கட்டுரைகள்
Published:Updated:

ரீல் டு ரியல் - சமத்துவம் பேசும் க்விடிச்!

க்விடிச்
பிரீமியம் ஸ்டோரி
News
க்விடிச்

அடிப்படையில் கால்பந்தில் கோல் போடும் வகையிலானதுதான் இந்த விளையாட்டும். ஆனால், சில பேன்டஸி அம்சங்களும் நிரம்பியதாக இருக்கும்.

பாகுபலி படத்தில் காளகேயர்கள் பேசும் மொழியை கவனித்திருக்கிறீர்களா? நாம் இதுவரை கேட்டிராதது அது. அந்த மொழியைப் பற்றிய சிறுதகவலைக்கூட நாம் அறிந்திருக்கமாட்டோம். அறிய நினைத்திருந்தாலும் முடிந்திருக்காது. ஏனெனில், காளகேயர்கள் பேசும் அந்த வித்தியாசமான மொழி பாகுபலி படத்திற்கென்றே பிரத்யேகமாகக் கற்பனையாக பாடலாசிரியர் மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்டது. படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற சமயத்தில் சிலர் காளக்கேயர்கள் பேசும் அந்த மொழியைக் கற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்திருந்தனர். மதன் கார்க்கியேகூட அந்த மொழியைக் கற்றுத் தருவதற்குப் பயிற்சி வகுப்புகளை நடத்த இருப்பதாகவெல்லாம் செய்திகள் வெளியாகியிருந்தன. திரையில் கற்பனையாக விரிந்து பிரமிப்பூட்டிய ஒரு விஷயத்தை அப்படியே ரீல் டு ரியலாக நிஜமாக்க முயன்றால் அது ஒரு வினோதமான அனுபவமாகத்தான் இருக்கும், நாம் இந்தப் பகுதியில் பார்க்கவிருக்கும் க்விடிச் (Quidditch) விளையாட்டைப் போல!

ரீல் டு ரியல் - சமத்துவம் பேசும் க்விடிச்!

க்விடிச் என்ற விளையாட்டு ‘ஹாரிபாட்டர்' ரசிகர்களுக்கு ரொம்பவே பரிச்சயமானதுதான். உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தன்னகத்தே ஈர்த்து வைத்திருக்கும் ‘ஹாரிபாட்டர்' நாவலிலும் திரைப்படத்திலும் இந்த க்விடிச் விளையாட்டும் முக்கிய அங்கமாக இடம்பெற்றிருக்கும். ஜே.கே.ரௌலிங் எழுதிய ‘ஹாரிபாட்டர்' கதையின் நாயகன் ஹாரி யதார்த்த உலகிலிருந்து மாய உலகிற்குப் பயணித்து அங்கே மந்திர தந்திரங்கள் நிறைந்த ‘ஹாக்வர்ட்' பள்ளியில் இணைவார். கற்பனைக்கும் எட்டாத மாயங்கள் நிறைந்த அந்தப் பள்ளியின் ஆஸ்தான விளையாட்டே ‘க்விடிச்'தான்.

அடிப்படையில் கால்பந்தில் கோல் போடும் வகையிலானதுதான் இந்த விளையாட்டும். ஆனால், சில பேன்டஸி அம்சங்களும் நிரம்பியதாக இருக்கும். அத்தனை வீரர்களும் அந்தரத்தில் மந்திரத் துடைப்பத்தில் பறந்தபடியேதான் இந்த ஆட்டத்தை ஆடுவார்கள். இரு அணிகள், ஓர் அணியில் 7 வீரர்கள் இருப்பார்கள். இந்த 7 வீரர்களில் 3 பேர் சேஸர்கள். 2 பேர் பீட்டர்கள். ஒருவர் கீப்பர். இன்னொருவர் சீக்கர். குவாஃபிள், ப்ளட்சர், ஸ்நிச் என மூன்று விதமான பந்துகள் ஒரே ஆட்டத்தில் பயன்படுத்தப்படும். இருபுறங்களிலும் வட்ட வடிவ வளையங்கள் வைக்கப்பட்டிருக்கும். குவாஃபிள் என்கிற அளவில் பெரிய பந்தை அணியின் சேஸர்கள் தங்களுடைய வளையத்திற்குள் சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்க்கும்போது 10 புள்ளிகள் வழங்கப்படும். வளையத்திற்குள் பந்தைச் சேர்க்கவிடாமல் எதிரணியின் பீட்டர்கள் ப்ளட்சர் என்கிற இன்னொரு பந்தை வைத்து அட்டாக் செய்வார்கள். இந்த ப்ளட்சரை எதிரணி வீரரின் மீது எறிந்துவிட்டால், அடிபடும் வீரர் மீண்டும் ஆட்டத்திற்குள் வர எங்கிருந்தாலும் தன் அணியின் வளையத்தைத் தொட்டுவிட்டுவர வேண்டும். இப்படியாக முட்டலும் மோதலுமாகச் சென்றுகொண்டிருக்கும் ஆட்டத்தின் இடையே கோல்டன் ஸ்நிச் என்ற ஒரு பறக்கும் பந்து திடீரென களத்திற்குள் வரும். இதை இரு அணிகளின் சீக்கர்கள் மட்டுமே பிடிக்க வேண்டும். இந்த ஸ்நிச்சைப் பிடித்துவிட்டால் ஆட்டம் அத்தோடு முடிந்துவிடும். ஸ்நிச்சைப் பிடித்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். ‘ஹாக்வர்ட்' பள்ளிக்குச் சென்று ஆடும் முதல் போட்டியிலேயே நாயகன் ஹாரி சீக்கராக இறங்கி தன்னுடைய அணிக்காக அந்த கோல்டன் ஸ்நிச்சைப் பிடித்து ஆட்டத்தை வென்று கொடுப்பார். இது முழுக்க முழுக்கத் திரைப்படத்திற்காகக் கற்பனையாக எழுதப்பட்ட விளையாட்டே. திரைப்படத்தில் இந்த விளையாட்டை மையமாகக் கொண்ட காட்சிகள் பார்க்க பயங்கர சுவாரஸ்யமாக இருக்கும்.

ரீல் டு ரியல் - சமத்துவம் பேசும் க்விடிச்!

அதிகம் விற்கப்பட்ட புத்தகங்களின் வரிசையில் ஹாரிபாட்டர் எப்போதுமே டாப் லிஸ்ட்டில் இருக்கும். அதுபோக, திரைப்படத்தின் பல்வேறு கதாபாத்திரங்களும் பயன்படுத்தியதைப் போன்ற உடைகளுக்கும் பொருள்களுக்கும் என்றே தனிச் சந்தை இருக்கிறது. அவையும் கோடிக்கணக்கில் வியாபாரம் ஆகிக்கொண்டிருக்கிறது. இவையெல்லாம் வழக்கமாக எல்லா பிரபலமான படங்களுக்கும் நடப்பவைதான். ஆனால், ஹாரிபாட்டர் ரசிகர்கள் கொஞ்சம் வினோதமாக யோசித்து படத்தில் கற்பனையாக ஆடப்பட்ட ‘க்விடிச்' ஆட்டத்தையே நிஜமாக்கியிருக்கின்றனர்.

அமெரிக்காவின் மிடில்பரி கல்லூரியில் 2005-ம் ஆண்டு இந்த ‘க்விடிச்' ஆட்டத்தை ஆடிப் பார்க்க முடிவெடுக்கின்றனர். யாருக்கும் ஹாரிபாட்டரைப் போல நெற்றியில் மின்னல் தழும்பு இல்லாததாலும், யாராலும் ஒன்பதே முக்கால் பிளாட்பாரத்தின் சுவருக்குள் புகுந்து மாய உலகத்திற்குள் செல்ல முடியாது என்பதாலும், அந்தரத்தில் பறக்கும் செட்டப்பை மட்டும் அப்படியே மாற்றிவிட்டார்கள். ரக்பியைப் போல வீரர்கள் தரையிலேயே இந்த ஆட்டத்தை ஆடுவார்கள். ஆனாலும், அந்த ஹாரி பாட்டர் கனெக்‌ஷனை விட்டுவிடக் கூடாது என்பதற்காக துடைப்பத்திற்கு பதிலாக ஒரு பைப்பைக் காலுக்கிடையில் வைத்துக்கொண்டு தங்களை ஹாக்வர்ட் பள்ளியின் மாணவர்களாகவே ஃபீல் செய்து கொண்டு இந்த ஆட்டத்தை ஆடுகிறார்கள். கற்பனை விளையாட்டில் கோல்டன் ஸ்நிச் பந்து தானாகவே பறந்து ஆட்டத்திற்குள் வரும். இங்கே மஞ்சள் உடை அணிந்த ஒரு நபர் திடீரென ஆட்டத்திற்குள் ஓடி வருவார். இரு அணிகளின் சீக்கர்களும் அவரின் பின்னால் கட்டப்பட்டிருக்கும் பந்தைப் பிடுங்கப் போட்டி போட்டுக்கொள்வார்கள்.

அமெரிக்காவில் தொடங்கிய இந்த ஆட்டம் இப்போது 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக ஆடப்பட்டுவருகிறது. மற்ற விளையாட்டுகளைப் போலவே க்விடிச்சுக்கென்றும் சர்வதேச அளவில் நிர்வாக அமைப்பு இருக்கிறது. உலகக்கோப்பைத் தொடர்களுமே நடத்தப்பட்டிருக்கிறது.

ரீல் டு ரியல் - சமத்துவம் பேசும் க்விடிச்!

இந்த ஆட்டத்திற்கென்றே சில சிறப்பம்சங்களும் இருக்கின்றன. பெரும்பாலான ஆட்டங்களில் இருபாலரும் தனித்தனிப் பிரிவிலேயே ஆடுவார்கள். ஆனால், இந்த ‘க்விடிச்' ஆட்டத்தில் பாலின வேற்றுமைகளுக்கு இடமே இல்லை. ஒரு அணியில் ஆடும் 7 பேரில் 4 பேருக்கு மேல் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது. இதன் மூலம் ஒரே அணியில் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் என யார் வேண்டுமானாலும் ஆட முடியும்.

‘ஹாரிபாட்டர்' நாவலை எழுதிய ஜே.கே.ரௌலிங் சமீபத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிராகச் சில கருத்துகளைக் கூறிவிட, அவருடைய அபிப்ராயத்திற்கு எதிராகப் பலரும் தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தினர். இந்த வரிசையில் ரௌலிங்கின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் க்விடிச்சை நிர்வகிக்கும் அமைப்புகள் இனி இந்த விளையாட்டை ‘க்விடிச்' என்று அழைக்க மாட்டோம் என்றும், அதற்கு பதிலாக ‘க்வாட்பால்' என அழைக்கப்போகிறோம் என்றும் முடிவெடுத்திருக்கின்றனர். சமத்துவம் பேசும் மாய விளையாட்டு!