Published:Updated:

`குடும்பத்தைக் காப்பாத்தணுமே..!' - இம்ரானின் புதியவிதியால் தவிக்கும் 1,000 கிரிக்கெட் வீரர்கள்

துறை சார்ந்த அணிகளில் விளையாடி வந்த பல்வேறு தொழில்முறை வீரர்களின் தொழில் பாதுகாப்பு கேள்விக்குறியானது. ஒரே வாரத்தில் அவர்களில் பல பேர் கிரிக்கெட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இம்ரான் கான்
இம்ரான் கான்

`நான் இங்கிலாந்து சென்றேன். அங்கு கிரிக்கெட் விளையாட கற்றுக்கொண்டேன். நாங்கள் அங்கிருந்து திரும்பியபோது, மற்ற வீரர்களின் தரத்தை உயர்த்தினோம். பாகிஸ்தான் அணியை சரிசெய்ய முடிவுசெய்துள்ளேன். எனது வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த உலகக் கோப்பையில், நீங்கள் பார்க்கும் பாகிஸ்தான் அணி ஒரு தொழில்முறை அணியாக இருக்கும். நாங்கள், எங்களது அமைப்புகளைச் சரிசெய்ய உள்ளோம். திறமையாளர்களை வெளிக்கொண்டுவருவோம்'.... இப்படி சொன்னது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். உலகக்கோப்பையில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்த பிறகு இந்த வார்த்தைகளை உதிர்த்தார் இம்ரான்.

இம்ரான் கான்
இம்ரான் கான்

இவர் இப்படி பேசிய அடுத்த மாதமே மாற்றங்கள் கண்டது பாகிஸ்தான் அணி. நீங்கள் நினைப்பதுபோல அந்த மாற்றங்கள் தேசிய அணியில் செய்யப்படவில்லை. மாறாக முதல்தர கிரிக்கெட் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டன. அதற்கு முன்பாக பாகிஸ்தான் முதல்தர கிரிக்கெட்டில் இரண்டு விதமான அணிகள் பங்கேற்றுவந்தன. அதன்படி பிராந்திய ரீதியான அணிகளும், ரயில்வேஸ், வங்கிகள் போன்ற துறை சார்ந்த அணிகளும் முதல்தர கிரிக்கெட்டில் பங்கேற்றுவந்தன. ஆனால், சமீபத்தில் இம்ரான் கொண்டுவந்த சீரமைப்பால் துறை சார்ந்த அணிகள் அனைத்தும் கலைக்கப்பட்டு மொத்தமாக ஆறு பிராந்திய ரீதியான அணிகள் மட்டுமே முதல்தர கிரிக்கெட்டில் பங்கேற்க முடியும் என்கிற வகையில் விதிகள் மாற்றப்பட்டன.

சீனர்களாக மாற ஐந்தாண்டு கெடு; தவிக்கும் உய்குர் இன மக்கள்... குரல் கொடுப்பாரா இம்ரான் கான்?

தேசிய அணியின் நலன்கருதி இப்படிப்பட்ட சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டதாக இம்ரான் கான் தெரிவிக்கப்பட்டாலும் இதில் சில குறைகள் உள்ளதை கவனிக்கத் தவறினர். விளைவு துறை சார்ந்த அணிகளில் விளையாடி வந்த பல்வேறு தொழில்முறை வீரர்களின் தொழில் பாதுகாப்பு கேள்விக்குறியானது. ஒரே வாரத்தில் அவர்களில் பல பேர் கிரிக்கெட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம்தான் ஃபசல் சுபான் என்னும் பாகிஸ்தான் முதல்தர கிரிக்கெட் வீரர் குறித்த செய்தி. 31 வயதாகும் இந்த ஃபசல் சுபான் பாகிஸ்தான் முதல்தர கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடியுள்ளார். uaid-e-Azam டிராபி, U-19 உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளவர் 2,301 ரன்கள் வரை எடுத்துள்ளார்.

ஃபசல் சுபான்
ஃபசல் சுபான்

சமீபத்தில் முதல்தர கிரிக்கெட்டில் செய்யப்பட்ட மாற்றத்தால் தான் நேசித்த கிரிக்கெட்டை விட்டு வெளியேறியவர் தற்போது மினி லாரி டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இவர் மினி லாரி ஓட்டும் வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியாக பாகிஸ்தான் வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டை விட்டு வெளியேறியபோது செலவுக்குக்கூட காசு இல்லாததால் தற்போது ஆட்டோ ஒட்டி வருகிறார் ஃபசல். இதுகுறித்து பேசியுள்ள அவர், ``பாகிஸ்தானுக்காக விளையாடுவதற்கு நான் மிகவும் கடினமாக உழைத்தேன்.

சரியும் பாகிஸ்தான் பொருளாதாரம்... இம்ரான் கானை லெஃப்டில் அடிக்கும் ராணுவத் தளபதி!

ஆனால் அது முடியவில்லை. ஆம்.. இப்போது மினி லாரி ஓட்டி வருகிறேன். இது சீசனுக்கு கிடைக்கிற வேலைதான். சில நாள்கள் வேலை இருக்கும். சில நாள்கள் இருக்காது. 10 நாள்களுக்கு மேல்கூட வேலை இல்லாமல் இருந்திருக்கிறேன். நல்லவேளை எனக்கு இப்போது இந்த வேலையாவது கிடைத்தது. நாளை இந்த வேலைக்கூட இருக்குமா என்பது தெரியாது. எங்களை போன்றவர்களுக்கு வேறுவழியில்லை. எங்களுக்கென்று குடும்பம், குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற வேண்டும். துறை சார்ந்த அணியில் விளையாடியபோது எங்களுக்கு ரூ 1 லட்சம் வரை வருமானம் கிடைத்தது. ஆனால், இப்போது 35,000 ரூபாய்கூட கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஃபசல் சுபான்
ஃபசல் சுபான்

இதைவைத்து பிழைக்க முடியாது" எனக் கூறுகிறார். இவர் மட்டுமல்ல, புதிய விதிகளால் இவரைப் போன்று பல்வேறு வீரர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது என்கிறார் பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் முகமது ஹபீஸ். ``மிகவும் வருத்தமாக இருக்கிறது. இவரைப் போன்று பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய விதி 200 வீரர்களைக் கவனிக்கிறது. ஆனால், இதன்காரணமாக 1,000 வீரர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். இதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.

பலூசிஸ்தானுக்கு என்ன பதிலை வைத்திருக்கிறார் இம்ரான்?