`உலகக் கோப்பை விமர்சனம்; டென்னிஸ் என்ட்ரி; கிராண்ட்ஸ்லாம் பரிசுத்தொகை!' - சானியா மிர்சா ஷேரிங்ஸ்

பெண்களுக்கு சரியான வழிகாட்டுதலும் வாய்ப்புகளும் கிடைத்தால் அவர்களால் இந்த உலகையே வெல்ல முடியும் என சானியா மிர்சா கூறியுள்ளார்.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கலந்துகொண்டார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை முன்வைத்தனர். இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சில அணிகள் தங்கள் வீரர்களின் மனைவிகளை உடன் அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை, உங்கள் பார்வை என்ன எனக் கேட்கப்பட்டது. ``இதற்கு என்ன அர்த்தம்? வீரர்களின் கவனம் திசை திரும்பும் அளவுக்கு பெண்கள் என்ன செய்கிறார்கள். இது நீண்டநாள்களாக இருக்கக்கூடிய பிரச்னை. பெண்கள் வீரர்களை திசை திருப்புகிறார்கள். அவர்கள் பலம் இல்லையா? தனது குடும்பம் தன்னுடன் இருக்கும்போது ஒரு வீரர் சிறப்பாக விளையாட முடியும். தனது அறையில் மனைவியோ, குழந்தையோ, தாயோ இருக்கும்போது அவர்களைப் பார்க்க உற்சாகத்துடன் வருவார்கள்.

யாரும் இல்லாத அறைக்குத் திரும்ப அவர்கள் விரும்ப மாட்டார்கள். அதனால்தான் எங்காவது வெளியில் செல்லலாம் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது. மனைவியோ, காதலியோ உடன் இருப்பது கூடுதல் பலத்தைக் கொடுக்கும்'' என்றார்.
உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி தோற்றபோது மாலிக் மற்றும் சாய்னா மீது எழுந்த சர்ச்சைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ``நான் அப்போது அங்கு இல்லை. எனக்கு என்ன பவர் இருக்கிறது. விராட் கோலி ரன்களைக் குவிக்காதபோது அனுஷ்கா ஷர்மாவை சாடுகிறார்கள். இது எல்லாம் என்ன மாதிரி மனநிலை. எதனுடன் எதை முடிச்சுப்போட பார்க்கிறார்கள்?'' எனக் காட்டமாக அவர் பதிலளித்தார்.
மேலும், அவர் பேசுகையில், ``நான் டென்னிஸ் விளையாட ஆரம்பித்த காலகட்டத்தில் பெண்களுக்கு ரோல் மாடல் என்றால் அது பி.டி.உஷாதான். இப்போது அப்படி இல்லை பி.வி.சிந்து. சாய்னா நேவால், தீபா கர்மாகர் என நிறைய பேர் இருக்கிறார்கள். விளையாட்டில் ஆர்வம் செலுத்தும் பெண்களை மக்கள் ஊக்குவிக்க வேண்டும். அவர்களைத் தாழ்வுப்படுத்தக் கூடாது. எனக்கு இதில் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன.

நான் 8 வயதில் டென்னில் விளையாட ஆரம்பித்தேன். என்னைச் சுற்றி இருந்தவர்கள் உறவினர்கள் என அனைவரும், `நீ டென்னிஸ் விளையாடினா உன் சருமம் கருப்பாகிடும். உன்ன யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க' என்றனர். எனக்கு அப்போது 8 வயது. தான் திருமணம் குறித்து அந்த வயதில் என்ன தெரியும்? அதனால் இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குப் பெரிதாகப் படவில்லை. நாம் ஒன்றும் இரண்டாம் தர குடிமக்கள் இல்லை என்பதை பெண்கள் உணர வேண்டும். அதை அவர்கள் உணர்ந்து செயல்பட ஆரம்பித்தால் சமமாக மதிக்கப்படுவார்கள், வாய்ப்புகளும் கிடைக்கும்.
பெண்களுக்கு சரியான வழிகாட்டுதலும், வாய்ப்புகளும் கிடைத்தால் அவர்களால் இந்த உலகையே வெல்ல முடியும். ஒரு உதாரணம் கூறுகிறேன். நாங்கள் உலக அரங்கில் இருக்கிறோம். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்று விளையாடுகிறோம். ஆண்கள், பெண்கள் இருவருக்கும் ஒரே அளவிலான பரிசுத்தொகைதான்.
ஆனால். ஏன் சமமான பரிசுத்தொகை கிடைக்கிறது என்பதை நியாப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கிரிக்கெட் மட்டுமல்லாமல் மற்ற விளையாட்டுகளுக்கும் இந்தியா முக்கியத்துவம் அளித்து வருகிறது” எனக் கூறினார்.