Published:Updated:

விறகு தூக்கினார்... வெள்ளி வென்றார்!

மீராபாய் சானு
பிரீமியம் ஸ்டோரி
மீராபாய் சானு

எல்லா வெற்றியாளர்களுக்குப் பின்னாலும் இருக்கும் தோல்விக் கதை, போராட்டக் கதை இவருக்கும் உண்டு.

விறகு தூக்கினார்... வெள்ளி வென்றார்!

எல்லா வெற்றியாளர்களுக்குப் பின்னாலும் இருக்கும் தோல்விக் கதை, போராட்டக் கதை இவருக்கும் உண்டு.

Published:Updated:
மீராபாய் சானு
பிரீமியம் ஸ்டோரி
மீராபாய் சானு

ஐந்து வளையங்களுக்கு நடுவே தோல்விகளையும் ஏமாற்றங்களையும் பார்த்துப் பழகியிருந்த, ஒரு வெற்றிக்கு ஒரு வார காலம் காத்துப் பழகியிருந்த இந்தியர்களுக்கு, டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாளே வெற்றியை, வெள்ளியைப் பரிசளித்திருக்கிறார் மீராபாய் சானு!

விறகு தூக்கினார்... வெள்ளி வென்றார்!

49 கிலோ பளுதூக்குதல் போட்டியில் 202 கிலோ எடை தூக்கி இரண்டாவது இடம் பெற்றிருக்கிறார் இந்த மணிப்பூர் மங்கை. அந்த வடகிழக்கு மாநிலத்தை இந்தியாவின் ஆபரணம் என்று முன்னாள் பிரதமர் நேரு ஏன் சொன்னார், தெரியவில்லை. ஆனால், இந்தியாவுக்காக இன்னொரு விலைமதிப்பற்ற மாணிக்கத்தைக் கொடுத்திருக்கிறது அந்த மண்.

கடந்த காலங்களின் தோல்விகளை, அவமானங்களை, ஏமாற்றங்களை, நிகழ்காலத்தின் நிதர்சனங்களை, 130 கோடிப் பேரின் எதிர்பார்ப்புகளைத் தன் தோள்மீது சுமந்துகொண்டுதான், கைகளில் அந்த 202 கிலோ பளுவைக் கூடுதலாகத் தூக்கினார் மீராபாய்.

எல்லா வெற்றியாளர்களுக்குப் பின்னாலும் இருக்கும் தோல்விக் கதை, போராட்டக் கதை இவருக்கும் உண்டு. ஆனால், தோல்விக்கும் வெற்றிக்கும் இடையிலான மீராவின் பயணம்தான் நம்மை பிரமிக்கவைக்கிறது.

விறகு தூக்கினார்... வெள்ளி வென்றார்!

இன்று டோக்கியோவின் ஒலிம்பிக் போடியத்தில் வெள்ளிப்பதக்கத்தை உயர்த்திக் காட்டிய கைகள், 5 ஆண்டுகளுக்கு முன்பு ரியோவில் தடுமாறிக்கொண்டே இருந்தன. ஸ்னாட்ச், கிளீன் & ஜெர்க் என இரண்டு ரவுண்டுகளில் தலா மூன்று வாய்ப்புகள். அந்த ஆறு வாய்ப்புகளிலும் சேர்த்தே ஒருமுறைதான் பளுவைத் தூக்கினார். கிளீன் & ஜெர்க் பிரிவில் மூன்று வாய்ப்புகளையும் தவறவிட்டார். அத்தனை எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த ஏமாற்றத்துக்குப் பிறகு அடுத்த ஒவ்வொரு தொடரிலும் தன் உக்கிர முகத்தை உலகுக்குக் காட்டினார். தன் பலவீனங்களையே பலமாக மாற்றினார். புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. பல சாதனைகளுக்கு அருகே அவர் பெயர் எழுதப்பட்டது. சாதனைகளில் தங்கள் பெயர் பதியும்போது சிலருக்கு சற்று ஓய்வெடுக்கத் தோன்றும். குறைந்தபட்ச ஓய்வுக்குப் பிறகாவது தொடர்வோம் என்று நினைப்பார்கள். ஆனால், மீராபாய் சானுவுக்கு அந்த எண்ணமே எழவில்லை.

விறகு தூக்கினார்... வெள்ளி வென்றார்!

சாதனைப் பலகைகளில் தன் பெயருக்குப் பக்கத்தில் இருக்கும் எண்கள் அவருக்குப் போதுமானதாக இல்லை. அதை அதிகரிப்பது மட்டுமே அவரின் குறியாக இருந்தது. 2018 காமன்வெல்த் போட்டியில் 196 கிலோ தூக்கி தேசிய சாதனை படைத்தவர், அடுத்த ஆண்டு பட்டாயாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் 201 கிலோ தூக்கிப் புதிய சாதனை படைத்தார். 2020 கொல்கத்தா தேசிய சாம்பியன்ஷிப்பில் 203 கிலோ தூக்கினார். உஸ்பெகிஸ்தானில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் 205 கிலோ. தான் படைத்த சாதனையைத் தானே உடைத்துக் காட்டினார், அதுவும் இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை! அதையெல்லாம்விட, எந்த கிளீன் & ஜெர்க் பிரிவில் ரியோ ஒலிம்பிக்கில் அனைத்து வாய்ப்புகளையும் தவறவிட்டு வெளியேறினாரோ, அதில் இப்போது உலக சாதனையை வசப்படுத்திவைத்திருக்கிறார்.

மீராபாய் சானு இந்த 5 ஆண்டுகளில் கொஞ்சம் கூட ஓயவே இல்லை. அந்த உழைப்பின், வெறியின் நீட்சிதான் இந்த ஒலிம்பிக் வெள்ளி!

இனி மீரா ஒட்டுமொத்த தேசத்தாலும் கொண்டாடப்படுவார், பெண்களுக்கு நம்பிக்கை நாயகியாய், சிறுமிகளுக்கு ரோல் மாடலாகக் கூறப்படுவார். ஆனால், இங்கு அவர் பெற்றோர்களைப் பற்றிப் பேசவேண்டியதும் அவசியம்.

சிறுவயதில் விறகுக் கட்டைகளை எடுத்து வருவது அவர்களின் குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த ஒரு வேலை. மீராவின் அண்ணன் அந்தக் கட்டைகளைத் தரையிலிருந்து தூக்கவே கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தபோது, ஜஸ்ட் லைக் தட் அதைத் தூக்கிவந்திருக்கிறார் அந்தக் குட்டிப் பெண். அதைப் பார்த்து அதிசயப்பட்டவர்கள், 20 கிலோமீட்டர் தூரத்தில் இருந்த பளுதூக்குதல் அகாடெமிக்கு அனுப்பிவைத்துப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துகொடுத்தார்கள். ஐந்து குழந்தைகள் பெற்றெடுத்த ஏழை மணிப்பூர் தம்பதிக்கு, எதையும் காரணம் காட்டித் தங்கள் மகளின் திறமையை வீணடிக்க விருப்பமில்லை. அதுதான் இன்று தேசத்துக்கு ஒரு சாம்பியனை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

மீராபாய் சானுவின் வெற்றி உழைப்பாலும் முயற்சியாலும் மட்டும் உருவானதல்ல, பெற்றவர்களின் புரிதலாலும் அரவணைப்பாலும்தான்!

விறகு தூக்கினார்... வெள்ளி வென்றார்!
விறகு தூக்கினார்... வெள்ளி வென்றார்!
விறகு தூக்கினார்... வெள்ளி வென்றார்!

தடுமாறிய துப்பாக்கிகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் நாளே பதக்கப் பட்டியலில் இடம்பெற்றுவிட்டது இந்தியா. ஆனால், இந்தியாவின் முக்கியமான வீரர்கள் பலரும் அந்த நாளில் தோல்வியைத் தழுவினார்கள். பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் இளவேனில் வாலறிவன், ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் அபிஷேக் வர்மா ஆகியோர் இறுதிப்போட்டிக்கே தகுதிபெறத் தவறினர். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்து அசத்திய இளம் வீரர் சௌரப் சௌத்ரி, இறுதிப்போட்டியில் ஏழாவது இடமே பெற்றார். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இளம் வீராங்கனை மனு பாக்கர், துப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறால் இறுதிப்போட்டி வாய்ப்பை நழுவவிட்டார். துப்பாக்கியில் சிக்கல் ஏற்பட்டு, அதனால் 20 நிமிடங்களுக்கு மேல் வீணானதால், பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இருந்தாலும், 12-வது இடம் பிடித்தார் மனு.

விறகு தூக்கினார்... வெள்ளி வென்றார்!

வெள்ளி தங்கமாகுமா?

ஒலிம்பிக்கில் எப்போதும் வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை செய்யப்படுவது வழக்கம். 49 கிலோ பெண்கள் பளுதூக்குதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை ஹோ ஜீஹுயி டோக்கியோ நிர்வாகத்தால் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். முடிவு வரும்வரை டோக்கியோவிலேயே இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். ஒருவேளை அவர் ஊக்கமருந்து எடுத்திருப்பதாகத் தெரியவந்தால், அவர் பதக்கம் பறிக்கப்பட்டு, அதே பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு வழங்கப்படும். அந்த முடிவு எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்.