Published:Updated:

உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் வரலாறு படைப்பாரா மேரி கோம்?

மேரி கோம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

மேரி கோம்
மேரி கோம்

உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகள் ரஷ்யாவின் 'உலான் உடே' பகுதியில் நடைபெற்றுவருகிறது. அதில் பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் சார்பாக மேரி கோம் பங்கேற்றார். இந்தப் போட்டியின் காலிறுதிச் சுற்றில் கொலம்பியாவின் இன்கிரிட் வாலன்சியாவுடன் போட்டியிட்டார். தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த மேரி கோம் 5 - 0 என்ற புள்ளிக் கணக்கில் காலிறுதியில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறிய மேரி கோம், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

மேரி கோம்
மேரி கோம்

உலக குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியாவின் அடையாளமாகத் திகழும் மேரி கோம், பல பெண்களுக்கு முன்னுதாரணமாக இருப்பவர். திருமணம் முடிந்து மூன்று குழந்தைகளுக்குத் தாயான பின்பும்கூட, தொடர்ந்து வெற்றி பதக்கங்களைப் பெறுவதன் மூலம், தன் தாய்நாட்டுக்கும் பெண்களுக்கும் பெருமை சேர்த்தவர். ``என்னுடைய வெற்றியை ஒட்டுமொத்த பெண்களின் வெற்றியாகவே பார்க்கிறேன்" என்பதை வெற்றி மேடையில் உரக்கச் சொன்னவர்.

Vikatan

2001-ம் ஆண்டு, முதல்முதலாக உலக அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்ற மேரி கோம், அந்தப் போட்டியில் வெள்ளி பதக்கத்தைக் கைப்பற்றி இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமானார்.

மேரி கோம்
மேரி கோம்

அதன்பின், அடுத்தடுத்த ஆண்டுகளின் நடைபெற்ற உலக அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் அனைத்துமே மேரி கோமுக்கு வெற்றிப் படிக்கட்டுகளாகவே அமைந்தன. கடந்த ஆண்டு, நடந்த உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் தனது ஆறாவது தங்கத்தை வென்று, குத்துச்சண்டை போட்டிகளில் அதிக தங்கம் வென்றவர் என்ற சாதனையை கியூபாவின் ஃபெலிக்ஸ் சாவோனுடன் மேரி கோம் பகிர்ந்துகொண்டார்.

இது வரை 6 தங்கம், ஒரு வெள்ளி என முன்னிலையில் இருக்கும் மேரி கோம், இந்த முறையும் அரையிறுதியில் நுழையும் வாய்ப்பு பெற்று, தன்னுடைய அடுத்த பதக்கத்தையும் உறுதி செய்துள்ளார்.

மேரி கோம்
மேரி கோம்

இதன் மூலம் உலக குத்துச்சண்டை வரலாற்றில் 8 பதக்கங்களை வெல்லும் முதல் நபர் என்ற பட்டத்தைப் பெறுகிறார் மேரி கோம். இந்தப் போட்டில் அவர் தங்கம் வென்றார் எனில் 7 தங்கப்பதக்கங்களை வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பும் வந்து சேரும்.