1) காபாவில் இந்தியாவின் வரலாற்று வெற்றி
ஐனவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காபாவில் விளையாடிய இந்திய அணி அபார வெற்றி பெற்றது. காபாவில் இந்திய அணி வரலாற்றில் பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இது. 33 வருடங்களுக்குப் பின்னர் காபா மைதானத்தில் ஆஸ்திரேலியா சந்தித்த முதல் தோல்வி இதுதான். தொடரின் முதல் ஆட்டத்தில் 36 ரன்களில் ஆல் அவுட் ஆன இந்திய அணி, கோலி போன்ற மூத்த வீரர்களின்றி இளம் வீரர்களை கொண்டு தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது ரசிகர்களால் காலத்துக்கும் கொண்டாடபடும் வெற்றியாய் இருக்கும்.

2) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் IND vs NZ
மூன்று வருடமாய் நடந்து வந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்தை சந்தித்தது. கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில், கோப்பைக்கு மிக அருகில் சென்ற இந்தியாவிற்குத் தோல்வி என்னும் ஏமாற்றமே மிஞ்சியது. 2019 உலககோப்பை முதல் இந்த இறுதி போட்டி வரை மழை இந்தியாவின் தோல்வியில் பெறும் பங்கு வகிக்கிறது. நட்சத்திர வீரர்கள் யாரும் ஜொலிக்காத காரணத்தினால் கோலி தலைமையில் ஐசிசி கோப்பை என்பது எட்டா கனியாகவே தொடர்கிறது.
3) தங்கமகன் நீரஜ் சோப்ரா
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று வரலாறு படைத்தார். ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுதான். மேலும் தனிநபர் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் வென்ற இரண்டு பேரில் ஒருவர் என்ற சிறப்பை பெற்றார் நீரஜ் சோப்ரா. இந்த முறையும் இந்தியா பதக்கப் பட்டியலில் பின் தங்கியே இருந்தது. இந்நிலையில் நீரஜ் தங்கம் வென்றது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுதும் பெரிதாய் பேசபட்டது.

4) ஹாக்கியில் இந்தியாவிற்கு வெண்கலம்
அந்த ஒலிம்பிக் தொடரில் வெண்கல பதக்கம் வென்று இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தைப் பரிசளித்தது ஆண்கள் ஹாக்கி அணி. இது 41 ஆண்டுகளுக்கு பிறகு ஹாக்கியில் இந்தியா வென்ற முதல் ஒலிம்பிக் பதக்கம். விறுவிறுப்பாக சென்ற வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தின் இறுதி நொடிகளில் ஜெர்மனியின் பெனால்டி கார்னரை ஸ்ரீஜேஷ் தடுத்து இந்தியாவின் வரலாற்று வெற்றியை உறுதி செய்தார். உலகத் தரவரிசையில் கீழே இருந்தும் ஒலிம்பிக்ஸில் அசத்தி வெண்கலம் வென்றது எதிர்பார்க்காத சாதனையாக இந்தியாவிற்கு அமைந்தது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய அணிக்குக் கிடைத்த மூன்றாவது வெண்கலம் இது.
5) வந்தனா கட்டாரியா
அந்த ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் அணி மட்டுமல்ல, பெண்கள் அணியும் பட்டையைக் கிளப்பியது. மிகச் சிறப்பாக செயல்பட்டு அரைஇறுதி வரை மூன்னேறிய அந்த அணி, அர்ஜென்டீனாவிடம் தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டருகில் சில நபர்களால் அவர்கள் குடும்பத்தின் மீது சாதிரீதியான வார்த்தைத் தாக்குதல் நடந்தது. தலித் மக்களை அணியில் சேர்த்ததே தோல்விக்குக் காரணம் என்று கூறினர். இச்சம்பவத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் வந்தனாவுக்கு ஆதரவு பெருகியது. அடுத்து நடந்த வெண்கல பதக்கப் போட்டியில் தோல்வியை தழுவினாலும் வந்தனா இறுதி கோலை அடித்து சாதி வெறியர்களின் வாயை மூடினார்.

6) பாராலிம்பிக்ஸில் இந்தியாவிற்கு 19 பதக்கங்கள்
ஒலிம்பிக் தொடர் முடிந்ததும் டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என்று மொத்தம் 19 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்தனர். 2016 பாராலிம்பிக்ஸில் வெறும் 4 பதக்கங்களை பெற்ற இந்திய வீரர்கள் இம்முறை பெரிய அளவில் பதக்க எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர். தமிழகத்தின் தங்கவேலு மாரியப்பன் இரண்டாவது முறையாக பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்று அசத்தினார். கடந்த ஒலிம்பிக்ஸில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ற வீரர்களே 19 பேர் என்ற நிலையில், இம்முறை 19 பதக்கங்கள் என்பது பாராலிம்பிக்ஸில் இந்தியா செய்த மாபெரும் சாதனைதான்.
7) தெற்காசிய கால்பந்தில் இந்தியா சாம்பியன்ஸ்
அக்டோபர் மாதம் மாலத்தீவுகளில் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் நடைபெற்றது. ஐந்து நாடுகள் பங்கேற்ற இந்த சாம்பியன்ஷிப்பில் நேபாளத்தை இறுதி ஆட்டத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் எட்டாவது முறையாக கோப்பையை வென்றது இந்திய கால்பந்து அணி. அதிக முறை இந்த கோப்பையை வென்ற நாடாக இந்தியாவின் சாதனை தொடர்கிறது. நட்சத்திர வீரரான கேப்டன் சுனில் சேத்ரி இத்தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

8) ஐ.பி.எல் கோப்பையை வென்ற சி.எஸ்.கே
அக்டோபர் மாதம் நடந்த ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. 2020-ல் நாக் அவுட்டுக்குக் கூட தேர்வாகாமல் வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ், கோப்பையை நான்காவது முறையாக வென்று சரித்திரம் படைத்தது. கொல்கத்தாவை இறுதி போட்டியில் சென்னை அணி தோற்கடித்தது இல்லை என்ற நிலைக்கும் முற்றுபுள்ளி வைத்தது. தோனி தலைமையில் இது கடைசி ஜ.பி.எல் என்று பலரும் கணித்தனர். இந்நிலையில், "நான் இன்னும் விட்டுப் போகவில்லை" என்று தோனி கூறியது கோப்பையுடன் ரசிகர்களுக்குக் கிடைத்த மற்றொரு பரிசாகிப் போனது.
9) இந்தியா vs பாகிஸ்தான்
டி20 உலககோப்பை இந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. கிரிக்கெட்டில் மிகப்பெரிய ரைவல்ரியாக பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி இந்த உலகக் கோப்பையிலும் நடந்தது. இதில் இந்திய அணி பாகிஸ்தானிடம் படுதோல்வியை தழுவியது. நீண்ட கால உலககோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரே பாகிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

10) கேப்டன்சியில் இருந்து விலகிய கோலி
நவம்பர் மாதம் உலககோப்பை தொடங்கும் முன்னரே உலககோப்பைக்கு பிறகு டி20 கேப்டன்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கேப்டன் கோலி. 2017-ல் டி20 கேப்டனான கோலி, நான்கே வருடங்களில் கேப்டன்சியிலிருந்து விலகியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. அதேபோல். ஐ.பி.எல் தொடரிலும் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ளார். வேலை சுமை அதிகமாகியுள்ளதே காரணம் என்று அப்போது தெரிவித்தார் கோலி. இது நடந்த ஒரே மாதத்தில் கோலியின் ஒருநாள் போட்டி கேப்டன்சியும் பறிக்க பட்டுள்ளது. ஆண்டின் இறுதியில் பல சர்ச்சைகளால் இது கங்குலி - கோலி யுத்தமாக மாறியுள்ளது.