசித்தார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை மேலும் பலப்படுத்தச் சொன்னார். ‘Wear this 36 like a Badge’ என ரவிசாஸ்திரியும் இந்திய வீரர்களுக்கு வெறியூட்டினார். கோலிக்கு பதில் ரஹானே கேப்டன் ஆனார். மெல்போர்னில் பாக்ஸிங் டே டெஸ்ட் தொடங்கியது. இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு மரண அடி கொடுத்தது. கேப்டன் ரஹானே சதமடித்து இந்திய அணியை உச்சிக்குக் கொண்டு சென்றார். அடிலெய்டு டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய பௌலர்கள் ஏற்படுத்திய தாக்கத்தை இந்த டெஸ்ட்டில் இந்திய பௌலர்கள் ஏற்படுத்தினர். தொடர் 1-1 என சமநிலைக்கு வந்தது.

இதன் பிறகுதான் இந்திய அணிக்கு நிஜமான சவாலே காத்திருந்தது. சிட்னியில் நடந்த அந்த மூன்றாவது டெஸ்ட்டில் கடைசி நாளில் இந்தியா வெளிக்காட்டிய போர்க்குணமும் நெஞ்சுரமும் அத்தனை ஊக்கத்தைக் கொடுக்கும். முதுகுவலியோடு படுக்கையில் இருந்து எழ இயலாத அஷ்வினும், தசைப்பிடிப்பால் நகரவே முடியாமல் நின்ற ஹனுமா விஹாரியும் ஆஸ்திரேலிய அணியின் அதி தீவிரமான வேகப்பந்து வீச்சை மூன்றரை மணி நேரங்களுக்கு எதிர்கொண்டு ஆட்டத்தை ட்ரா செய்து கொடுத்தனர். அஷ்வினும் விஹாரியும் ஒவ்வொரு பந்தை எதிர்கொண்டு முடிக்கும்போதும் ரவிசாஸ்திரி இருக்கையின் நுனியிலிருந்து ஆசுவாசமாகி ‘சபாஷ்... சபாஷ்’ என உளமகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். ரவிசாஸ்திரி மட்டுமில்லை. தொலைக்காட்சியிலும் நேரிலும் பார்த்த ரசிகர்களுமேகூட எண்ணவியலாத முறைக்கு ‘சபாஷ்’ கூறியிருந்தார்கள்.
இறுதியாக தொடரின் வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் இறுதிப்போட்டி காபாவில். அங்கு தங்களை 32 ஆண்டுகளாக யாருமே வீழ்த்தியதில்லை எனும் பெருமையோடு ஆஸ்திரேலியா களமிறங்கியது. சிட்னி டெஸ்ட்டிலேயே ஆஸ்திரேலிய கேப்டனும் கீப்பருமான டிம் பெய்ன் ‘தைரியம் இருந்தா காபாவிற்கு வாங்க’ என்பது போல சவால் விட்டிருந்தார். போதாக்குறைக்கு இந்திய அணியிலும் பல வீரர்கள் காயமடைய, அறிமுக வீரர்கள் பட்டாளத்துடன்தான் இந்திய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய பௌலர்கள் அதுவரை டெஸ்ட்டில் வீழ்த்திய விக்கெட்டுகள் ஆயிரத்தைத் தாண்ட, இந்திய பௌலர்களோ வெறும் 13 விக்கெட்டுகளை மட்டுமே ரெக்கார்டாக வைத்திருந்தனர். ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும்போது இந்திய அணியின் அனுபவம் இம்மியளவுதான். கிட்டத்தட்ட ‘No Guts No Glory’ பாணியில்தான் இந்திய அணி காபாவில் இறங்கியது. ஆனால், ஆஸ்திரேலியா பேச்சில் காட்டியதை இந்திய அணி செயலில் காட்டியது. நடராஜன், ஷர்துல், சிராஜ் என பௌலர்கள் மிரட்ட, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் போன்றோர் தில்லுக்கு துட்டாக பேட்டிங் ஆடி ஆஸ்திரேலியாவின் இரும்புக்கோட்டையைத் தகர்த்தெறிந்தனர். இந்திய அணி தொடரையும் வென்றது.

‘இந்தியர்களை எப்போதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்’ என ஆஸ்திரேலியப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரே காபாவில் நின்று இந்திய அணிக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்தார். கோலியின் விலகல், வீரர்களின் காயம், ரஹானேவின் பக்குவம், பண்ட்டின் அதிரடி, அஷ்வின்-விஹாரியின் தீரம் என அந்தத் தொடரை காலத்துக்கும் நினைவில் வைத்துக்கொள்ள எக்கச்சக்க அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன.