Published:Updated:

வெற்றிக்குக் காத்திருக்கும் வீரர்கள்!

மீராபாய் சானு
பிரீமியம் ஸ்டோரி
மீராபாய் சானு

TOKYO 2020

வெற்றிக்குக் காத்திருக்கும் வீரர்கள்!

TOKYO 2020

Published:Updated:
மீராபாய் சானு
பிரீமியம் ஸ்டோரி
மீராபாய் சானு

ஒரு வருட ஒத்திவைப்பு, தொடர் போராட்டங்கள், பல்வேறு குழப்பங்கள்... அனைத்தையும் கடந்து, வரும் 23-ம் தேதி டோக்கியோவில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்படவுள்ளது. இது வெறும் விளையாட்டுக்களம் இல்லை, சாம்பியன்களை, ஜாம்பவான்களை, ரோல் மாடல்களை, இனத்தின், தேசத்தின், மக்களின் நாயகர்களை உருவாக்கும் பட்டறை.

வெற்றிக்குக் காத்திருக்கும் வீரர்கள்!

சுமார் 11,000-த்துக்கு மேலான வீரர்கள் ஜப்பான் தலைநகருக்குப் படையெடுத்திருக்கிறார்கள். மொத்தம் 339 போட்டிகள் நடக்கும் இந்தத் தொடரில், இந்தியா இதுவரை இல்லாத அளவுக்குச் சிறப்பாகச் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை அதிகபட்சமாக 124 (69 ஆண்கள், 55 பெண்கள்) இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கவிருக்கிறார்கள். ரியோ ஒலிம்பிக்கில் வெறும் 2 பதக்கம் மட்டுமே வென்று ஏமாற்றம் அடைந்திருந்தாலும், அதைச் சரிக்கட்டும் வகையில் டோக்கியோவில் நம்மவர்கள் செயல்பாடுகள் இருக்கும் என்று வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். வழக்கம்போல் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம் என்று மட்டுமல்லாமல், வேறு விளையாட்டுகளிலும் நம் வீரர்கள் முத்திரை பதிக்கலாம்.

வெற்றிக்குக் காத்திருக்கும் வீரர்கள்!

இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லக்கூடியவர்களாகக் கருதப்படும் டாப் 10 வீரர்கள்...

வெற்றிக்குக் காத்திருக்கும் வீரர்கள்!

மீராபாய் சானு - பளுதூக்குதல்

இந்த ஒலிம்பிக்கில் மீராபாய் சானு பதக்கம் வெல்லவில்லை என்றால்தான் ஆச்சர்யம். அதை உலக அதிசயமாகக்கூட அறிவித்துவிடலாம். 49 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கும் மீராபாய் சானு, அதிகபட்சமாக 205 கிலோ தூக்கக்கூடியவர். அவருக்குப் போட்டியாக இருந்தது 2 சீன வீராங்கனைகளும் ஒரு வடகொரிய வீராங்கனையும். கொரோனா காரணமாக வடகொரியா ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. ஒரு நாடு, பளுதூக்குதலில் அதிகபட்சம் ஒரு வீரரைத்தான் அனுப்ப முடியும். அதனால், குறைந்தபட்சம் சானுவுக்கு வெள்ளிப்பதக்கமாவது கிடைத்துவிடும்!

வெற்றிக்குக் காத்திருக்கும் வீரர்கள்!

தீபிகா குமாரி - வில்வித்தை

வில்வித்தையில் உலகின் நம்பர் 1 எனும்போது, நிச்சயம் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பை டோக்கியோவுக்குச் சுமந்து செல்கிறார் தீபிகா குமாரி. 2012 ஒலிம்பிக் தொடரிலும் இவர்மீது உச்சபட்ச எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், உடல்நிலை, காற்று போன்ற விஷயங்கள் அவருக்குப் பாதகமாக அமைந்தன. ஆனால், இம்முறை இவருடைய அனுபவம் நிச்சயம் இந்தியாவுக்குப் பதக்கம் பெற்றுக்கொடுக்கும். ரீகர்வ் பிரிவில் பங்கேற்கும் தீபிகா, சமீபத்தில் பிரான்ஸில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் 3 பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். ஒலிம்பிக்கில் தனி நபர் பிரிவிலும், தன் கணவர் அடானு தாஸோடு சேர்ந்து கலப்பு அணிப் பிரிவிலும் பங்கேற்கிறார். ஒன்றுக்கு இரண்டு பதக்கங்கள் வந்தாலும் ஆச்சர்யமில்லை.

வெற்றிக்குக் காத்திருக்கும் வீரர்கள்!

வினேஷ் போகத் - மல்யுத்தம்

ரியோ ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் பெயர் ஒரு பதக்கத்தில் உறுதியாக எழுதப்பட்டிருந்தது. ஆனால், முழங்கால் காயத்தின் காரணமாகக் காலிறுதியில் தோற்று வெளியேறினார், அப்போது 21 வயதே ஆகியிருந்த இளம் வினேஷ். அதன்பிறகு வழங்கப்பட்ட அர்ஜுனா விருதையும்கூட வீல்சேரில் வந்துதான் வாங்கினார். ஆனால், இந்த ஆண்டுகளில் மீண்டும் எழுந்து மிரட்டத் தொடங்கிவிட்டார். அப்போது 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றவர், டோக்கியோவில் 53 கிலோ பிரிவில் கலந்துகொள்கிறார். தன் விருதுப் பட்டியலில் கடந்த ஆண்டு கேல் ரத்னாவை இணைத்துக்கொண்டவர், இந்த ஆண்டு ஒலிம்பிக் பதக்கத்தைக் குறிவைத்திருக்கிறார்.

வெற்றிக்குக் காத்திருக்கும் வீரர்கள்!

பஜ்ரங் பூனியா - மல்யுத்தம்

இந்தியாவில் ஒவ்வொரு மல்யுத்த வீரருக்குமான கதை பஞ்ரங் பூனியாவுக்கும் உண்டு. இவர் தந்தையும் மல்யுத்த வீரர்தான். ஏழு வயதிலேயே கோதாவில் இறங்கியவர், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தேசத்தின் கனவைச் சுமந்து ஒலிம்பிக் அரங்கில் ஏறப்போகிறார். 20 வயதிலேயே சர்வதேச அளவில் பதக்கங்கள் வெல்லத் தொடங்கியவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா விளையாட்டுத் துறைக்கு வழங்கும் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் பெற்றார். சமீபத்தில் காயமடைந்திருந்தாலும், அதிலிருந்து விரைவில் மீண்டு வந்திருக்கிறார். பஞ்ரங் பூனியா ஃபிட்டாக இருந்தால், 65 கிலோ ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் நிச்சயம்.

வெற்றிக்குக் காத்திருக்கும் வீரர்கள்!

பி.வி.சிந்து - பேட்மின்டன்

ரியோவில் தவறவிட்ட தங்கத்தை டோக்கியோவில் வேட்டையாடும் வேட்கையோடு காத்திருக்கிறார் பி.வி.சிந்து. சில்வர் சிந்து என்று தன்மீதான விமர்சனத்துக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் 2019 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார். சமீபத்தில் மிகச் சிறப்பான செயல்பாடு இல்லையென்றாலும், ஒலிம்பிக்கில் தன் பழைய ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களில் சிந்துவுக்கு ஆறாவது தரநிலை வழங்கப்பட்டிருக்கிறது. குரூப் பிரிவும் எளிமையாகவே அமைந்திருக்கிறது. அதனால், சிந்துவுக்கு இரண்டாவது பதக்கம் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

வெற்றிக்குக் காத்திருக்கும் வீரர்கள்!

அமித் பங்கல் - குத்துச்சண்டை

இந்த ஒலிம்பிக் தொடருக்கு நம்பர் 1 வீரராகச் செல்லும் பல்வேறு இந்தியர்களில் அமித் பங்கலும் ஒருவர். குத்துச்சண்டையின் 52 கிலோ எடைப் பிரிவில் (ஃபிளைவெயிட்) இந்த 25 வயது ஹரியானா வீரர் தங்கம் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. காமன்வெல்த் போட்டியில் வெள்ளி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் எனத் தொடர்ந்து அசத்திவந்த பங்கல், 2020-ல் ஜெர்மனியில் நடந்த பாக்ஸிங் உலகக் கோப்பையில் தங்கம் வென்றார். தொடர்ந்து தன்னுடைய செயல்பாட்டில் மெருகேற்றிக்கொண்டே இருப்பதால், நிச்சயம் விஜேந்தர் சிங் போல மெடலோடு வருவார் என்று நம்புகிறார்கள்.

வெற்றிக்குக் காத்திருக்கும் வீரர்கள்!

அபிஷேக் வெர்மா - துப்பாக்கி சுடுதல்

துப்பாக்கி சுடுதலைப் பொறுத்தவரை எதிர்பாராத ஒருவர் பதக்கம் வெல்வதுதான் இந்திய மரபு. ஏனெனில், அவர்கள்மீது அழுத்தம் குறைவாக இருக்கும். அந்த வகையில், அனைத்துத் திறமைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் அபிஷேக் வெர்மா இம்முறை ஏதேனும் ஆச்சர்யம் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. தனிநபர் பிரிவில் மட்டுமல்லாமல், 10 மீட்டர் ஏர் பிஸ்டலின் கலப்பு அணிப் பிரிவிலும் யஷஸ்வினி தேஸ்வாலுடன் பங்கேற்கிறார்.

வெற்றிக்குக் காத்திருக்கும் வீரர்கள்!

சௌரப் சௌத்ரி - துப்பாக்கி சுடுதல்

19 வயதுதான். ஆனால், வைக்கும் குறி தவறுவதே இல்லை. தங்கத்தைத் துண்டாக குறிவைத்துத் தூக்கிவிடுகிறார் சௌரப். கடந்த 3 ஆண்டுகளாக இவர் காட்டிவரும் கன்சிஸ்டன்ஸி பிரமிக்கவைக்கிறது. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றபோது ஒட்டுமொத்த நாடும் அதிசயத்து நின்றது. காரணம், இந்தியாவுக்காக இளம் வயதில் தங்கம் வென்றவர் என்ற சாதனையைப் படைத்திருந்தார். 2018 யூத் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர், இப்போது சீனியர் பிரிவிலும் கோதாவில் இறங்கத் தயாராகிவிட்டார். அதுவும் ஒன்றல்ல, இரண்டு! 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனி நபர் பிரிவில் பங்கேற்கும் சௌரப், கலப்பு அணிப் பிரிவில் மனு பாக்கருடன் இணைந்து களமிறங்குகிறார்.

வெற்றிக்குக் காத்திருக்கும் வீரர்கள்!

இளவேனில் வாலறிவன் - துப்பாக்கி சுடுதல்

இதுவரை தமிழக வீரர்கள் யாரும் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றதில்லை. ஆனால், இம்முறை அந்த வரலாறை மாற்றப்போகிறார் இளவேனில். 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் உலகின் நம்பர் 1. 2019-ல் அடுத்தடுத்து 2 தங்கப் பதக்கங்கள் வென்று உலக அரங்கில் தன்னை அறிவித்தவர், தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். கடலூரைப் பூர்வீகமாகக் கொண்ட இளவேனிலுக்கு 21 வயதுதான். ஆனால், ஒவ்வொரு தொடரிலும் முதிர்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ககன் நரங் இவருடைய குரு. பதக்கம் வெல்லும் வித்தையைக் கற்றுக்கொடுக்காமலா விட்டிருப்பார்!

வெற்றிக்குக் காத்திருக்கும் வீரர்கள்!

மனு பாக்கர் - துப்பாக்கி சுடுதல்

பாக்ஸிங், ஸ்கேட்டிங், டென்னிஸ் எனப் பல விளையாட்டுகளில் தேசிய அளவில் பதக்கங்கள் வென்ற மனு, 14 வயதில் துப்பாக்கியைத் தன் முக்கிய ஆயுதமாய் ஏந்தினார். அவர் துப்பாக்கியில் இருப்பதெல்லாம் பதக்கத்தை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்தான். இவரும் சௌரப் சௌத்ரியும் சேர்ந்துவிட்டால் தங்க மழைதான். எவ்வளவு பெரிய தொடராக இருந்தாலும், எவ்வளவு பெரிய எதிராளிகளாக இருந்தாலும் ஜஸ்ட் லைக் தட் டீல் செய்கிறார்கள் இந்த இரண்டு 19 வயது வீரர்களும். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனி நபர் பிரிவு, கலப்பு அணி மட்டுமல்லாமல் 25 மீட்டர் பிஸ்டல் போட்டி என 3 பிரிவுகளில் பங்கேற்கிறார். ஆன் எ ஹாட்ரிக்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism