Published:Updated:

``பழநி படிக்கட்டு மாதிரி எத்தனை கட்டிங்ஸ்!'' - உலக சாம்பியன்ஸ் இந்த அப்பா - மகன் காம்போதான்!

பாடிபில்டிங்கில் அப்பா-மகன் டூயோ
பாடிபில்டிங்கில் அப்பா-மகன் டூயோ

``இந்தப் போட்டிக்காக உலகம் முழுவதும் மொத்தம் 45 நாடுகள்ல இருந்து போட்டியாளர்கள் வந்திருந்தாங்க. இவங்க எல்லோருமே நாங்க ரெண்டு பேரும் அப்பா - மகன்னு சொல்லும்போது ஆச்சர்யப்பட்டுப்போனாங்க.''

பாடி பில்டிங்கில் பல முறை பல சாம்பியன்ஷிப்களை வென்றவர் அப்பா. அவர் மகனும் சாம்பியன். இதுபோதாதென இப்போது அப்பாவும் மகனும் சேர்ந்து ஒரு பதக்கத்தைத் தட்டி வந்திருக்கிறார்கள்.

Rajendra Mani - Benjamin Jerold
Rajendra Mani - Benjamin Jerold

மாஸ்டர் ராஜேந்திர மணி... பழநி படிக்கட்டு மாதிரி மாஸ்டர் உடல் முழுக்க அத்தனை கட்டிங்ஸ். இவர் நான்கு முறை மிஸ்டர் வேர்ல்டு பட்டங்களையும் 4 முறை மிஸ்டர் ஏசியா பட்டத்தையும், 14 முறை மிஸ்டர் இந்தியா பட்டத்தையும் வென்றவர். இவரைப் போலவே இவர் மகன் பெஞ்சமின் ஜெரால்டும் தற்போது பாடி பில்டிங் சாம்பியன். இவர் இதுவரை 2 மிஸ்டர் வேர்ல்டு பட்டங்களையும், ஒரு மிஸ்டர் ஏசியா பட்டத்தையும் வென்றுள்ளார். சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உலக பாடி பில்டிங் சரித்திரத்திலேயே முதல் முறையாக அப்பா, மகன் இருவரும் வெற்றி வாகை சூடியுள்ளனர். இதில் மகன் பெஞ்சமின் ஜெரால்டு ஜூனியர் பிரிவில் வெள்ளி பதக்கத்தை வெல்ல, தந்தை ராஜேந்திர மணி சீனியர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இந்த தாம்பரம் பாய்ஸை சந்தித்தேன்!

``என்னோட அப்பா ஒரு பாக்ஸிங் கோச். அதனால சின்ன வயசுலயே ஜிம் மேல பெரிய லவ் வந்துடுச்சு. 14 வயசுல ஜிம்ல சேர்ந்தேன். அப்போதிலிருந்து இப்போ வரைக்குமே பாடி பில்டிங்ல நடக்கிற எல்லா போட்டியிலுமே கலந்துப்பேன். ஜெயிச்சுட்டும் வர்றேன். இந்தியாவில் சாம்பியன் ஆஃப் சாம்பியன் பட்டம் ஜெயிச்ச ஒரே தமிழன் நான் மட்டும்தான். சமீபத்துல கொரியாவுல நடந்த பாடி பில்டிங் சாம்பியன்ஷிப்ல நான் என் மகன்னு ரெண்டுபேருமே கலந்துக்கிட்டோம். நிச்சயம் ஒரு பதக்கத்தோடுதான் திரும்ப வரணும்கிற வெறி எங்க ரெண்டுபேருக்குள்ளேயும் இருந்தது. ஆனா, பணப்பிரச்னையால் முதலில் என் மகன் மட்டுமே கலந்துக்க முடியும்கிற நிலை. கடைசியில சில நல்ல உள்ளங்கள் உதவி பண்ணதால ரெண்டு பேரும் கலந்துக்கிட்டோம். இதனால இந்தப் போட்டிக்காக நான் 45 நாள் மட்டுமே பயிற்சி எடுத்தேன். இந்தப் போட்டிக்காக உலகம் முழுக்க 45 நாடுகள்ல இருந்து போட்டியாளர்கள் வந்திருந்தாங்க. எல்லோருமே நாங்க அப்பா மகன்னு சொன்னப்போ அவ்ளோ ஆச்சர்யத்தோடப் பார்த்தாங்க. நான் சீனியர் பிரிவிலும், மகன் பெஞ்சமின் ஜூனியர் பிரிவிலும் பட்டம் ஜெயிச்சப்போ, ஏதோ இந்த உலகத்தையே ஜெயிச்ச மாதிரி இருந்தது.

நான் இந்தியன் ஏர் ஃபோர்ஸ்ல கொஞ்சம் வருஷம் வேலை பார்த்துட்டு விருப்ப ஓய்வு வாங்கிட்டேன். சம்பாதிச்ச பணம் முழுசையும் எனக்குப் பிடிச்ச பாடி பில்டிங்கிலேயே செலவழிச்சிட்டேன். நான் பணம் சேர்க்கவில்லையே தவிர இந்தத் துறையில் நிறைய அனுபவத்தையும் இந்தியாவுக்கான புகழையும் கொண்டுவந்து சேர்ந்திருக்கேன். அதனால எப்பவும் மகிழ்ச்சிதான்'' எனச் சிரிக்கிறார் ராஜேந்திர மணி.

Rajendra Mani - Benjamin Jerold
Rajendra Mani - Benjamin Jerold
"ஜிம்முக்கு அனுப்புங்க; தம்மு, தண்ணியை விட்ருவாங்க!"- மிஸ்டர் வேர்ல்டு போட்டிக்குத் தேர்வான மேஸ்திரி

மகன் பெஞ்சமின் ஜெரால்டிடம் பேசினேன். ``நான் ஸ்கூல், காலேஜ்லயெல்லாம் ஒரு அத்லெட்டாத்தான் இருந்தேன். பாடி பில்டிங் எனக்கே ஆச்சர்யம்தான். என் வாழ்க்கையின் திருப்புமுனையும் அதான். இதுக்கு முக்கியக் காரணம், இந்திய மற்றும் உலக பாடி பில்டிங் கூட்டமைப்பின் தலைவர் சேத்தன் பத்ரி. அப்பா பாடி பில்டிங்ல இருந்தாலும். அவர் என்னை இதில் முதல்ல டிரெய்ன் பண்ணல. சேத்தன் சார்தான் என்னை பாடி பில்டிங்ல சேருன்னு ஊக்கப்படுத்தினார். ஆரம்பத்துல பாடி பில்டிங் பண்ண முடியுமான்னு எனக்கே என்மேல சந்தேகம் இருந்துச்சு. ஆனா, கொஞ்சம் கொஞ்சமா அப்பா மாதிரி நாமலும் சாதிக்கணும்கிற வெறி வந்துடுச்சு. பயிற்சி எடுத்துக்கிட்டே இருந்தேன். ஒருநாளுக்கு எட்டு மணி நேரம் பயிற்சி மட்டும்தான். பாடி பில்டிங்குக்குள்ள வந்த ஒன்றை வருஷத்திலேயே என்னால் மிஸ்டர் வேர்ல்டு ஆக முடிஞ்சதுக்கு முழுக் காரணம் என் அப்பாவும் என் குடும்பமும்தான். பயிற்சி செய்றப்போ அப்பா மகன்ற உணர்வே இருக்காது. மாஸ்டரிடம் பயிற்சி பெறும் மாணவனாவே இருப்பேன். இன்னும் இந்தத் துறையில நிறைய சாதிக்கணும். அப்புறம் ஜிம்முக்கு வரும் இளைஞர்களுக்கு சரியான பயிற்சி கொடுக்கணும். இதுதான் எங்க லட்சியம்'' என்கிறார் பெஞ்சமின்.

Rajendra Mani - Benjamin Jerold
Rajendra Mani - Benjamin Jerold

வீட்டில் ஒரு பாடி பில்டர் இருந்தாலே அவருக்கான டயட் பயங்கரமாக இருக்கும். வீட்டில் இரண்டு உலக சாம்பியன்களை வைத்து எப்படி சமைத்து சமாளிக்கிறார் என வீட்டின் டயட் மாஸ்டர் பிரிஸில்லா ஜெயந்தியிடம் கேட்டேன்.

Rajendra Mani - Benjamin Jerold Family
Rajendra Mani - Benjamin Jerold Family

``பாடிபில்டிங்குக்கு புரோட்டீன்தான் ரொம்ப முக்கியம். ஒரு நாளுக்கு 4 டு 6 முறை, சரியான இடைவெளில இவங்க சாப்பிடணும். பயிற்சிக்கு முன்னாடி அதிகப்படியான கார்போஹைட்ரேட் தேவைப்படும். ஆனால், பயிற்சிக்குப் பின்னாடி கார்ப்ஸ் தேவையில்லை. அதனால இவங்க டயட்டை டைம் பார்த்து சரியாகக் கொடுக்கணும். வேகவெச்ச முட்டை, சிக்கன், சப்பாத்திதான் அதிகம் சமைச்சிக் கொடுப்பேன்'' என மெனு சொன்னார் பிரிஸில்லா.

அடுத்த கட்டுரைக்கு