Published:Updated:

சீமா பிஸ்லா... தந்தையின் தங்கக் கனவைச் சுமக்கும் மல்யுத்த வீராங்கனை!

சீமா பிஸ்லா
சீமா பிஸ்லா

சீமா பிஸ்லா... டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லக் காத்துக்கொண்டிருக்கிறார் இந்த 28 வயது ஹரியானா வீராங்கனை. இவர் ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தின் 50 கிலோ பிரிவில் மோத இருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஹரியானா மாநிலத்தின் ரோடக் மாவட்டத்திலுள்ள குதாம் என்ற சிறிய கிராமத்தில் 1993-ல் பிறந்தவர் சீமா பிஸ்லா. இவரோடு சேர்த்து வீட்டில் மொத்தம் நான்கு பெண்பிள்ளைகள். சீமாவே கடைக்குட்டி. பிரபலமான மல்யுத்த வீராங்கனைகளான கீதா போகத், பபிதா போகத்தின் தந்தையான மகாவீர் போகத்தை போலவே சீமா பிஸ்லாவின் தந்தையான ஆசாத் சிங்கும் ஒரு மல்யுத்த வீரரே.

தன்னால் மல்யுத்தத்தில் பெரிய உயரங்களை எட்ட முடியாததால் தன்னுடைய மகளை மல்யுத்தத்தில் ஒரு பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றுவிட வேண்டும் என்கிற உந்துதல் அவரிடம் இருந்தது. ஏழ்மையான சூழலிலும் சிறுவயதிலிருந்தே சீமாவுக்கு மல்யுத்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கிறார் ஆசாத் சிங்.

மல்யுத்தத்தில் ஒரு உச்சத்தை அடைய வேண்டும். குறிப்பாக, ஒலிம்பிக் போட்டியில் சாதித்தே ஆக வேண்டும் என்கிற கனவுடனே சிறு வயதிலிருந்து கடுமையாக பயிற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார் சீமா பிஸ்லா.

தேசிய அளவில் ஜுனியர் பிரிவில் சிறப்பாக ஆடிய சீமா, 2009-ம் ஆண்டு ஆசிய கேடட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். தொடர்ந்து, 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளிலும் ஆசிய ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலம் வென்றார்.

சீமா பிஸ்லா
சீமா பிஸ்லா

67 கிலோ எடைப்பிரிவிலிருந்து 50 கிலோ எடைப்பிரிவு வரை அத்தனை பிரிவிலும் ஆடியிருந்தாலும் சீமா பிஸ்லாவால் சீனியர் பிரிவில் அவ்வளவு எளிதாக தனக்கான இடத்தை அடையமுடியவில்லை. காரணம், சீனியர் அளவில் பெரிய போட்டியிருந்தது. கீதா போகத், பபிதா போகத்துக்கு பிறகு வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் என சில வீராங்கனைகள் மிகச்சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தனர். இவர்களையெல்லாம் தாண்டி கவனம் பெற்று மேலே வருவதற்கு சீமா பிஸ்லாவுக்கு சில காலம் பிடித்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2017-ல் தேசிய அளவிலான தொடர் ஒன்றில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். அதிலிருந்து தன்னுடைய ஒலிம்பிக் கனவை நனவாக்க விடாப்பிடியாக முயற்சி செய்ய தொடங்கினார். புதிதாக குர்கவுனைச் சேர்ந்த பரம்ஜீத் சிங் என்ற பயிற்சியாளரின் கீழ் பயிற்சி பெற தொடங்கினார். இது அவருக்கு சில நுணுக்கமான விஷயங்களையும் யுக்திகளையும் கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது.

சீமா பிஸ்லா
சீமா பிஸ்லா

டோக்கியோ ஒலிம்பிக்கை மனதில்வைத்து பயிற்சி செய்த சீமா பிஸ்லாவுக்கு ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று தொடரில் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், கஜகஸ்தானில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கல பதக்கத்தை வென்றார். ஆசிய அளவில் அவர் பெற்ற முதல் பதக்கம் இதுவே. இதன் விளைவாக உலக அளவிலான ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் ஆடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற கடைசி வாய்ப்பு இதுதான். இந்த வாய்ப்பின் மதிப்பை உணர்ந்திருந்தார் சீமா. பல்கேரியாவில் மே மாதம் நடைபெற்ற இந்த தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறி ஒலிம்பிக்கில் ஆடுவதற்கான வாய்ப்பைப் பெற்றார். எந்தக் கனவோடு வளர்ந்தாரோ அது இப்போது எட்டும் தொலைவில் இருக்கிறது!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்தப் போட்டிகள் ஜூலை 31-ம் தேதி முதல் தொடங்கியிருக்கின்றன.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு