Published:Updated:

இன்னொரு உசேன் போல்ட் வேண்டுமெனில், மின்னலே இன்னொரு பிறவிகொள்! Happy Birthday Bolt

ஆகஸ்ட் 5, 2012... 50-ம் ஆண்டு சுதந்திர தின விழாவுக்காக தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறது ஜமைக்கா. உலகை ஆண்ட இங்கிலாந்திடமிருந்து 6-8-1962-ல் சுதந்திரம் அடைந்தது அந்தக் குட்டிக் கரீபியத் தீவு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வெறுமனே பள்ளிகளிலும் அரசு அலுவலகங்களிலும் மட்டும் கொடியேற்றினால் சுதந்திரத்துக்கு அர்த்தம் சேர்ந்துவிடுமா? தன் நாட்டு மக்களுக்கு சுதந்திர தினப் பரிசை வேறுவிதமாகக் கொடுக்க விரும்பினார் உசேன் போல்ட்.

லண்டன், 30-வது ஒலிம்பிக் தொடர். தான் முன்பு பதக்கம் வென்றிருந்த 100 மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் ஒலிம்பிக் சாதனையோடு தங்கம் வெல்கிறார் போல்ட். தங்களை ஆண்ட ஆங்கிலேயர்களின் தலைநகரில், ஆங்கிலேய மக்களின் முன்னிலையில் நாட்டின் கொடி ஏற்றப்பட்டு, தேசியகீதமும் ஒலிக்க, தொடங்குகிறது ஜமைக்காவின் 50-வது சுதந்திர தினம். அதைவிடவும் ஒரு பரிசை ஒரு குடிமகனால் தன் நாட்டுக்குக் கொடுத்துவிட முடியுமா? கொடுத்தார் போல்ட்... உசேன் போல்ட். மனித உருவம் கொண்டு பிறந்த மின்னலின் மகன்!

10-ம் வகுப்பு பப்ளிக் எக்ஸாமில் proverb expansion என்றொரு கேள்வி வரும். 5 மதிப்பெண் கொடுப்பார்கள். அந்தப் பழமொழியை விளக்கி, அதற்குத் தகுந்த கதையை உதாரணமாகக்கொண்டு ஒரு பத்திக்கு எழுத வேண்டும். எனக்குக் கேட்கப்பட்டது - Time is Gold. எதைப் பற்றி எழுதுவது, என்ன எழுதுவது? நேரம்… தங்கம்… போல்ட்டின் பெயர்தான் மெடுல்லா ஆப்ளங்கேட்டாவில் ஸ்டிரைக் ஆனது. வெறும் 10 நொடி. நம் கம்ப்யூட்டரை பூட் செய்யும் செய்யும் நேரம். ஆனால், அதே நேரத்தில் மொத்த உலகையும் உரையவைத்து, கண்ணிமைக்காமல் அமரவைத்து அந்த 10 நொடியில் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் இந்த அசுரனைத் தவிர நேரத்தின் அருமையை நன்கு உணர்ந்தவர் இருந்திட முடியுமா?

அட எல்லா வீரர்களும் அந்த நேரத்துக்குள்தான் ஓடி முடிப்பார்கள். மிஞ்சிப்போனால் சில மைக்ரோ செகண்ட் வித்யாசம்தான் இருக்கும். அந்தப் போட்டியே அப்படித்தானே என்று பேசலாம். ஆனால், அந்தப் பத்து நொடிக்குள் இவர் என்ன மாயம் செய்கிறார் என்பதுதான் வித்தியாசம். எந்தவொரு வீரரும் கடைசி 10-20 மீட்டரில்தான் உச்சபட்ச வேகத்தைத் தொடவேண்டும் என்று நினைப்பார்கள். உயிரைக் கொடுப்பார்கள். ஆனால், பீஜிங்கில் இவர் ஓடிய அந்தக் கடைசி தருணங்கள்தான் இந்த மின்னலின் பெருமையைப் பரைசாற்றியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எத்தனையோ 100 மீட்டர் சாம்பியன்களைக் கண்டிருந்த உலகம், போல்ட்டுக்கும் பின்னால் வந்தவர்களுக்கும் அன்றிருந்த இடைவெளியைக் கண்டிருந்ததில்லை. அவருக்கும் மற்ற தடகள வீரர்களுக்குமான தூரம் இமயமளவு என்பதை அந்த ஒரு போட்டியே உணர்த்தியது. எல்லோரும் வேகமெடுத்த நேரம், வேகத்தடைக்கு முன் பிரேக் அடிக்கும் கார் போல ஸ்லோவாகினார் போல்ட். காற்றில் கைகளை நீட்டி கொண்டாடத் தொடங்கினார். தன் முன்னால் இருக்கும் இலக்கை மறந்து அவ்வளவு கூலாக அரங்கத்தை திரும்பிப் பார்த்தார். உலகம் என்னவோ 9.69 நொடிகளில் அவர் வென்றதாக சொல்கிறது. ஆனால், அந்தக் கடிகாரம் எட்டாவது விநாடியை அடைவதற்கு முன் உசேன் போல்ட் அந்தப் பந்தயத்தை வென்றுவிட்டார். ஓடத் தொடங்கி 7.9 நொடிகள் ஆனபோதே, அவர் கை காற்றில் நீளத் தொடங்கிவிட்டது. அவர் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. உசேன் போல்ட் எனும் சாம்ராஜ்யம் கட்டி எழுப்பப்பட்டுவிட்டது. எல்லாம் 8 நொடிகளுக்குள்ளாகவே!

Bolt during the 100m semi final of the RIo Olympics
Bolt during the 100m semi final of the RIo Olympics

இதையெல்லாம் கூட விட்டுவிடுங்கள். மேலிருக்கும் படம் பாருங்கள். போல்ட்டையும், அவரைச் சுற்றியுள்ள வீரர்களின் முக பாவனைகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். உலகின் அதிவேக ரேஸை ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வீரனின் முகத்தில் இப்படியொரு சிரிப்பை யாரும் பார்க்க முடியுமா என்ன?! ரியோ ஒலிம்பிக்கின் 100 மீட்டர் அரையிறுதியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. பாதி தூரம் ஓடியதும் சாவகாசமாக சுற்றியிருப்பவர்களை திரும்பிப் பார்த்து சிரித்துக்கொண்டே ஒருவரால் 100 மீட்டர் ரேஸை முடிக்க முடியுமென்றால் அது போல்ட்டால் மட்டுமே சாத்தியம்.

உலகம் போல்ட்டை கொண்டாடக் காரணம் இதுதான். அவர் வெற்றிகள் ஏற்கெனவே எழுதப்பட்ட ஒன்றுதான். ஆனால், அதை எப்படி நிகழ்த்துகிறார், என்ன மாயங்கள் செய்கிறார் என்பதைக் காணத்தான் ஒவ்வொருவரும் காத்திருந்தனர்.

பீஜிங், லண்டன், ரியோ என ஒவ்வொரு நகரமும் வெவ்வேறு டைம் ஜோனில் உள்ளவை. ஆனால், ஒவ்வொரு முறையும் மொத்த உலகையும் அந்த 10 நொடிகள் கண்ணுறங்காமல் விழிக்கவைத்திருந்தான் மந்திரக் கால்கள் கொண்ட இந்த மாய வித்தகன். கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸுக்காக மட்டுமே விழித்திருந்த உலகம், தடகளத்துக்காக விழித்திருந்தது – இவன் பெயர் சொல்வதற்காக.

3 out of 3 in Rio
3 out of 3 in Rio

ஒலிம்பிக் அரங்கில் கொடியேற்ற வைத்ததைப் பற்றிப் பேசினோம். டோக்கியோவில் அவரால் ஒலிம்பிக் கொடி ஏறவில்லை. ஆனால், இன்னும் ஜமைக்காவின் கொடியைப் பார்க்கும்போதெல்லாம் அவர்தான் ஞாபகம் வருகிறார். நீங்களே யோசித்துப் பாருங்களேன். இந்தியக் கொடியைப் பார்க்கும்பொது ஒருமைப்பாடு, சுதந்திரப் போராட்டம் என பல்வேறு விஷயங்கள் ஞாபகம் வரும். ஆஸ்திரேலிய கொடியைப் பார்த்தால் அந்நாட்டு கிரிக்கெட் அணி ஞாபகம் வரும். அர்ஜென்டினா கொடியைப் பார்த்தால் சே குவேரா, மாரடோனா, மெஸ்ஸி மூவரில் ஒருவர் ஞாபகம் வருவர். ஆனால், ஜமைக்காவின் கொடியைப் பார்க்கும்போது இந்த மின்னலின் முகமே நம் கண்முன் வெட்டிச் செல்லும். போல்ட், ஜமைக்காவின் அடையாளம் மட்டுமல்ல. அஸ்திவாரம். அந்தத் தீவைத் தாண்டிய உலகத்துக்கு போல்ட்டும், ஜமைக்காவும் வேறு இல்லை. அதனால்தான் உலகம் கண்ட மகத்தான ஒலிம்பியனாய் அவரை உலகம் கொண்டாடுகிறது.

சச்சின், கிரிக்கெட் ஆடிய காலத்திலேயே ‘அடுத்த சச்சின்’ என அடையாளம் காட்டப்பட்டார் விராட் கோலி. ரொனால்டோவும் மெஸ்ஸியும் சுழன்றுகொண்டிருக்கும்போதே உலகம் எம்பாப்பே, ஹாலண்ட் ஆகியோரை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், போல்ட் ஓய்வுபெற்று 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னொரு போல்ட்டை இந்த உலகம் இன்னும் அடையாளம் காணவில்லை. அப்படி ஒருவனை அடையாளம் காண்பது என்பது இயலாத காரியம். அப்படி ஒருவன் பிறப்பானா என்பதும் கேள்விக்குறியே!

இனி அப்படி ஒருவனை இந்த உலகம் பார்க்கவேண்டுமெனில், மின்னலே இன்னொரு பிறவிகொள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு