Published:Updated:

மெஸ்ஸியின் முதல் கோப்பை!

மெஸ்ஸியின் முதல் கோப்பை!
பிரீமியம் ஸ்டோரி
மெஸ்ஸியின் முதல் கோப்பை!

முதல் போட்டியிலேயே அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் இதயக் கோளாறால் களத்திலேயே விழுந்தார்.

மெஸ்ஸியின் முதல் கோப்பை!

முதல் போட்டியிலேயே அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் இதயக் கோளாறால் களத்திலேயே விழுந்தார்.

Published:Updated:
மெஸ்ஸியின் முதல் கோப்பை!
பிரீமியம் ஸ்டோரி
மெஸ்ஸியின் முதல் கோப்பை!

உலகின் இரண்டு மிகப்பெரிய கால்பந்துத் தொடர்கள் அடுத்தடுத்து நடந்து முடிந்திருக்கின்றன. கால்பந்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் இங்கிலாந்தில் யூரோ 2020 தொடரும், கால்பந்தால் பிறந்த நவீன பிரேசிலில் கோபா அமெரிக்காவும் நடந்திருக்கின்றன. ரோமின் அரசர்கள் லண்டனில் மகுடம் சூட, தன் முதல் சர்வதேசக் கோப்பையை முத்தமிட்டிருக்கிறார் கால்பந்தின் சமகாலக் கடவுள் மெஸ்ஸி!

யூரோ கோப்பையின் 60-வது ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட, ஒற்றை நாட்டில் தொடரை நடத்தாமல் ஒட்டுமொத்த ஐரோப்பியக் கண்டத்திலும் போட்டிகளை நடத்த எண்ணியது ஐரோப்பியக் கால்பந்துச் சங்கம். பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டது. கொரோனா பாதிப்பால், கடந்த ஆண்டே நடக்கவேண்டிய தொடரை இந்த ஆண்டு தொடங்கினார்கள். 2021-ல் நடந்தாலும் யூரோ 2020 என்ற பெயரிலேயே நடத்தப்பட்டது.

நடப்பு சாம்பியன் போர்ச்சுகல், உலக சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன் ஜெர்மனி என 3 அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற, இந்தத் தொடர் உச்சபட்ச பரபரப்பைக் கொடுக்கும் என்று எதிர்பார்த்தனர். குரூப் ஆஃப் டெத்தில் இடம்பெற்றிருந்த அந்த 3 அணிகளும் காலிறுதிக்கே முன்னேற முடியாமல் மடிந்தன. நார்த் மெசடோனியா, பின்லாந்து அணிகள் தங்களின் முதல் தொடரில் பங்கேற்று சரித்திரம் படைத்தன. பின்லாந்து அணி தங்கள் முதல் போட்டியில் வெற்றியும் பெற்றது!

மெஸ்ஸியின் முதல் கோப்பை!

ஒருகட்டத்தில் ஒட்டுமொத்த உலகமும் டென்மார்க் பக்கம் நின்றது. முதல் போட்டியிலேயே அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் இதயக் கோளாறால் களத்திலேயே விழுந்தார். மருத்துவர்கள் வந்து CPR கொடுத்து அவரைப் பிழைக்கவைக்க, ஒட்டுமொத்த உலகமும் உறைந்துபோய் நின்றது. எரிக்சனின் இதயம் நின்ற அந்த ஒரு நொடி, ஒட்டுமொத்த டென்மார்க்கும் உயிர் பெற்றது. அடுத்தடுத்த போட்டிகளில் தங்களின் 200 சதவிகித உழைப்பைக் கொட்டினார்கள். முதலிரு போட்டிகளில் தோற்றிருந்தாலும், அரையிறுதி வரை முன்னேறி அனைவரின் அன்பையும் வென்றது அந்த அணி!

It’s Coming Home - இன்னும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், இம்முறை வீட்டின் வாசல் வரை வந்துவிட்டது கோப்பை. 55 ஆண்டுகளாக சர்வதேசக் கோப்பையை வெல்லாமல் தவித்த இங்கிலாந்து இம்முறை இறுதிப்போட்டி வரை வந்துவிட்டது. அற்புதமான இளம் படையைச் சிறப்பாகச் செதுக்கிக்கொண்டிருக்கிறார் பயிற்சியாளர் கேரத் சவுத்கேட். பெனால்டி ஷூட் அவுட்டில் சிறப்பாகச் செயல்பட்டிருந்தால் நிச்சயம் சரித்திரம் படைத்திருக்கலாம்.

யாருமே எதிர்பாராமல் உச்சபட்ச பெர்ஃபாமன்ஸைக் காட்டி ஐரோப்பாவின் சாம்பியனாக மகுடம் சூடியிருக்கிறது இத்தாலி. 2006 உலகக் கோப்பை வென்ற பிறகு அந்த அணி தொடர்ந்து வீழ்ச்சியையே சந்தித்தது. அடுத்த இரண்டு உலகக் கோப்பைத் தொடர்களிலும் குரூப் சுற்றோடு வெளியேறியவர்கள், 2018 தொடருக்குத் தகுதி பெறவே இல்லை. இந்நிலையில் பயிற்சியாளரை மாற்றினார்கள். ராபர்டோ மான்சினி - இத்தாலியின் கேம் ஸ்டைலை, அணுகுமுறையை, அடையாளத்தை மாற்றினார். நம்பர் 1 அணியான பெல்ஜியம், முன்னாள் சாம்பியன் ஸ்பெயின், உத்வேகம் மிகுந்த இங்கிலாந்து எனப் பெரிய அணிகளை அடுத்தடுத்து அடித்து கோப்பையை வென்றிருக்கிறது இத்தாலி. தொடர்ந்து 34 போட்டிகளாக தோல்வியே சந்திக்காமல் அசைக்க முடியாத அணியாக உருவெடுத்திருக்கிறது!

மெஸ்ஸியின் முதல் கோப்பை!

பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாமல் யூரோ நடந்து முடிய, சலனமே இல்லாமல் நடந்தது கோபா. மைதானத்தில் ரசிகர்கள் இல்லாதது ஒரு குறையென்றால், அர்ஜென்டினா, பிரேசில் போன்ற முன்னணி அணிகளுமே சுமாரான ஆட்டத்தைத்தான் வெளிப்படுத்தின. இருந்தாலும், பிரேசில் - அர்ஜென்டினா ஃபைனல் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது. தன் கரியரில் அர்ஜென்டினாவுக்காக மெஸ்ஸி அதுவரை கோப்பையே வென்றதில்லை என்பதால் இன்னும் விறுவிறுப்பு கூடியது. தேவதூதன் ஏஞ்சல் டி மரியா அடித்த கோல், மெஸ்ஸியின் அந்தக் கனவு நனவாகக் காரணமாக அமைந்தது. இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களுள் ஒருவரான மெஸ்ஸி அந்தக் கோப்பையைத் தொட்டுத் தூக்கியபோது ஒட்டுமொத்தக் கால்பந்து உலகமும் அவருக்காக ஆனந்தக் கண்ணீர் வடித்தது!

11 ஓன் கோல்கள் (Own Goals)

2020 யூரோவை ‘ஓன் கோல் யூரோ’ என்றே சொல்லலாம். இந்த ஒரு தொடரில் மட்டும் மொத்தம் 11 ஓன் கோல்கள் அடிக்கப்பட்டன. இதற்கு முன்பு நடந்த 15 தொடர்களிலும் சேர்த்து அடிக்கப்பட்டிருந்தது வெறும் 9 ஓன் கோல்கள்தான்.

மெஸ்ஸியின் முதல் கோப்பை!

சிறந்த வீரர் - கியான்லூயி டொன்னரும்மா

இத்தாலி கோல்கீப்பர் டொன்னரும்மா, இந்தத் தொடரின் மிகச் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். அரையிறுதியின் பெனால்டி ஷூட் அவுட்டில் ஒரு ஷாட்டைத் தடுத்தவர், இறுதிப் போட்டியில் இரண்டு ஷாட்களைத் தடுத்துத் தன் அணியை வெற்றிபெற வைத்தார்.

மெஸ்ஸியின் முதல் கோப்பை!

கோபாவின் ஆல் இன் ஆல் மெஸ்ஸி தான்!

கோபா அமெரிக்கா 2021 தொடரில் அதிக கோல்கள் அடித்தது, அதிக அசிஸ்ட்கள் செய்தது என இரண்டு பட்டியலிலும் முதலிடம் மெஸ்ஸிக்குத்தான். டாப் கோல் ஸ்கோரர், தொடரின் சிறந்த வீரர் என இரண்டு விருதுகளையும் அவரே வென்றார்.

மெஸ்ஸியின் முதல் கோப்பை!

கோல்டன் பூட் கிறிஸ்டியானோ ரொனால்டோ

ஐரோப்பாவில் டாப் ஸ்கோரராக விளங்கியிருப்பது நவீன கால்பந்தின் இன்னொரு கடவுள் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 4 போட்டிகளில் 5 கோல்கள் அடித்து அசத்தினார் ரொனால்டோ.

மெஸ்ஸியின் முதல் கோப்பை!

சிறந்த இளம் வீரர் - பெட்ரி

ஸ்பெயின் அணியின் 18 வயது பெட்ரி, இந்தத் தொடரின் சிறந்த இளம் வீரராகிறார். பார்சி லோனா ரசிகர்கள் அவரை `குட்டி இனி யஸ்டா’ என்கிறார்கள். அதை இந்தத் தொடரில் நிரூபித்தும்விட்டார் அவர்!