Published:Updated:

விரைவில் இந்தியாவில் ஒலிம்பிக்... அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம்தான் டார்கெட்டா?

நரேந்திர மோடி ஸ்டேடியம்
நரேந்திர மோடி ஸ்டேடியம் ( Populous )

விரைவில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த, ஆரம்பக்கட்ட முயற்சிகளை தொடங்கியுள்ளது அந்நகரின் மேம்பாட்டு ஆணையம்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சென்ற ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டிகள் உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, இந்தாண்டின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்படிருந்தது. ஆனால் ஜப்பான் நாட்டில் நோயின் தாக்கம் தற்போது அதிகரித்துவருவதால் அங்கு அவசரநிலை அமலில் உள்ளது. இதனால் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து பலத்த குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய மற்றொரு செய்தி தற்போது பேசுபொருளாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரின் ‘நகர்புற மேம்பாட்டு ஆணையம்’ அந்நகரின் உள்கட்டமைப்பினை மதிப்பிடுவதற்கும் அந்நகரில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு என்ன வசதிகள் தேவை என்று ஆராய்வதற்கும் அத்துறை ஆலோசகர்களிடம் சமீபத்தில் விவாதித்துள்ளது.

அமித் ஷா
அமித் ஷா

இதுகுறித்த செய்தி ஒன்றை கடந்த புதன்கிழமை, அதன் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது அந்த ஆணையம். அதில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு விளையாட்டு மைதானங்கள் மற்றும் இன்ன பிற கட்டமைப்பு வசதிகள் குறித்து மதிப்பிடுவதற்கு ஓர் ஆலோசகரை நியமிக்கவும் தொழில்நுட்ப ரீதியாக அனுபவம் வாய்ந்த பொறியியல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தவும் அழைப்பு ஒன்றை விடுத்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் சர்தார் படேல் விளையாட்டு வளாகத்தின் (நரேந்திர மோடி ஸ்டேடியம்) திறப்பு விழாவிற்கு வந்திருந்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரரான அமித் ஷா, "இவ்விடம் ஒலிம்பிக் மற்றும் பிற சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளை விரைவில் பெரும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த ஆணையத்தால் நியமிக்கப்படும் ஆலோசகர் அந்நகரின் தற்போதைய வசதிகள் குறித்தும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு எதிர்காலத்தில் தேவைப்படும் வசதிகள் குறித்தும் தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றினை மூன்றரை மாதங்களுக்குள் சமர்பிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2048ஆம் ஆண்டு தலைநகர் புது டெல்லியில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், அகமதாபாத்தில் அப்போட்டிகளை நடத்த, ஆரம்பக்கட்ட முயற்சிகளை தொடங்கியுள்ளது அந்நகரின் மேம்பாட்டு ஆணையம்.

நரேந்திர மோடி ஸ்டேடியம்
நரேந்திர மோடி ஸ்டேடியம்

2024-ம் ஆண்டிற்கான போட்டிகள் ப்ரான்ஸ் தலைநகர் பாரிசிலும் அதற்கடுத்த எடிஷன் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்ஜெலஸ் நகரிலும் நடைபெறவுள்ளன. மேலும் 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கும் ஆஸ்திரேலிய நகரான பிரிஸ்பேன் முன்னிலையில் உள்ளதால், 2036 அல்லது 2040-ம் ஆண்டிற்காக வேண்டுமானால் இந்தியா முயற்சி செய்யலாம்.

அதற்கான கால அவகாசம் இன்னும் 15 ஆண்டுகள் இருந்தாலும் இந்திய அரசின் இந்த மெகா பட்ஜெட் கனவு நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
அடுத்த கட்டுரைக்கு