Published:Updated:

``ப்ரோ கபடிக்குப் பின் வாழ்க்கையே மாறிவிட்டது!" - ராகுல் சவுத்ரி

ப்ரோ கபடி லீகின் ‘போஸ்டர் முகமாக’ உச்சத்தை எட்டியது முதல், விராட் கோலியின் ஃபேவரைட் கபடி வீரரானது வரை ராகுல் சவுத்ரி பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் இங்கே...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2019 ப்ரோ கபடி லீக் தொடரின் 'சென்னை லீக்' போட்டிகள், ஜவகர்ஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்துவருகிறது. தமிழ் தலைவாஸ் ரைடர் ராகுல் சவுத்ரிக்கு, தமிழ் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க, சென்னை வந்தவரிடம் நேர்காணலுக்காகச் சந்தித்தோம்.

உத்தரப்பிரதேச மாநில அணிக்காக விளையாடத் தொடங்கிய பயணத்திலிருந்து, ப்ரோ கபடி லீகின் ‘போஸ்டர் முகமாக’ உச்சத்தை எட்டியது வரை, 2018 ஆசிய கோப்பையில் இந்திய அணி தோற்றது, விராட் கோலியின் ஃபேவரைட் கபடி வீரரானது என ராகுல் சவுத்ரி பகிர்ந்துகொண்ட சில விஷயங்கள் இங்கே...

`கபடி...கபடி...’ பயணம் தொடங்கியது எப்போது?

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம்தான் என்னுடைய சொந்த ஊர். அண்ணனைப் பார்த்து 13 வயதில் கபடி விளையாடத் தொடங்கினேன். ஆரம்பத்தில் பெற்றோர் அனுமதிக்கவில்லை. படிப்பில் கவனம் செலுத்த அறிவுறுத்தினார்கள். ஆனால், தேசிய அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்றதால், ஏர் இந்தியாவில் எனக்கு வேலை கிடைத்தது. வேலை கிடைத்த பின்புதான், கபடி விளையாடுவதற்கு வீட்டில் ஆதரவு தந்தனர். டிஃபெண்டராகத் தொடங்கிய எனது கபடி பயணத்தில், இப்போது ரைடராக விளையாடிவருகிறேன்.

தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் கபடி வீரர் நீங்கள். தமிழ் தலைவாஸ் அணியுடனான இந்தப் பயணம் எப்படி உள்ளது?

இந்த சீஸனில், தமிழ் தலைவாஸ் அணியின் முதல் போட்டி ஹைதராபாத் காச்சிபவுலி மைதானத்தில் நடைபெற்றது. தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில், ஹோம் கிரவுண்டாக இருந்தாலும் ஹைதராபாத் ரசிகர்கள் எனக்கு உற்சாகம் அளித்தனர். தெலுங்கு டைட்டன்ஸ் ரசிகர்களுடனான இதே பந்தம், தமிழ் தலைவாஸ் ரசிகர்களிடமும் உள்ளது. எந்த அணியில் இருந்தாலும், ரசிகர்கள் எனக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ப்ரோ கபடி லீக் தொடருக்கு முன், பின்... வாழ்க்கை எப்படி மாறியது?

ப்ரோ கபடி லீகில் பங்கேற்பதற்கு முன், தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால், பி.கே.எல் தொடருக்குப் பிறகு, ‘ஃபேன் ஃபாலோயிங்’ வந்ததை நம்ப முடியவில்லை. (சிரித்துக்கொண்டே). மற்ற விளையாட்டுகளின் லீக் தொடர்களைப் போலவே பி.கே.எல் தொடரை மக்கள் வரவேற்றனர். கபடி விளையாட்டு பிரபலமானது, நானும் பிரபலமானேன். ரயிலில் பயணப்பட்ட நாங்கள் இப்போது விமானத்தில் பறக்கிறோம். வாழ்க்கை ரொம்பவே மாறியுள்ளது.

அஜய் தாக்கூர் - ராகுல் சவுத்ரி இணை, தோனி - விராட் இணையைப் போன்றது என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். கூல் கேப்டன் அஜய் தாக்கூர் பற்றி...

