கடந்த ஆண்டு நடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸை யாராலும் மறக்க முடியாது. ஏனெனில், நூற்றாண்டு காலமாக நடந்து வரும் அந்தக் கோலாகலமான விளையாட்டுத் திருவிழாவில் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்ஸ்தான் இந்தியாவின் மிகச்சிறந்த ஒலிம்பிக்ஸாக அமைந்திருந்தது. இந்தியா மொத்தமாக 7 பதக்கங்களை டோக்கியோவில் வென்றிருந்தது. டோக்கியோவில் போட்டிகள் தொடங்கிய முதல் நாளே முதல் பதக்கமாக பளு தூக்குதலில் வெள்ளியை வென்று கொடுத்தார் மீராபாய் சானு. அங்கிருந்துதான் இந்தியாவின் வெற்றிப்பயணம் தொடங்கியது. இந்தக் கட்டுரை அந்த நிகழ்வைப் பற்றியோ அல்லது அதை நிகழ்த்திய மீராபாய் பற்றியானதோ கிடையாது. அந்த நிகழ்வில் மீராபாய் சானுவோடு போடியத்தில் நின்றிருக்க வேண்டிய இன்னொரு வீராங்கனை பற்றியது. அவரின் பெயர் சஞ்சிதா சானு!
மீராபாயை போல சஞ்சிதா சானுவும் மணிப்பூரைச் சேர்ந்தவர்தான். வடகிழக்கின் எல்லா வீராங்கனைகளை போலவும் அவருக்கும் குஞ்சரணி தேவிதான் ஆதர்சம். அவரைப் போலவே முயன்று அவரைவிட அதிகம் சாதிக்க வேண்டும், அதுதான் சஞ்சிதா சானுவின் நோக்கம்.

போட்டிகளில் பங்கேற்பதற்காகக் கடுமையாக உழைத்தார். மீராபாய் சானுவுமே இவரோடு சேர்ந்துதான் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இருவருமே இணைந்து முன்னேற தொடங்கினர். ஆயினும், மீராபாயை விட சஞ்சிதா ஒருபடி அதிகமாகவே வெற்றிகளைக் குவித்தார்.
2014-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் தொடரில் பளு தூக்குதல் 48 கிலோ எடைப்பிரிவில் சஞ்சிதா தங்கம் வென்றிருந்தார். மீராபாய் வெள்ளியே வென்றிருந்தார்.
சஞ்சிதாவைப் பற்றி பேசுகையில் மீராபாயுடன் அவரை ஒப்பிடுவது மீராபாயை இறக்கிக்காட்டி அவரை மட்டுப்படுத்தும் முயற்சி அல்ல. சஞ்சிதா எந்தளவுக்கு மேதைமைகளுடன் சாதித்திருக்கிறார் என்பதை அழுத்திக் கூறுவதற்காக மட்டுமே இந்த ஒப்பீடு. 2018-ம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் தொடரில் 53 கிலோ எடைப்பிரிவிற்கு முன்னேறி அங்கேயும் தங்கம் வென்றார் சஞ்சிதா. 2020 ஒலிம்பிக்ஸ் கனவோடு ஒவ்வொரு தொடரிலுமே தன்னுடைய சிறப்பான பெர்பார்மென்ஸைத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருந்தார்.
இந்தச் சமயத்தில்தான் ஒரு பேரதிர்ச்சி அரங்கேறியது. அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்பாக எடுக்கப்பட்ட ஒரு சோதனையில் சஞ்சிதா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியதாகச் சோதனை முடிவுகள் வெளியாகின. சஞ்சிதாவுக்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது. கனவுகள் அத்தனையும் சுக்கு நூறாக நொறுங்கிப் போனதை போன்ற சூழல். சஞ்சிதா துவண்டுவிடவில்லை. தன்னுடைய தடைக்கு எதிராகப் போராடினார். எங்கெல்லாம் அவரின் குரலை ஒலிக்கச் செய்ய முடியுமோ அங்கெல்லாம் ஒலிக்கச் செய்தார்.
சில மாதங்கள் கழித்து சஞ்சிதாவிற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதற்காகக் கூறப்பட்ட காரணம் ரொம்பவே அபத்தமானதாக இருந்தது. சஞ்சிதாவின் உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட சோதனை மாதிரிகளில் எந்த விதமான தடை செய்யப்பட்ட மருந்துகளை உட்கொண்டதற்கான ஆதாரங்களும் இல்லை எனக் கூறப்பட்டது. ஆய்வுக்கூடத்தில் சஞ்சிதாவின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட சோதனை மாதிரி வேறு எதோ வீராங்கனையின் மாதிரியுடன் கலந்துவிட்டதாலயே முதலில் சந்தேகிக்கும் வகையில் முடிவுகள் வந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
அலட்சியத்தின் கொடூர விளைவு இது. இடைப்பட்ட காலத்தில் டோக்கியோ ஒலிம்பிக்ஸிற்கான தகுதிப்போட்டிகளில் கூட சஞ்சிதாவால் பங்கேற்க முடியாமல் போனது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் கனவும் தகர்ந்தது.
ஒருவேளை எல்லாம் சரியாக நடந்திருந்தால் மீராபாய் சானுவோடு சஞ்சிதாவும் டோக்கியோவில் பதக்கம் வென்றிருக்கக்கூடும். மேலே மீராபாய் சானுவோடு சஞ்சிதாவை ஒப்பிட்டதற்கான காரணமும் இதுதான். ஓர் இடைவெளிக்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகளில் மீண்டு வந்து சாதிப்பதென்பது அசாத்தியமானது. கடுமையான மனத்திடம் கொண்ட ஒரு சிலரால் மட்டுமே அதைச் செய்ய முடியும். சஞ்சிதாவும் இப்போது அந்த ஒரு சிலரில் இணைகிறார் என்பதே இப்போதே மகிழ்ச்சியான செய்தி.
குஜராத்தில் 36வது தேசிய விளையாட்டுத் தொடர் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. நான்காண்டுகளுக்கு பிறகு இந்தத் தொடரின் மூலம் களத்திற்குத் திரும்பியிருக்கும் சஞ்சிதா ஒரு சிறப்பான கம்பேக்கைக் கொடுத்திருக்கிறார்.

48 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய சஞ்சிதா 187 கிலோ பளுவைத் தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றிருக்கிறார். இதே பிரிவில் தங்கம் வென்றிருப்பது மீராபாய் சானு. அவர் 191 கிலோ பளுவைத் தூக்கியிருந்தார்.
ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற சிலருமே இந்தத் தேசிய தொடரிலும் பங்கேற்று பதக்கம் வெல்கின்றனர். அவர்களுக்கு இது மற்றுமொரு பதக்கம் அவ்வளவே. ஆனால், சஞ்சிதாவுக்கு இது ஒரு புது வாழ்வின் தொடக்கம். கனவுகளுக்குப் புத்துயிர் ஊட்டுவதற்கான ஊக்கம். அவர் இழந்ததையெல்லாம் மீட்பதற்கான பயணத்தை இங்கிருந்து தொடங்குகிறார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் அவர் அடைய நினைத்ததை 2024-ல் பாரிஸ் ஒலிம்பிக்ஸிலாவது அடைய வேண்டும். அடைவார்!