அலசல்
Published:Updated:

வீரதீரர்களை உருவாக்கும் `மல்லர் கம்பம்!’

வித்தியாச விளையாட்டுகள் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
வித்தியாச விளையாட்டுகள் - 1

வித்தியாச விளையாட்டுகள் - 1

வடிவேலுவின் அலெர்ட் ஆறுமுகம் காமெடி ஞாபகமிருக்கிறதா? ஹோட்டலின் மெனுவை கேட்டுவிட்டு ‘எப்ப பாரு இட்லி, தோசை, பூரின்னே... ச்சை!' என அலுத்துக்கொள்வாரே! அந்தக் காமெடிதான். அலெர்ட் ஆறுமுகத்திற்கு உணவு விஷயத்தில் ஏற்பட்ட அந்த அலுப்பு, அன்றாட வழக்கமாக மாறிப்போயிருக்கும் அத்தனை விஷயங்களுக்குமே பொதுவானதுதான். விளையாட்டுகளுமே கூட இதற்கு விதிவிலக்கல்ல. பிடித்த விளையாட்டு என்றாலே 'கிரிக்கெட், கால்பந்து...' என்றே அநேகமானோரின் பட்டியல் நீளும். இந்த விளையாட்டுகளெல்லாம் நமக்கு நன்கு பரிச்சயமானவை. ஆனால், இந்த வழக்கத்திலிருந்து விலகி வித்தியாசத்தையும் வினோதத்தையும் பொதிந்து வைத்திருக்கும் விளையாட்டுகளும் இங்கு ஆடப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.

அந்த மாதிரியான விளையாட்டுகளைப் பற்றி அறிந்து கொள்வதன் மூலமும், அவற்றைப் பின்தொடர்வதன் மூலமும் புதுவித அனுபவமும் புத்துணர்ச்சியும் கிடைக்கக்கூடும். அதற்காகவே இந்தத் தொடர் ‘வித்தியாச விளையாட்டுகள்'.

இந்த விளையாட்டுகள் வரிசையில் முதல் பகுதியில் நாம் பார்க்கவிருப்பது ‘மல்லர் கம்பம்'. நம் மண்ணுடனும் பண்பாட்டுடனும் ஒன்றறக் கலந்திருக்கும் விளையாட்டுகள் எப்போதுமே ஒரு தனி சுவாரஸ்யத்தை உள்ளடக்கியதாகவே இருக்கும். திருவிழாக் காலங்களில் ஊர்ப்பகுதிகளில் ஆடப்படும் வழுக்குமரம், உறியடி போன்றவை கொடுக்கும் கொண்டாட்ட உணர்வை, நாம் பெரும் வணிகச் சந்தையை உள்ளடக்கி வைத்திருக்கும் விளையாட்டுகளில் கூட அனுபவிக்க முடியாது. ‘மல்லர் கம்ப’மும் இப்படியான பண்பாட்டு வேரிலிருந்து தழைத்துவளர்ந்த விளையாட்டுதான்.

வீரதீரர்களை உருவாக்கும் 
`மல்லர் கம்பம்!’

இந்த விளையாட்டைப் புரிந்துகொள்வதற்கு பெரிய சிரத்தையெல்லாம் எடுக்கத் தேவையில்லை. ஏறக்குறைய எட்டு அடி உயரமுள்ள வழுவழுப்பான மரக்கம்பம் ஒன்றில் வீரர்களும் வீராங்கனைகளும் தொற்றி ஏறி தங்கள் உடலை வளைத்து சாகசங்கள் செய்ய வேண்டும். ஒவ்வொருவர் செய்யும் சாகசத்தின் கடினத்தன்மையையும், லாவகத்தையும் நேர்த்தியையும் அழகியலையும் மதிப்பிட்டு வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள். மரக்கம்பத்திற்கு பதிலாக கயிறுகளைப் பயன்படுத்துவது இதே விளையாட்டின் இன்னொரு வகை.

இந்த விளையாட்டு எங்கிருந்து தோன்றியது என்பது பற்றி ஏகப்பட்ட தகவல்கள் சொல்கிறார்கள். “இது நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு. சோழர் காலம் தொட்டே இங்கே இது ஆடப்பட்டு வருகிறது. ‘மல்லர்' என்றால் வீரன். வீரவிளையாட்டு வகை இது'' என்று கூறப்படுகிறது. அதேநேரம் ‘மல்லாகம்ப்' என வட மாநிலங்களில் அறியப்படும் இந்த விளையாட்டு மராட்டியப் பகுதியில் தோன்றியதாக சிலர் சொல்கிறார்கள். ‘மல்லா' என்றால் மல்யுத்தம் என்றும், இது கம்பத்தில் ஆடப்படும் மல்யுத்தம் என்றும் அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் சாளுக்கிய மன்னர்களில் காலத்திலேயே இந்த விளையாட்டு ஆடப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். மராத்திய மன்னரான இரண்டாம் பேஷ்வா பாஜிராவ் காலத்தில் வீரர்களுக்கான போர்ப் பயிற்சிகளில் ஒன்றாக இந்த ‘மல்லாகம்ப்' பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. அவையெல்லாம் வரலாற்றாசிரியர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டியவை.

வீரதீரர்களை உருவாக்கும் 
`மல்லர் கம்பம்!’

1936-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பெர்லினில் நடைபெற்றன. அப்போது நடைபெற்ற விழாவில் பிரிட்டிஷ் இந்தியா சார்பில் பாரம்பரிய விளையாட்டாக ‘மல்லர் கம்பம்' விளையாட்டை ஹிட்லர் முன் மகாராஷ்டிரா பகுதியைச் சேர்ந்த ஒரு குழு ஆடிக் காண்பித்திருக்கிறது. இதற்காக ஹிட்லரால் பதக்கங்களும் இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

1936 ஒலிம்பிக்ஸிற்குப் பிறகு சமீபத்தில் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸின் தொடக்க விழாவிலும் இந்தியா சார்பில் இந்த ‘மல்லர் கம்பம்' விளையாட்டை ஆடிக் காட்டும் வாய்ப்பு கிடைத்திருந்தது. ஆனால், கொரோனா காரணமாக அந்த ஒலிம்பிக்ஸே தாமதமாக நடைபெற்றதால் அந்த வாய்ப்பு நழுவிப்போனது.

ஆயினும், இந்த விளையாட்டு சார்ந்த முன்னெடுப்புகள் இந்தியாவில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. சமீபத்தில் குஜராத்தில் பிரமாண்டமாக நடந்து முடிந்த 36-வது தேசிய விளையாட்டுத் தொடர், இளையோர்களுக்கான கேலோ இந்தியா தொடர் போன்றவற்றிலும் இந்த மல்லர் கம்பம் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் இந்த ஆட்டம் பரவலாக கிளை பரப்பத் தொடங்கியிருக்கிறது. 2019-ல் இந்த விளையாட்டின் முதல் உலக சாம்பியன்ஷிப் தொடர் மும்பையில் நடந்தப்பட்டது. 17 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்தத் தொடரில் பங்கேற்றிருந்தனர். அதில், கவனிக்கத்தக்க வகையில் ஜப்பானைச் சேர்ந்த கெய்கோ டேக்மோடோ எனும் வீராங்கனை 2 தங்கப்பதக்கங்களையும் 1 வெண்கலப் பதக்கத்தையும் வென்றிருந்தார். ஏதோ ஒரு வீடியோ பார்த்து ‘மல்லர் கம்பம்' பற்றி அறிந்துகொண்ட டேக்மோடோ, பல முறை இந்தியாவிற்குப் பயணம் செய்து பயிற்சியில் ஈடுபட்டு நிபுணத்துவம் பெற்றிருக்கிறார். இப்போது ஜப்பானில் மல்லர் கம்ப கூட்டமைப்புகள் மூலம் விருப்பமுள்ளவர்களுக்கு இந்த விளையாட்டைக் கற்றுக் கொடுக்கவும் செய்கிறார். ‘‘ஜப்பானின் சூஷி உணவை இந்திய நண்பர்களுக்கு வழங்கினேன். பதிலுக்கு அவர்களின் பானி பூரியை எனக்குக் கொடுத்தார்கள்'' என டேக்மோடோ பரவசத்துடன் சொல்கிறார்.

‘மனதின் குரல்' நிகழ்ச்சியில் ஒருமுறை பிரதமர் மோடியும் அமெரிக்காவில் இந்த ‘மல்லர் கம்பம்' விளையாட்டுக்கான பயிற்சிகளை வழங்கி வரும் ஒரு இந்தியத் தம்பதி குறித்து புகழ்ந்து பேசியிருந்தார். ஒரு பண்பாட்டுப் பகிர்வுக்கான திறவுகோலாகவே மல்லர் கம்பம் விளையாட்டு உருவெடுத்திருக்கிறது.

வீரதீரர்களை உருவாக்கும் 
`மல்லர் கம்பம்!’

உடலில் உள்ள அத்தனை தசைகளையும் செயல்படத் தூண்டி வலுவூட்டுவதே இந்த ‘மல்லர் கம்பம்' விளையாட்டின் சிறப்பியல்பு. ஆனால், வெறுமனே உடல்வலிமை மட்டுமே இந்த விளையாட்டிற்குப் போதாது. ஒருங்கிணைந்த மனவலிமையும் இந்த விளையாட்டுக்குத் தேவையான அடிப்படை விஷயமே. சமீபத்தில் நடந்த தேசிய விளையாட்டுத் தொடரில் ‘மல்லர் கம்பம்' போட்டியில் 10 வயதே ஆன சௌர்யஜீத் எனும் சிறுவன் பங்கேற்றான். சௌர்யஜீத் போட்டியில் பங்கேற்றுக்கொண்டிருந்தபோது அவரின் தந்தை மறைவுற்றார். தந்தையின் மறைவுத் துயரைத் தாங்கிக்கொண்டு இறுதிப்போட்டியில் பங்கேற்ற சௌர்யஜீத், வெண்கலப் பதக்கத்தை வென்று தந்தையின் ஆன்மாவுக்கு மரியாதை செலுத்தினார். விளையாட்டுகள் கொடுக்கும் வலிமைக்கும் தீர்க்கத்திற்குமான சமீபத்திய உதாரணமே சௌர்யஜீத்.

இன்னொரு விளையாட்டோடும் அதன் நாயகர்களின் கதைகளோடும் மீண்டும் சந்திப்போம்!