Published:Updated:

Qatar Gp: ஜெயிக்கப்போவது யார்? - கத்தாரின் முதல் 'ஃபார்முலா 1' ரேஸ்!

கத்தாரில் தகுதிச்சுற்று மற்றும் கிராண்ட் ப்ரீ போட்டிகள் இரண்டுமே இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது என்பதால் இந்திய ஃபார்முலா 1 ரசிகர்களுக்குக் குஷி தான்!

2021-ன் முதல் இரவு நேர கிராண்ட் ப்ரீக்கு நம்மை வரவேற்கிறது கத்தார் (Qatar GP). கத்தார் மட்டுமல்ல; அடுத்து சவுதி அரேபியா மற்றும் அபுதாபியில் நடக்கவிருக்கும் இரண்டு கிராண்ட் ப்ரீக்களுமே இரவு நேரப் போட்டிகள்தான். F1 வரலாற்றிலேயே முதல் முறையாக கத்தாரில் நடக்கவிருக்கிறது நாளைய கிராண்ட் ப்ரீ. பிரேசிலில் இருந்து பல்வேறு குழப்பங்களோடும் சர்ச்சைகளோடும் கத்தாருக்கு வந்திருக்கிறது ஃபார்முலா 1. ஃபார்முலா 1-ன் டாப் டீம்களான மெர்சிடீஸ், ரெட்புல் - இரண்டுமே ஒன்று மற்றொன்றின் மீது அதிருப்தியில் இருக்கிறது. பிரேசிலில் இருந்தே தொடர்ந்து ஹாமில்ட்டனின் கார் மீது குற்றச்சாட்டை வைத்து வருகிறார் ரெட்புல்லின் டீம் ப்ரின்சிப்பலான கிரிஸ்டியன் கார்னர். ஹாமில்ட்டனின் காரில் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக இன்னும் டெக்னிகல் வேறுபாடு இருப்பதாகத் தோன்றுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார் கார்னர்.

கத்தார் கிராண்ட் ப்ரீ
கத்தார் கிராண்ட் ப்ரீ

பிரேசிலியன் கிராண்ட் ப்ரீயில் 48-வது லேப்பில் ஹாமில்ட்டன் ஓவர்டேக் செய்யும்போது, வெர்ஸ்ட்டப்பன் வேண்டுமென்றேதான் வைடாக ஓட்டிச் சென்றார் என மெர்சிடீஸ் கூறிவருகிறது. வெர்ஸ்ட்டப்பனின் அந்த மூவை மெர்சிடீஸ் ரிவ்யூ செய்திருந்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை நிராகரித்திருக்கிறது F1 நிர்வாகம். '48-வது டர்ன்' சர்ச்சையில் மெர்சிடீஸ் மட்டுமல்லாது, ஃபார்முலா 1-ன் மற்ற போட்டியாளர்களின் கருத்தும் மெர்சிடீஸ் பக்கமே இருக்கிறது. இதற்கு முன்னரும் இதேபோன்ற சம்பவங்கள் மற்ற போட்டியாளர்களுக்கு நிகழ்ந்திருக்கிறது, அப்போதெல்லாம் பெனால்டிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன எனக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள் மற்ற போட்டியாளர்கள்.

ட்ராக் எப்படி?

இந்தச் சர்ச்சைகளுக்கிடையேதான் நடைபெறவிருக்கிறது கத்தார் கிராண்ட் ப்ரீ. கத்தார் கிராண்ட் ப்ரீ நடைபெறவிருக்கும் லொசெய்ல் இன்டர்நேஷனல் சர்க்யூட்டானது மோட்டோஜிபி ரேஸுக்கு ஏற்றவாறே வடிவமைக்கப்பட்டுக் கட்டப்பட்டிருக்கிறது. 2004-ல் கட்டப்பட்டது முதல் இங்கு மோட்டோ ஜிபி ரேஸ்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன. இப்போதுதான் முதன் முறையாக ஃபார்முலா 1 போட்டி நடைபெறவிருக்கிறது. இதற்கு முன் போட்டிகள் நடைபெற்றதில்லை என்பதால், இந்த ட்ராக்கில் யாருடைய செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எந்த ஸ்ட்ரேட்டஜியும் இல்லை. ஃப்ரீ ப்ராக்டீஸ் நிகழ்வுகள்தான் போட்டியாளர்களுடைய செயல்பாடு எப்படி இருக்கிறது என்று நம்மால் ஓரளவு தெரிந்து கொள்ள முடியும்.

கத்தார் கிராண்ட் ப்ரீ
கத்தார் கிராண்ட் ப்ரீ

மீடியம் மற்றும் அதிவேக திருப்பங்கள் அதிகம் கொண்டதாக இருக்கிறது லொசெய்ல் சர்க்யூட். ஒட்டுமொத்தமாக வேகமான சர்க்யூட்டாக இருக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது. ப்ராக்டீஸ் செஷனில் பங்கெடுத்த போட்டியாளர்களும் சர்க்யூட்டைப் பற்றி பாசிட்டிவ்வாகவே கூறியிருக்கிறார்கள். இந்த ட்ராக்கானது பாலைவனத்தில் அமைந்திருப்பதால், தூசி மற்றும் மண் துகள்கள் ட்ராக்கை ஆக்கிரமிக்கும். இதனால், டயரும் விரைவிலேயே டீகிரேடு ஆகும் வாய்ப்பு இருப்பதால் C1, C2 மற்றும் C3 டயர்களை ஹார்டு, மீடியம் மற்றும் சாஃப்ட் டயர்களாகக் கொடுத்திருக்கிறது பிரெல்லி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ப்ராக்டீஸ் செஷன்:

முதல் மற்றும் இரண்டாம் ப்ராக்டீஸ் செஷன்கள் நேற்றே நடந்து முடிந்து விட்டன. முதல் ப்ராக்டீஸ் செஷனானது மாலையில் மிதமான வெயில் நேரத்திலும், இரண்டாவது ப்ராக்டீஸ் செஷனானது இரவிலும் நடந்திருக்கிறது. முதல் செஷனில் வெர்ஸ்ட்டப்பன் முன்னிலையில் முடிக்க, இரண்டாவது செஷனில் போட்டாஸ் முன்னிலையில் முடித்திருக்கிறார். ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது மெர்சிடீஸ் கார்களின் செயல்பாடு இங்கு சிறப்பாக இருக்கிறது. மெர்சிடீஸ், ரெட்புல், ஃபெராரி, ஆல்ஃபாடௌரி மற்றும் மெக்லரன் என்ற வரிசையில் கார்களின் வேகம் இருக்கிறது.

கத்தார் கிராண்ட் ப்ரீ
கத்தார் கிராண்ட் ப்ரீ

மெர்சிடீஸ் இன்ஜின்களின் பெர்ஃபாமன்ஸ் ஒவ்வொரு ரேஸிலும் குறைவதாக மெக்ஸிகன் கிராண்ட் ப்ரீயின் முடிவில் தெரிவித்திருந்தார் மெர்சிடீஸின் பிரின்ஸிபல் டோடோ வுல்ஃப். அதன் காரணமாகவே, யுஎஸ் கிராண்ட் ப்ரீயில் போட்டாஸுக்கும், பிரேசிலியன் கிராண்ட் ப்ரீயில் ஹாமில்ட்டனுக்கும் புதிய இன்ஜினை மாற்றினார்கள், அது ஓரளவு மெர்சிடீஸுக்குக் கைகொடுக்கவும் செய்தது. ஆனால், இன்னும் மூன்று போட்டிகள் மீதம் இருக்கின்றன. பிரேசிலில் காட்டிய அதே வேகத்தை மெர்சிடீஸ் கார்கள் மற்ற ட்ராக்குகளிலும் காட்டுமா என்பதுதான் மெர்சிடீஸ் கவலைப்படும் விஷயமாக இருக்கிறது. பிரேசிலில் மெர்சிடீஸின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்றாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அதன் பெர்ஃபாமன்ஸ் குறையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது ரெட் புல்.

இந்தப் போட்டியிலும் வெர்ஸ்ட்டப்பனைவிட ஹாமில்ட்டனுக்குத் தான் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் அதிகமாக இருக்கிறது. காரணம், வெறும் 14 புள்ளிகள் மட்டுமே ஹாமில்ட்டனைவிட முன்னால் இருக்கிறார் வெர்ஸ்ட்டப்பன். முடிவு எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கத்தார் கிராண்ட் ப்ரீ?

இந்த லொசெய்ல் இன்டநேஷனல் சர்க்யூட்டில் நடக்கும் முதல் மற்றும் கடைசி F1 கிராண்ட் ப்ரீயாக நாளை நடக்கவிருக்கும் கிராண்ட் ப்ரீயே இருக்கும். 2023-ல் இருந்து ஃபார்முலா 1 ரேஸுக்காவே வடிவமைக்கப்பட்ட புதிய சர்க்யூட்டில் கத்தார் கிராண்ட் ப்ரீ நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து 2023-ல் இருந்து 2032 வரை பத்தாண்டுகளுக்கு கத்தார் கிராண்ட் ப்ரீயும் F1 காலண்டரில் தவறாமல் இடம்பெறும்.

கத்தார் கிராண்ட் ப்ரீ
கத்தார் கிராண்ட் ப்ரீ

இந்திய ரசிகர்கள் ஃபார்முலா 1 போட்டிகளைப் பார்க்க வேண்டும் என்றால் எப்போதும் நள்ளிரவு அல்லது அதிகாலை வரை முழித்திருக்க வேண்டும். ஆனால் இந்தப் போட்டியின் தகுதிச்சுற்றும் மற்றும் கிராண்ட் ப்ரீ போட்டிகள் இரண்டுமே இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது என்பதால், இந்திய ஃபார்முலா 1 ரசிகர்களுக்குக் குஷிதான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு