Published:Updated:

`ஒரு ட்வீட்டுக்கு இத்தனை கோபமா... நான் உங்களை எதிர்க்கவில்லை மேரி கோம்!’- நிகத் ஜரீன் சொல்வதென்ன?

நிகத் ஜரீன் - மேரி கோம்
நிகத் ஜரீன் - மேரி கோம்

இதை அவர் தனிப்பட்ட விவகாரமாக எடுத்துக்கொள்வது அவரது விருப்பம். நான் நியாயமான தேர்வுக்காகப் போராடினேன்.

அடுத்த ஆண்டு, டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்றுப் போட்டிகள் பிப்ரவரியில் நடக்க உள்ளது. குத்துச்சண்டை போட்டியில், மேரி கோம் 51 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று விளையாடிவருகிறார். இதேபிரிவில் நிகத் ஜரீனும் பங்கேற்றுவருகிறார். டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு மேரிகோமை அனுப்புவதற்கு குத்துச்சண்டை சம்மேளனம் முடிவுசெய்திருந்தது. சம்மேளனத்தின் இந்த முடிவு, நிகத் ஜரீனுக்கு ஏமாற்றத்தை அளித்தது. `இருவரும் ஒரே பிரிவில் விளையாடிவருகிறோம். ஆனால், மேரி கோமுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது’ எனத் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

 மேரி கோம்
மேரி கோம்

இதைத்தொடர்ந்து ட்விட்டரில் இது தொடர்பாக கருத்து தெரிவித்தார், ``ஒலிம்பிக் போட்டியில் 23 தங்கம் வென்ற மைக்கேல் பெல்ப்ஸ் ட்ரைல் போட்டிகளில் பங்கேற்கிறார். நான் எந்த உதவியையும் எதிர்பார்க்கவில்லை. மேரி கோம் அல்லது எந்த வீராங்கனையாக இருந்தாலும் சரி, ட்ரைல் வைக்க வேண்டும்” என்றார் அதிரடியாக. இதைத்தொடர்ந்து 51 கிலோ எடைப் பிரிவில் மேரி கோம், நிகத் ஜரீன் இடையே தகுதிச் சுற்று போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் மேரி கோம் 9-1 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

போட்டி முடிந்த பின்னர் இரு வீராங்கனைகளும் கைகுலுக்குவது குத்துச் சண்டையில் வழக்கம். ஆனால், நிகத் ஜரீனுடன் கைகுலுக்க மேரி கோம் மறுத்துவிட்டார். இது தொடர்பாகப் பேசிய மேரி கோம், ``ஒருவரிடம் மரியாதையை எதிர்பார்க்கும் முன் மரியாதை கொடுக்க வேண்டும்” என்றார். ஆனால், தனக்கு மேரி கோமின் செயல் அதிர்ச்சி தந்ததாக தெரிவித்தார் நிகத் ஜரீன்.

கடந்த இரு நாள்களாக பெரும் விவாதமாகியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக ஐ.ஏ.என்.எஸ் ஊடகத்திடம் பேசிய நிகத் ஜரீன், ``மேரி கோம் அப்படி நடந்துகொள்வார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. அது எனக்குப் புதிதாக இருந்தது. ட்விட்டரில் விளையாட்டுத்துறை அமைச்சரை டேக் செய்து நான் எழுதிய ஒரு கடிதத்துக்காக அவர் இத்தனை கோபத்தைக் காட்டுவார் என எதிர்பார்க்கவில்லை.

இதை அவர் தனிப்பட்ட விவகாரமாக எடுத்துக்கொள்வது அவரது விருப்பம். நான் நியாயமான தேர்வுக்காகப் போராடினேன். எனது போராட்டம் எல்லாம் இந்த சிஸ்டத்தை எதிர்த்துதானே தவிர மேரி கோமை எதிர்ப்பது எனது போராட்டத்தின் நோக்கம் கிடையாது. ஒவ்வொரு உலகத் தொடர்களுக்கு முன்னரும் நியாயமான தேர்வு இருக்க வேண்டும்.

நிகத் ஜரீன் - மேரி கோம்
நிகத் ஜரீன் - மேரி கோம்

மேரி கோம் ஒரு லெஜண்ட். அவர் எதற்கும் பயப்படத் தேவையில்லை. அவருக்கு முன்னால் நாங்கள் எல்லாம் சிறிய வீராங்கனைகள். அதனால் அவர் தானாக முன்வந்து தகுதிச் சுற்று விளையாடி எங்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்க வேண்டும். இப்போது அவர் என்னை வீழ்த்தி ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டார். இந்த முடிவில் அனைவருக்குமே மகிழ்ச்சி கிடைத்துள்ளது. இதுவே அவர் நேரடியாக தகுதி பெற்றிருந்தால் இந்த மகிழ்ச்சி எல்லோருக்கும் கிடைத்திருக்காது.

நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என அறிந்துகொள்வது அவசியம். நாம் எங்கே பின் தங்குகிறோம் என்பதையும் அறிந்துகொள்வதும் அவசியம். அதற்கு இதுபோன்ற போட்டிகள் வேண்டும். தேவைப்பட்டால் அதற்காக நமது குரலை எழுப்ப வேண்டும். நான் தோற்றுவிட்டேன். ஆனாலும் பலரின் இதயங்களை வென்றுவிட்டதாக நினைக்கிறேன். இந்தத் தோல்வி என்னை வீழ்த்தாது. இது எனக்கு முடிவும் கிடையாது” என்றார்.

`ஒரு ட்வீட்டுக்கு இத்தனை கோபமா... நான் உங்களை எதிர்க்கவில்லை மேரி கோம்!’- நிகத் ஜரீன் சொல்வதென்ன?

மேரி கோம் - நிகத் ஜரீன் விவகாரம் கடந்த இரு நாள்களாக பெரும் விவாதம் ஆகியுள்ளது. நிகத் ஜரீனின் வாதத்தில் நியாயம் உள்ளது என ஒரு தரப்பும், மேரி கோம் போன்ற சீனியர்களை ஜூனியர்கள் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என மற்றொரு தரப்பும் மேரி கோமுக்கு ஆதரவாகவும் கருத்துகள் பதியப்பட்டு வருகிறது. ஃபெடரேஷன் இந்த விவகாரத்தில் தலையிட்டு முற்றுப்புள்ளி வைத்து, விளையாட்டில் வீராங்கனைகளை கவனம் செலுத்த வைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

பின் செல்ல