Published:Updated:

தணியாத தாகம்; மூன்றாவது முயற்சியில் கிடைத்த வெற்றி!- `உலக சாம்பியன்ஷிப்' ஆன பி.வி சிந்து!

கலிலுல்லா.ச

உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டனில் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார், இந்திய வீராங்கனை பி.வி சிந்து. அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

PV Sindhu
PV Sindhu

சுவிட்சர்லாந்தின் பா.செல் நகரில் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு களம் கண்டனர். இதன் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதியில், தரநிலையில் 5-வது இடம் வகிக்கும் பி.வி சிந்து, 4-வது இடத்தில் இருந்த சீனாவின் சென் யுஃபேவுடன் மோதினார்.

PV Sindhu
PV Sindhu

போட்டி தொடங்கியதும் ஆக்ரோஷமாக ஆடிய சிந்து, புள்ளிகளைத் தன்வசம் குவிக்கத் தொடங்கினார். சீன வீராங்கனையால் சிந்துவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதியில், சிந்து 21-7, 21-14 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். முன்னதாக, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டி வரை முன்னேறியபோதும் இரண்டாவது இடமே பிடித்து சிந்து ஏமாற்றம் அளித்தார். மூன்றாவது முறையாக இறுதிக்குள் தடம் பதித்த சிந்து, தங்கப்பதக்கம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துவந்தது.

இந்நிலையில், இன்று நடந்த இறுதிப்போட்டியில், ஜப்பானின் நசோமி ஒகுஹராவுடன் மோதினார், பி.வி சிந்து. இம்முறை தங்கம் வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் களம் கண்டார் சிந்து. அதன்படி, தொடக்கம் முதலே பி.வி. சிந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்திற்கு ஒகுஹராவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் முதல் செட்டை 21-7 என பி.வி. சிந்து எளிதாகக் கைப்பற்றினார்.

PVSindhu
PVSindhu

2-வது செட்டிலும் அதே உத்வேகத்துடன் விளையாடினார். இதனால் 2-வது செட்டிலும் ஆதிக்கம்செலுத்தி, அதையும் 21-7 எனக் கைப்பற்றி, ஜப்பான் வீராங்கனை நசோமியை தோற்கடித்துத் தங்கம் வென்றார். இதன்மூலம், உலக சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முதலாகத் தங்கம் வென்ற இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை பி.வி. சிந்து படைத்துள்ளார். உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டனில் பட்டம் வென்ற சிந்துவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

`பி.வி. சிந்துவால் மீண்டும் இந்தியா பெருமையடைகிறது. பேட்மின்டன் வெற்றிக்கு வாழ்த்துகள். இளம்தலைமுறையினருக்கு பி.வி. சிந்துவின் வெற்றி முன்னுதாரணமாக இருக்கும்” என்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.