விராட் பாய் இப்படிச் சொன்னபோது ஆச்சர்யமடைந்தேன். உண்மையில், அஜய் போன்ற ஒரு கூல் கேப்டனை நான் பார்த்ததில்லை. இக்கட்டான சூழ்நிலைகளில் அணி வீரர்களுக்கு அழுத்தத்தைக் கடத்த மாட்டார். தனிப்பட்ட ரெக்கார்டுகளுக்காக விளையாடுவதைத் தவிர்த்து, அணியின் வெற்றிக்காக விளையாடுவதையே அஜய் பாய் விரும்புவார். சிறந்த முறையில் வழிநடத்திச் செல்லக்கூடிய கேப்டன் அவர்.

களத்தில் மஞ்சித் சில்லர் உடனான அனுபவம்...

அஜய் ஒரு மாதிரி, நான் ஒரு மாதிரி, மஞ்சித் பாய் ஒரு மாதிரி... கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக மஞ்சித்தை எனக்கு தெரியும். மிகவும் உரிமையாகப் பழகுவார். போட்டியின்போது, தெளிவாகவும் வேகமாகவும் முடிவெடுப்பார். போட்டிக் களத்தில் மஞ்சித் பாய் போல ஒருவர் மிகவும் அவசியம்.

``ப்ரோ கபடிக்குப் பின் வாழ்க்கையே மாறிவிட்டது!" - ராகுல் சவுத்ரி

ஏழு முறை தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணி, 2018 ஆசிய கோப்பை அரை இறுதியில், இரானிடம் தோல்வியுற்றது. இந்தப் பின்னடைவு உங்களை எப்படி பாதித்தது?

உண்மையாக, நாங்கள் இரான் அணியை குறைத்து மதிப்பிட்டோம். தங்கப்பதக்கங்களை குவித்த ஓர் அணி, அரை இறுதியை எளிதில் கடந்துவிடுவோம் எனக் கூடுதல் தன்னம்பிக்கை கொண்டிருந்தோம். அது மிகப்பெரிய தவறு என்பதை போட்டி முடிந்தபின் உணர்ந்தோம். அஜய் பாய் அழுது நான் பார்த்ததில்லை. அந்த அரை இறுதிப்போட்டிக்குப் பின் அஜய் பாய் அழுததை மறக்க முடியாது. கபடி உலகக் கோப்பையில் இரான் அணியின் ஆதிக்கம் இருக்கும். இரான் வீரர்களைச் சமாளிக்க, இந்திய அணி தயாராகிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும்.

கபடிக் களத்தில் ராகுல் சவுத்ரி இருந்தாலே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். இது உங்களுக்கு அழுத்தம் தருகிறதா?

தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு விளையாடியபோது, அழுத்தம் அதிகமாக இருந்தது. அணியின் வெற்றிக்கு மிகவும் என்னைச் சார்ந்து இருந்தனர். ஆனால், தமிழ் தலைவாஸ் அணியில் இந்த அழுத்தம் குறைவு. அஜய், ஷபீர், மஞ்சித் ஆகியோர் அணிக்கு பலம். எனவே, அழுத்தமின்றி விளையாடிவருகிறேன். எனினும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யாதபோது வருத்தமாக இருக்கும்

``ப்ரோ கபடிக்குப் பின் வாழ்க்கையே மாறிவிட்டது!" - ராகுல் சவுத்ரி

பி.கே.எல் தொடரில், விரைவில் 1000 புள்ளிகளை எட்ட இருக்கிறீர்கள். இந்தச் சாதனை குறித்து...

முன்னரே சொன்னதுபோல, தனிப்பட்ட ரெக்கார்டுகளுக்காக விளையாடுவதைத் தவிர்த்து, அணிக்காக விளையாடினாலே இந்த ரெக்கார்டும் கைவசம் வரும். பர்தீப் நார்வாலும் இந்தச் சாதனையை எட்ட உள்ளார். தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டும் என்பது மட்டுமே இப்போதைய குறிக்கோள்.

ரைடர் டிஃபெண்டராகவும், டிஃபெண்டர் ரைடராகவும் விளையாடும் டிரெண்டு ஆரோக்கியமானதா?

கண்டிப்பாக ஆரோக்கியமானது. டிஃபெண்டராகத் தொடங்கிய நான், இப்போது ரைடராக விளையாடிவருகிறேன். போட்டியின்போது நான் அவுட்டாகி வெளியேறும்போது, அணி வீரர்கள் என்னை உள்ளெடுக்க மிகவும் போராடுவர். முடிந்தவரை, என்னுடைய பணியைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். தேவைப்பட்டால், அணிக்கு ஏற்ற பொசிஷனில் விளையாடுவதில் தவறில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு